##~##

'வாழ்க்கை என்பது ஒரு சைக்கிள் சவாரியைப் போன்றது. வெற்றிச் சிகரம் தொட, சமன்பாட்டுடன் சளைக்காமல் சவாரி செய்தல்  அவசியம்'' என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

கையெழுத்துப் பயிற்சியும் அது போன்றதே. சரியான முறையில் பேனாவைப் பிடித்து, இங்கே குறிப்பிடும் விஷயங்களை உள்வாங்கி  தொடர்ச்சியாகப் பயின்று வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிரெழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர் மெய் எழுத்துகள் 216, ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 எழுத்துகளையும் எழுதிப்  பழக வேண்டுமே... என்று பயப்பட வேண்டாம். இந்த 40 எழுத்துகளைப் பயிற்சிசெய்தாலே போதுமானது.

தமிழ் எழுத்துகள் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து புதிய எழுத்துகளை உருவாக்குகின்றன. இதில் துணை எழுத்துகள் எனப்படும் கொக்கி, கொம்பு, கால், சுழி ஆகியவை அடுத்தடுத்து நமக்குப் பயன்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் இவைகள் தனித்தனியாக இருந்துவந்த காலத்தில், 'ஷிப்ட்’ போன்ற விசைகளை ஒரு கையால் அழுத்தியவாறே பயன்படுத்தும் சிரமம் இருந்தது. இன்று கணினி மயமாக்கப்பட்ட தட்டச்சில் இவை எளிதாக மாற்றப்பட்டுவிட்டன. சில எழுத்துகள் சீர்திருத்தம் காரணமாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய வடிவமும் பெற்றுவிட்டன. உதாரணமாக, 'னை’ என்கிற எழுத்து, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுழியுடன் யானை தும்பிக்கை போல் இருக்கும். தற்போது அது துணை எழுத்துடன் இருப்பதால், தட்டச்சுசெய்வது எளிதாகி இருக்கிறது.

முத்தான கையெழுத்து !

தமிழ் கிரந்த எழுத்துகளும் நாளடைவில் மறைந்துவருகின்றன. கிரந்த எழுத்துகளை வடமொழி எழுத்துகள் என்றும் அழைப்பார்கள். ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய பிறமொழி உச்சரிப்பைச் சரியான ஒளி வடிவில் பெற, கிரந்த எழுத்துகள் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. எழுத்து உருமாற்றம் தவிர கணிப்பொறி, கைப்பேசி, போன்ற கருவிகளில் தமிழைப் பயன்பாட்டில் கொண்டுவர பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுனிக்கோட் என்று சொல்லும் ஒருங்குறி, ஃபான்ட் எனப்படும் எழுத்துரு போன்றவற்றில் உலகம் முழுவதும் செயல்படும் கணிப்பொறிகளின் பயன்பாட்டுக்காக மாற்றங்களும், ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

'இளமையில் கல்’ என்பது முதுமொழி. ஆனால், கையெழுத்தைப் பொறுத்தவரை ஆர்வம் மிகுந்த எவரும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியும். எப்படி இருப்பினும் தமிழில் நாம் நாற்பது எழுத்துகளைப் பயிற்சிசெய்தால் போதும்.

முத்தான கையெழுத்து !

தமிழ் எழுத்துகளுக்கும் ஆங்கில எழுத்து களுக்கும் எழுதும் முறையில் வேறுபாடுகள் நிறைய உண்டு. தமிழ் எழுத்துகளைத் தடிமனாக எழுதும் பேனாவால் எழுத வேண்டும். ஆனால், ஆங்கில எழுத்துக்களுக்கு மெல்லியதாக எழுதும்  பேனாக்களைப் பயன்படுத்த வேண்டும். தமிழ் எழுத்துகள் உயரம் குறைந்து, அகலம் அதிகமாகத் தோற்றம் அளிக்கும். ஆங்கில எழுத்துகளோ, உயரம் அதிகரித்து அகலம் குறைந்து தோன்றும். எனவே, எந்த மொழியானாலும் அதன் நீள அகலங்களைச் சரியான அளவில் நாம் எழுதிப் பழக வேண்டும்.

தமிழ் மொழியில் கெ, கே, எழுத்துகள் 'க’-வை விட துணைக் கொம்பு எழுத்துக்கள் உயரமாக அமைய வேண்டும். உயிர் எழுத்துகளும் சற்று உருவ அளவில் உயரமாகத் தோற்றம் அளிக்கும். இவற்றை எல்லாம் உற்றுக் கவனித்து எழுதிப் பழக வேண்டும். அதே சமயம் வடிவங்களைச் சிதைக்கக் கூடாது. ஆங்கில எழுத்துகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து எழுதுவதைப் போல் தமிழ் எழுத்துகளை எழுதக் கூடாது.

முத்தான கையெழுத்து !

எந்த ஒரு பாடமும் எளிய பயிற்சியில் தொடங்கி, கடினமானவற்றை நோக்கி முன்னேறும். ஆகவே, தமிழ் எழுத்துப் பயிற்சியை அ, ஆ, இ... எனத் தொடங்கினால், சிறிய குழந்தைகள் எழுதச் சிரமப்படுவார்கள். ஆதலால் ட , ப, ய என உருவ ஒற்றுமையுடன் கூடிய எளிய வடிவ எழுத்துக்களை ஆரம்பப் பயிற்சியாக அறிமுகம் செய்த பின், கடின எழுத்துகளைப் பயிற்சி செய்வோம். இங்கே, சில எளிய தமிழ் எழுத்துகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளைக் கொடுத்து உள்ளோம். பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து செய்யும் பயிற்சியே நம் எதிர்கால வளர்ச்சி.

(எழுதுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism