##~##
து
ணைத் தலைமை ஆசிரியை, அறிவியல் ஆசிரியை, என்.சி.சி. பொறுப்பாளர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் என ஜெய்சீலி டீச்சரின் தகுதிகள் நிறைய. கடலூர் மாவட்டம், நெய்வேலி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இவரைப் பற்றி ஆர்வத்துடன் சொல்கிறார்கள் மாணவிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரியதர்ஷினி: ''பாடம் சம்பந்தமா மட்டும் இல்லாம, எங்களோட தனிப்பட்ட பிரச்னைகளையும் நாங்க ஜெய்சீலி மிஸ்கிட்டதான் சொல்வோம். அவங்க நல்ல ஃப்ரெண்டு. வெளியூருக்கு கேம்ப் போகும்போது ஜெய்சீலி டீச்சர் வர்றாங்கனு தெரிஞ்சா, எல்லோரின் வீட்டிலும் மறுக்காம அனுப்பிவைப்பாங்க. எங்களைப் பற்றி விசாரிக்க, பேரன்ட்ஸ் இவர்கிட்டதான்  வருவாங்க.''

கலையரசி: ''நான்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட். ஆனா, நான்  கிரவுண்டு பக்கமே போக மாட்டேன். ஜெய்சீலி மேடம்தான் 'எல்லாவற்றிலும் நீ பெர்ஃபார்ம் பண்ணி ஃபர்ஸ்ட்டா வரணும்’னு சொல்லிச் சொல்லியே என்னை டேக்வாண்டோவில் சேர்த்துவிட்டாங்க. இப்ப நான் டேக்வாண்டோவிலும் பரிசு வாங்கி இருக்கேன். என்னை மாதிரியே நிறையப் பேருக்கு படிப்பு ப்ளஸ் விளையாட்டில் ஆர்வம் ஜெய்சீலி டீச்சர்தான்''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

சுருதி: ''ஜெய்சீலி மிஸ் எங்களுக்கு ஒரு மருத்துவர் மாதிரி. அவங்க அறையில் எப்போதும் ஒரு ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கும். யாருக்காச்சும் அடிபட்டா, உடம்பு சரியில்லைனா அவங்ககிட்டதான் போவோம். என் தோழி ஒருத்திக்கு காலில் சுடுதண்ணி ஊத்திருச்சு. அவங்க வீட்ல ஏதேதோ பண்ணியும் சரியாகலை. எங்க மேடம்தான் அவளை டாக்டரிடம் கூட்டிட்டுப் போய்ச் சரியாகவெச்சாங்க.''

கவிதா: ''எனக்கு அவங்க அறிவியல் டீச்சர். எங்களுக்கு ஏதாச்சும் புரியலைனா, அதை எத்தனை முறை வேணும்னாலும் நடத்துவாங்க. சில பகுதிகளைத் தொடர்ந்து ஒரு வாரம்கூட  நடத்தி இருக்காங்க. முதல் மதிப்பெண் வாங்கினாலும் 'விடாம படி’னு உற்சாகப்படுத்துவாங்க. வகுப்பில் யாரையும் படிக்காதவள்னு சொல்லவே மாட்டாங்க. 'எல்லாராலும் முடியும்’னு நிறைய உற்சாகம் கொடுப்பாங்க. அவங்க பாடத்தில் நாங்க எல்லாருமே நல்ல மார்க் எடுப்போம்.''

அஜிதா: ''நாங்க வீட்டில் சொல்லாத விஷயத்தைக்கூட எங்க மிஸ்கிட்டதான் சொல்வோம். எங்களில் பலர் கிராமத்தில் இருந்து படிக்க வர்றோம். அதனால், எங்க வீட்டில் பெரிசா விவரம் தெரியாது. எங்களுக்கு மிஸ்தான் எல்லாமே. ஒரு நாள் என் தோழிக்கு அடிப்பட்டு காலில் ரத்தம் வழிஞ்சுது. நாங்க எல்லாரும் ரத்தத்தைத் தொடத் தயங்கினோம். ஜெய்சீலி மிஸ் ஓடிவந்து அவளோட காயத்தைக் கழுவி மருந்து போட்டாங்க. இப்படி அவங்களோட அக்கறையைப் பற்றி நிறையச் சொல்லலாம்.''

-ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

''எந்த ஒரு சின்ன விஷயத்திலும் மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதுதான் சந்தியாவின் சிறப்பு.'' கடலூர் வேணு கோபாலபுரம், ஸ்ரீவரதம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தியா பற்றி அவளது ஆசிரியர்கள் சொல்கிறார்கள்...

நா.கன்னியா விஜயலட்சுமி (ஆங்கில ஆசிரியை): ''ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் உள்ள மாணவி. எந்த வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாமல் படிக்க மாட்டாள். வகுப்பில் புதுப்புது வார்த்தைகள் கேட்டு, மற்ற மாணவிகளின் அறிவுத்திறனுக்கும் உறுதுணையாக இருப்பாள். எப்போதும் துடிப்புடன் இருப்பாள். எங்கள் பள்ளி அகராதியில் சந்தியாவுக்கு அர்த்தம் 'டெடிகேஷன்’. அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு எதையும் செய்வாள்.''

ஜெ.சுலோச்சனா (தமிழ் ஆசிரியை): ''வகுப்பில் யாரெல்லாம் சுமாராகப் படிக்கிறார்களோ, அவர்களை வெவ்வேறு குழுக்களாக உருவாக்கி, சக மாணவிகளைவைத்தே சிறப்பு வகுப்பு நடத்துவாள். இதன் மூலம் எல்லோரையும் நல்ல மதிப்பெண் வாங்கவைத்தாள். சக மாணவர்களின் படிப்பு மீதும் அக்கறை இருக்க வேண்டும் என்பதற்கு சந்தியா ஓர் உதாரணம்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

கி.அமிர்தராணி (கணித ஆசிரியை): ''எதையுமே சகிப்புத்தன்மையோடு செய்வதும், விட்டுக்கொடுப்பதும்தான் சந்தியாவின் ப்ளஸ் பாயின்ட். எல்லாரிடமும் அன்போடு பழகுவதால், சந்தியாவுக்கு நண்பர்கள் அதிகம். எல்லாமே தனக்குத்தான் வேணும்கிற மனோபாவம் கிடையாது. எல்லாத்தையுமே பகிர்ந்துக்க நினைக்கிற மனப் பக்குவத்தை அவளிடம் இருந்து கத்துக்கலாம்.''

பி.ரா.ஹெலன் (ஜே.ஆர்.சி.ஆசிரியை): ''எந்த ஒரு கேம்ப் நடத்தினாலும் சந்தியா முதல் ஆளாக வந்து நிற்பாள். நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஐடியாக்களைத் தருவாள். நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அவளது எண்ணம், நிச்சயம் அவளைப் பெரிய ஆளாக ஆக்கும்.''

மா.சண்முகவள்ளி (அறிவியல் ஆசிரியை): சந்தியா ஹாஸ்டல் மாணவி. அங்கே இருக்கும் மாணவிகளுக்கும் இவள்தான் டீச்சர். யாராவது சண்டைபோட்டுக்கிட்டா, அதைத் தீர்த்துவெச்சுட்டுதான் மறு வேலை பார்ப்பாள். ஹாஸ்டல் மாணவிகள் ஒற்றுமைக்கு இவள்தான் முக்கியக் காரணம்.''

த.பழனி (தலைமை ஆசிரியர்): ''தன்னடக்கமும், பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மையும்தான் உயரிய பண்புகள். இவை சந்தியாவிடம் நிறையவே இருக்கின்றன. தன்னைப்போலவே மற்ற மாணவிகளையும் சிறந்தவளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதுதான் சந்தியாவை குட் ஸ்டூடன்ட்டாக உயர்த்தி இருக்கிறது.''

- க.பிரபாகரன் படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism