Published:Updated:

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

கே.கே.மகேஷ்

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

கே.கே.மகேஷ்

Published:Updated:
##~##

சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியால், மதுரை மகபூப்பாளையம் ஏரியாவே பரபரப்பானது. இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் போலவே கையில் துப்பாக்கி சகிதம், பக்கா யூனிஃபார்மில் கம்பீரமாக வலம் வந்தார்கள், அந்தப் பள்ளியின் சுட்டிகள்.

பள்ளி வளாகத்தில், 'இங்கே என்ன கூட்டம்? அவங்க அவங்க வகுப்புகளுக்குப் போங்க. அங்கே என்ன சண்டை? முட்டிக்கு முட்டி தட்டிடுவோம்' என்று அலப்பறை செய்துகொண்டு இருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இம்ரான் என்ற பொடியனோ ஒரு படி மேலேபோய், 'நான் ஸ்டூடன்ட் இல்லே... போலீஸ்' என்று யாரிடமோ பஞ்ச் டயலாக் அடித்துக்கொண்டு இருந்தான்.

அப்போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் உண்மையான காவல் துறை வாகனமும், அதைத் தொடர்ந்து அதிரடிப்படை வண்டியும் நுழைந்தது. மாணவர்கள் ஓடிப்போய், பட்டாலியன்போல் அணிவகுத்து நின்றது அவ்வளவு நேர்த்தி, கம்பீரம்.

காரில் இருந்து இறங்கிவந்தார், மதுரை மாநகரக் காவல் துறைத் துணை ஆணையர் (Deputy commissioner of police) திருநாவுக்கரசு. மாணவ எஸ்.பிக்கள், ஸ்மார்ட் சல்யூட் அடித்து அசத்தினார்கள். முதல் வரிசையில்  இருந்த அமிர்தாவிடம், 'நான் திருநாவுக்கரசு. காவல் துறைத் துணை ஆணையர்' என்று சொல்ல, 'நான் அமிர்தா ஐ.பி.எஸ்., 4-ம் வகுப்புப் படிக்கிறேன்' என்றாள்.  

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

'அப்படின்னா நீங்க என்னைவிடப் பெரிய அதிகாரி'' என்று சிரித்தவர், 'நீங்க எல்லாம் எதற்காக இந்த யூனிஃபார்ம் போட்டு இருக்கீங்க?' என்று  கேட்டார். 'சட்டத்தைக் காப்பாற்ற, பொதுமக்களைப் பாதுகாக்க, திருடர்களைப் பிடிக்க' என்று கலகலப்பாகத் தொடங்கியது கலந்துரையாடல்.

'காவல் துறையின் பணி, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டும் அல்ல, குற்றங்கள் நிகழும் முன்பே அவற்றைத் தடுப்பதும்தான்'' என்றார்.

'திருடர்களை எப்படி சார் சரியாக் கண்டுபிடிக்கிறீங்க?' -இது 5-ம் வகுப்பு ஷியாமளாவின் கேள்வி.

'குற்றவாளி எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும், ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடுவான். அது கைரேகையாக இருக்கலாம். ஆயுதமாக இருக்கலாம். அவன் பயன்படுத்திய  ஒரு பொருளாக இருக்கலாம். அதைவைத்துக் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம். அதேபோல, குற்றவாளிகளில் இரண்டு வகைகள் உண்டு. சிலர் ஒரே ஒரு முறை குற்றம் செய்துவிட்டுத் திருந்திடுவாங்க. இன்னும் சிலர் மறுபடி மறுபடி அதே தவறைச் செய்வார்கள். திருடுவதையே தொழிலாகவைத்து இருப்பார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அந்தக் குற்றத்தைப் பார்த்ததுமே இதை இவன்தான் செய்து இருப்பான் என்று யூகித்துவிடுவோம்' என்றார் டி.சி.

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

''போலீஸ் துறையில் நிறையக் கஷ்டப்பட வேண்டியது இருக்குமா சார்?' எனக் கேட்டாள் ஹர்ஷவர்த்தினி.

'நீங்கள் உண்மையிலேயே ஒரு விஷயத்தை விரும்பிச் செய்தால் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருக்காது. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால், ஹார்டு வொர்க்கையும் ஸ்மார்ட் வொர்க்காக மாற்ற முடியும்'' என்றார்.

''உங்களுடைய த்ரிலிங்கான அனுபவம் எது?' என்று கேட்டார் ஆயிஷா ஐ.பி.எஸ்.

'வீரப்பனைப் பிடிக்க யானை, புலி, பாம்புகள் இருக்கிற அடர்ந்த காட்டுக்குள் ஏழு வருடங்கள் இருந்ததுதான். நீங்க யாராவது காட்டுக்குப் போயிருக்கீங்களா? வாய்ப்பு கிடைச்சா உங்களை ஒரு நாள் காட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்' என்று சொல்ல, குஷியானார்கள் மாணவர்கள்.

'பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதைத் தடுக்க முடியாதா?' என்று ஒரு சுட்டி கேட்டாள்.

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

'முன்பு எல்லாம் கணவன் அடித்தால், எந்த மனைவியும் புகார் கொடுக்க முன்வர மாட்டாங்க. ஆனால், இப்போது பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து இருக்கிறார்கள். அதனால், துணிச்சலாகப் புகார் கொடுக்க வருகிறார்கள். நாங்கள் எல்லாப் புகார்களையும் பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம். பெண்களை எப்போது நாம் மதிக்கக் கற்றுக்கொள்கிறோமோ, அப்போதுதான் குற்றங்கள் குறையும். அதோடு, குழந்தைகளுக்கும் சட்ட விழிப்பு உணர்வு தேவை. எங்கே அத்துமீறல் நடந்தாலும் தைரியமாகத் தெரிவிக்கலாம்'' என்றதும், ''ஓ.கே. சார்'' என்று ஒரே குரலில் சொன்னார்கள்.

''உங்களோடு பேசினது எனக்கு ரொம்பச் சந்தோஷம். இன்னைக்கு இருந்து உங்க மனசில் ஐ.பி.எஸ். கனவை வளர்த்துக்கங்க. காலேஜ் போனாலும் இந்த லட்சியத்தை மறந்துடாதீங்க. வருங்கால மக்களின் பாதுகாப்பு உங்க கையில் இருக்கு. ஆல் தி பெஸ்ட்' என்று வாழ்த்தினார் துணை ஆணையர் திருநாவுக்கரசு.

அவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் !

சுட்டிகள் எல்லோரும் இப்போதே ஐ.பி.எஸ். ஆகிவிட்ட மிடுக்குடன் அவரிடம் கைகுலுக்கி விடைபெற்றனர்.

 மதுரையில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 27 ஆண்டுகளாகக் கல்விப்பணி ஆற்றி வருகிறது. தாளாளர் முத்துக்குமரன் மற்றும் உள்ள நிர்வாகிகள், இந்தப் பள்ளியைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். 'கல்வியோடு, சமூகப் பொறுப்புணர்வும், சிறந்த சேவை உள்ளமும்கொண்ட மாணவர்களை  உருவாக்குவதே எங்கள் லட்சியம்.  பரதம், ஓவியம், இசை, சிலம்பம் உள்பட 17 வகையான கலைகள் மற்றும் விளையாட்டுகளைச்  சொல்லிக் கொடுக்கிறோம். மாணவர்களின் படைப்புத் திறனை அதிகரிக்க, வால் மேகஸின் என்ற பெயரில் சுவர் நாளிதழ் ஒன்றையும் நடத்தி வருகிறோம்'' என்கிறார் பள்ளி முதல்வர் தேவசேனா.