##~##

குமார் 10-ம் வகுப்புப் படிக்கிறான். அவனது சித்தி, 6-ம் வகுப்புப் படிக்கும் தன் மகனுக்கு இலக்கணம் சொல்லித் தரச் சொன்னார். மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ மதிப்பெண் வாங்க வேண்டும் என்கிற தன் இலக்கை நினைத்துப் பார்த்தான் குமார். சித்தியிடம் 'முடியாது’ என்பதைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிவிட்டான்.

எப்பொழுது, யார், எதைக் கேட்டாலும் 'இல்லை’, 'முடியாது’ என்று சொல்லக் கூடாது என்பது நம்மில் பலரின் கருத்து. அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு என்று நினைக்கிறோம். ஆனால், பல நேரங்களில் இல்லை என்று மறுப்பதும் நல்லதே. நம்மிடம் உதவிகேட்டு வந்தவரிடம் எதற்காக இல்லை என்று சொல்ல வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் யோசியுங்கள். ஒருவர் நம் உதவியைத் தேடி வருகிறார் என்றால், அது அவரே எதிர்பாராத சூழலாக இருக்கும். அதை நாமும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டோம். அந்தக் காரியத்தைச் செய்ய ஒப்புக்கொண்டால், அது நமது திட்டமிடுதலைப் பாதிக்கும். அது மட்டும் இல்லை. நம் வேலையையும் கெடுத்துக்கொண்டு, பிறருக்காக எடுத்துக்கொண்ட வேலையையும் சொதப்பும்போது அவருக்கும் அது பாதிப்புதானே? நாம் முதலிலேயே முடியாது என்று சொல்லி இருந்தால்,  வேறு ஒருவர் மூலம் உதவிபெற்று இருப்பார் இல்லையா?

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

நம்மால் முடிந்த வேலையை ஒப்புக்கொள்வதில் தவறு இல்லை. முடியாதபோதும் ஒப்புக்கொண்டு,  தானும் கெட்டுப் பிறரையும் கெடுக்கும் வேலையைத் தவிர்ப்பது நல்லது. ஆனாலும் முகத்துக்கு நேராக மறுப்பது அவ்வளவு சுலபமாக வந்துவிடாது. நாம் ஏன் ஒரு விஷயத்தை மறுக்கத் தயங்குகிறோம்? அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

உங்களிடம் வந்தவரை வெறுமனே திருப்பி அனுப்ப விருப்பம் இல்லை. அது உங்கள் நேரத்தை வீணடித்தாலும் முடிந்தவரை உதவிசெய்ய நினைக்கிறீர்கள்.

யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிற, செய்கிற குணமே நல்லது என்கிற நம்பிக்கை. குறிப்பாக, நம்மைவிடப் பெரியவர்கள் சொல்வதைச்  செய்துகொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்.

நாம் உதவிசெய்ய மறுத்தால், மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்கிற பயம்.

மறுத்தால், உதவி கேட்டவர் கோபப்படுவார், உறவு முறிந்துவிடும் என்று நினைக்கலாம். இதனால் அவர் மூலம் நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய  வாய்ப்புகள் போய்விடுமோ என்கிற நினைப்பு.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

ஆனால், மேலே சொன்ன காரணங்கள் எல்லாமே நாமாக நினைத்துக்கொள்பவைதாம். 'முடியாது’ என்று சொல்வதாலேயே நீங்கள் கெட்டவர் ஆகிவிட மாட்டீர்கள். யாரும் உங்களை ஒதுக்கிவிடவும் மாட்டார்கள். ஏனெனில், அவர்களும் இதுபோன்ற சங்கடங்களைச் சந்தித்து இருப்பார்கள். அதனால், இல்லை என்று சொல்வதில் தவறே இல்லை. அதை எப்படிச் சொல்வது என்பதைக் கற்றுக்கொண்டால், மன வருத்தங்களில் இருந்து தப்பிக்கலாம்.

ஒருவர் ஓர் உதவி கேட்கிறார். உங்களுக்கு அதற்கு நேரம் இல்லை. ஆனால், அவரிடம் அதை எப்படிச் சொல்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் சொல்ல வேண்டியதை ஒரு தாளில் எழுதிப் பாருங்கள். 'என்னுடைய நேரத்தை இந்த இந்த விதத்தில் ஏற்கெனவே திட்டமிட்டு இருக்கிறேன். நீங்கள் சொல்கிற வேலையைச் செய்ய, எனக்கு இவ்வளவு நேரம் செலவாகக் கூடும்’ என்பதுபோல எழுதுங்கள். அந்தத் தாளை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்கத் தேவை இல்லை. அதை எழுதும்போதே உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்தத் தெளிவுடனேயே அவரிடம் மனக்கசப்பு வராமல் விஷயத்தை விளக்கிவிடலாம்.

நம்மிடம் ஒருவர் உதவி கேட்கும்போது, அதை மறுப்பதற்கான  காரணத்தை 'வழவழ கொழகொழ’ என்று நீட்டி முழக்க வேண்டாம். 'இப்போது இதைச் செய்ய என்னால் முடியாது’ என்று தெளிவாகச் சொல்லி, முக்கியக் காரணத்தை மட்டும் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

முகத்துக்கு நேராக 'முடியாது’ என்று சொல்வது சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும். இது மாதிரியான நேரங்களில் உங்களால் முடியாவிட்டாலும் வேறு யாரால் இதைச் செய்ய முடியும் என்பதை உதவி கேட்பவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். 'இந்த வேலையை என் அளவுக்கு நம்ம சுரேஷ் கூடச் செய்வான். அவன்கிட்டே வேண்ணா கேட்டுப் பாருங்களேன்’ என்று சொல்வதுகூட அவர்களுக்குச் செய்யும் உதவிதான். அது நீங்களே உதவி செய்ததைப்போலத்தான் கருதப்படும்.

இப்போது சொல்லுங்கள்... மேலே சொன்ன விஷயங்களை உங்களால் செய்ய முடியுமா? முடியாதா?

     (கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism