Published:Updated:

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

கரு.முத்து படங்கள் : கே.குணசீலன்ஒருங்கிணைப்பு: க.தங்கபாபு, முத்துப்பேட்டை.

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

கரு.முத்து படங்கள் : கே.குணசீலன்ஒருங்கிணைப்பு: க.தங்கபாபு, முத்துப்பேட்டை.

Published:Updated:
##~##

''பொங்கல் என்றால் என்னென்ன செய்வீர்கள்?''

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பில் ஆசிரியை கனிமொழி இப்படிக் கேட்டதுதான் தாமதம், போட்டிபோட்டுக்கொண்டு ஆளாளுக்கு 'இதைச் செய்வோம், அதைச் செய்வோம்’ என்று பட்டியல் போட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொங்கல் என்பது உழவர்களின் திருநாள். உழவுக்கு உதவிய சூரியன், காளைகள் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாட வேண்டும்’ என்று ஆசிரியை சொன்னதும், மாணவர்கள் மத்தியில் கிசுகிசுப்பு.

''என்ன சத்தம்?'' என்று ஆசிரியை கேட்க, ''பொங்கல் திருநாளை நாம் உழவர்களாகவே மாறிக் கொண்டாடினால் என்ன?'' என்று மாணவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

மறுநாள் வெள்ளை வேட்டி, சட்டை, தலைப்பாகையுடன் மாணவர்களும், கண்டாங்கிச் சேலை, தலையில் பக்கவாட்டுக் கொண்டை போட்டு, அதில் பூச்சரம் சுற்றி அச்சு அசல் உழவர் வீட்டுப் பெண்மணிகளாக மாணவிகளும் ஆஜர்.

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

''லேய், உனக்கு வேட்டி, சட்டை சூப்பர்'' என்றுஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டார்கள். தலைப்பாகை மட்டும் அவ்வப்போது அவிழ்ந்துகொள்ள, ஆள்மாற்றிஆள்அதைக் கட்டிக்கொண்டார்கள்.

''மொதல்ல எல்லோரும் வயலுக்குப் போறோம். அங்க அறுப்பு (அறுவடை) நடக்குது. களத்துல நெல்லைக்கொண்டாந்து சேர்த்துட்டு, அப்புறம் ஸ்கூலுக்கு வந்து மாட்டுக்குப் பொங்கல் படைக்கிறோம்'' என்று அவர்களின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவானது.

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

சற்று நேரத்தில் இளம் உழவர் படை வயல்காட்டில் இறங்கியது.

இயற்கை கொஞ்சும் சூழலில் வளர்ந்து முற்றிநின்ற தன் நெல் வயலில் இவர்களுக்காக காத்துநின்ற விவசாயி கோவிந்தராஜ், எல்லோரையும் பாசத்தோடு வரவேற்றார். அவர்கள் கையில் அறுப்பு அருவாளைக் (கதிர் அறுவாள்) கொடுத்து, எப்படிக் கதிரைஅறுப்பதுஎன்று சொல்லிக்கொடுத்தார்.

அறுவடை ஆரம்பித்தது. ''யேய், என்னாடி உன்னைய அறுக்கச் சொன்னா நண்டு பிடிக்கிறே'' என்று ஜோன்ஸ் மார்டினாவை முகினாதேவி வாரினாள். ''என்னால இதுதான் முடியும், நீ போ'' என்று முகத்தைத் தோள்பட்டையில் இடித்து அழகு காட்டினாள் ஜோன்ஸ் மார்ட்டினா.

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

இன்னொரு குழு, அறுத்த கதிர்களைக் கட்டாகக் கட்டும் வேலையில் இறங்கியது. நான்கு  மாணவிகள் அள்ளிவந்து தர, அதை இரண்டு மாணவர்கள் வாங்கிக் கட்டாகக் கட்டினார்கள். ''டேய் நல்லா இறுக்கிக் கட்டுறா'', ''போதும், இதுக்கு மேலவெச்சுக் கட்டுனாத் தூக்க முடியாதுடா'' என்று இளம் விவசாயிகளின் வேலைக் குரல்கள் ஒலித்தன.

பிறகு மாணவ, மாணவிகள் ஒய்யாரமாக கதிர்க் கட்டுகளைத் தலையில்வைத்துத் தூக்கிப் போக,  நிஜ விவசாயிகள் அந்த அழகில் மயங்கித் தங்கள் வேலையை மறந்து பார்த்தார்கள்.

''இந்த நெல்லின் பெயர் என்ன?'' என்று கேட்டான் வெங்கடேஷ். ''இது பி.பி.டி. என்ற பாப்பட்லா ரகம்'' என்றார் கோவிந்தராஜ். இப்படியே உரம், பூச்சி மருந்து, பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விதம் எனப் பல கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.  

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

கட்டுகள் களம் சேர்ந்து, அது டிராக்டர் மூலம் அடித்து நெல்லாக மாற்றப்பட்டு, தூற்றி, சாலையில் கொட்டிக் காயவைத்துவிட்டுதான் ஓய்ந்தது இளம் உழவர்கள் படை. மதியம் வெகு நேரம் ஆகிவிட, எல்லோரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள்.

மதிய உணவை முடித்துவிட்டுத் திரும்பவும் சபை பள்ளி மைதானத்தில் கூடியது. பொங்கல் பானை தயாராக இருக்க, வித்யாவும், கோபிகாவும் பக்கத்துக்கு மூன்றாக, மூன்று பக்கமும் செங்கல் அடுக்கி அடுப்பு தயார்செய்து, தீ மூட்டிப் பொங்கல்வைக்க ஆரம்பித்தார்கள். அரிசி கொதிவந்ததும் பதம் பார்த்து

குட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் !

வெல்லம், நெய் சேர்த்தார்கள். பொங்கல் பொங்கி வரும் சமயத்தில்... சுட்டிகளின் 'பொங்கலோ பொங்கல்’ கோஷம் காதைப் பிளந்தது. மாணவன் ஸ்ரீராமும், சிவபாலாஜியும் உழவு மாடுகளை ஓட்டிவந்தார்கள். அதில் சின்ன விவசாயி ஸ்ரீராம், மாட்டிடம் ரொம்பவும் அன்னியோன்யமாகப் பேச, ''என்னடா ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டீங்களோ?'' என்று மற்றவர்கள் கிண்டல் அடித்தார்கள்.

முன்னதாக மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டுவைத்து, மாலைபோட்டு இருந்தார்கள் அஸ்வின் செல்வாவும், பிரவீனும். பொங்கல் தயாரானதும், இலையில்வைத்து தேங்காய் உடைத்தார்கள். சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்கினார்கள்.

அடுத்து, மாடுகளுக்குப் பொங்கலும் வாழைப் பழமும் தரும் நிகழ்ச்சி. நான், நீ எனப்  பெரிய போட்டியே உருவானது. இறுதியில் கோபிகாவும் பிரவீனும் மாடுகளின் வாய் அருகே பொங்கலைக் கொண்டுபோனதும், அவை தானாக அதை வாங்கிக்கொண்டன.

''நீங்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகையை மாடு முழு மனதோடு ஏற்றுக் கொண்டதற்கான அர்த்தம் இது'' என்றார் பள்ளியின் தாளாளர் சாமிநாதன்.

பொங்கல் சாப்பிட்ட சந்தோஷத்தில் இருந்த காளைகளை வண்டியில் பூட்டியதும் சுட்டிகள் ஓடிப்போய் ஏறினார்கள். உற்சாகத்துடன் மாட்டு வண்டி சவாரி ஆரம்பமானது.

 சரஸ்வதி வித்யாலயா பள்ளி 50 மாணவர்களுடன் 1991-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 1500 மாணவர்கள் படிக்கிறார்கள். 60 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஆர்.சாமிநாதன் மேனேஜிங் டிரஸ்டி மற்றும் முதல்வராகவும், வெங்கட்ராமன், டிரஸ்டி மற்றும் தாளாளராக இருக்கிறார். 10-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் பள்ளியாகவும் அதிகமான பாடங்களில் 100-க்கு 100 வாங்கும் பள்ளியாகவும்  விளங்குகிறது. ஹிந்தி தேர்வில் உயர் கிரேடு வாங்குவதில் முதல் இடம் இந்தப் பள்ளி மாணவர்களுக்குத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism