Published:Updated:

பாடம் படிக்கும் மாடிச் செடிகள் !

மா.நந்தினி, செ.சிவபாலன்

பாடம் படிக்கும் மாடிச் செடிகள் !

மா.நந்தினி, செ.சிவபாலன்

Published:Updated:
##~##

விளைநிலங்கள் வீடுகளாக மாறும் காலம் இது. பசுமையின் அவசியத்தையும், இயற்கை உரங்களின் நன்மையையும் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குப் போதிக்கிறது, சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி.

''எங்கள் பள்ளி மாடியில் ஒரு நந்தவனமே இருக்கு'' என்று அழைத்துச் சென்றார், பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு. அங்கே மொட்டை மாடியில், மதிய வெயிலின் வெப்பம் துளிகூடத் தெரியாத அளவுக்கு குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நிலத்தில் வளரும் செடிகளையே மிஞ்சும் வகையில் வெண்டை, கொத்தவரை, சோளம், காராமணிப் பயறு, முள்ளங்கி எனச் செடிகளின் அணிவகுப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கே வந்த சில மாணவிகள்... தேவையற்ற செடிகளை அகற்றுவது, பூச்சி உள்ள இலைகளைக் கிள்ளிப் போடுவது, மண் சாக்குகளின் தரத்தைப் பார்ப்பது எனப் பொறுப்புடன் வேலையில் இறங்கினார்கள்.

பாடம் படிக்கும் மாடிச் செடிகள் !

''இந்த மாடித் தோட்டத்தைத் தினமும் வந்து பார்த்துப்போம். முக்கியமா ஆடு, மாடுகளின் சாணம், வேப்பங்கொட்டை கலந்த இயற்கை உரத்தையே பயன்படுத்துகிறோம். வீட்டில் அம்மா சமையலுக்குக் காய் அறியும்போது தூக்கிப்போடும் கழிவுகளைச் சேகரித்து எடுத்துவருகிறோம். இங்கே ஏற்பட்ட ஆர்வத்தில், எங்க வீட்டு மாடிகளிலும் தோட்டம் அமைச்சு இருக்கோம். மற்ற பள்ளிகளில் படிக்கும் நண்பர்கள் நிறையப் பேர் எங்களைப் பார்த்து இதே மாதிரி வளர்க்கிறாங்க'' என்றார்கள்.

இதுபற்றிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு கூறும்போது, 'ஒவ்வொரு பள்ளியிலும் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் என இருப்பதைப் போல எதிர்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய வழியை அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளியின் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆரம்பித்ததுதான் இந்த மாடித் தோட்டம். இதை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் தாவரங்களின் வளர்ப்புப் பற்றியும், இயற்கை உரங்களினால் ஏற்படும் நன்மை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். சில மாணவர்கள் ஆர்வத்துடன் விதைகள், உரங்கள் எனக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். எங்களின் தோட்டத்தைப் பார்த்து பள்ளிக்கு அருகில் இருப்பவர்களும், முன்னாள் மாணவர்களும் தங்கள் வீடுகளில் இதேபோல் தோட்டம் அமைத்து இருப்பதை எங்களுக்கான வெற்றியாகவே நினைக்கிறோம்'' என்கிறார் பெருமிதத்துடன்.

பள்ளியின் மொட்டைமாடியை இரு பகுதிகளாகப் பிரித்து விளைச்சல் செய்யப்படுகிறது. ஒரு சுற்றுக்கு 200-க்கும் மேற்பட்ட சாக்குப்பைகளில் செடிகள் வளர்க்கப்படுகின்றன.  அவரை, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, ஒரு பகுதியிலும் காராமணி, சிவப்பு முள்ளங்கி, பச்சைமிளகாய், தக்காளி ஆகியன ஒரு பகுதியிலும் பயிரிடப்படுகின்றன. மழை மற்றும் பனிக் காலங்களில் முட்டைக்கோஸ் போன்ற தாவரங்களும் பயிரிடப்படுகின்றன. இப்படி ஒரு வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மாற்றி மாற்றிப் பயிரிடப்படுகின்றன.

பாடம் படிக்கும் மாடிச் செடிகள் !

அறுவடை என்பது ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றவாறு காலங்கள் மாறுபடும். கொத்தவரை, வெண்டை போன்ற காய்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாளும், காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை அவற்றின் முதிர்வைப் பொருத்தும் அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் செம்மண், ஆட்டுப் புழுக்கை எனப் பாதிக்குப் பாதி கலந்து, சாக்குப்பையில் நிரப்பப்பட்டு, பதப்படுத்திய பிறகே செடிகள் நடப்படுகின்றன.

ஒரு நாளைக்கு அறுவடை செய்யப்படும் காய்கறியின் விலை, சந்தை அளவில் 150 ரூபாய்க்கும் மேலாக இருக்கும். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களிடம் விற்கப்படுவதால், சந்தையைவிட பாதி விலையில் விற்கப்படுகிறது. விருப்பம் உள்ள பெற்றோர்களும் சில நேரங்களில் பள்ளிக்கு வந்து காய்களை வாங்கிச் செல்கிறார்கள்.

சற்று நேரத்தில் பள்ளியிலே சந்தை ஆரம்பித்தது. முள்ளங்கி, அவரைக்காய், கொத்தவரை என மாடித் தோட்டத்தில் பறித்த காய்களைச் சுற்றி நிறைய ஆசிரியர்கள் கூடினார்கள். அவர்களுக்கு மத்தியில் தலைமை ஆசிரியர்.   ஆசிரியர்கள் ஏலம் பேசிக் காய்களை வாங்கினார்கள்.

பாடம் படிக்கும் மாடிச் செடிகள் !

''இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைவித்த இந்தக் காய்களைச் சாப்பிடும்போது, சத்து மட்டும் இன்றி தனி மணமும் சுவையும் கிடைக்கிறது. நீண்ட நாட்களாக நானும் மாடித் தோட்டம் அமைக்க நினைக்கிறேன். ஆனால் வாடகை வீட்டில் இருப்பதால் முடியவில்லை. இதற்காகவே கூடிய சீக்கிரம் ஒரு மாடிவீடு கட்ட வேண்டும்'' என்கிறார் சாரதா என்ற ஆசிரியை.

மாடித் தோட்டம் தவிர, பள்ளியின் நுழைவு வாயிலிலும் பூச்செடிகள், மரங்கள் எனப் பசுமையுடன் இருக்கிறது. அங்கே இருந்த ஓர் அறிவிப்புப் பலகை நம்மைக் கவர்ந்தது.

பூக்களைப் பறிக்காதீர்... அவை செடிகளிலே சிரித்துவிட்டுப் போகட்டும் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism