##~##

'உங்களுக்கு சுத்தம் பிடிக்குமா, அசுத்தம் பிடிக்குமா?’ என்று கேட்டால், எல்லோருமே 'சுத்தம்’ என்றுதான் சொல்வோம்.

நன்றாகத் தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்யப்படாத டாய்லெட்டுக்குள் போக மாட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் வாசலில் நின்றுகொண்டு துப்பினால், அருவருப்பாக இருக்கும். தெருவில் குப்பையை இறைத்தவாறு செல்லும் குப்பை லாரியைக் கண்டு எரிச்சல் அடைவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி நம்மைச் சுற்றி இருப்பவை எல்லாம் சுத்தமாக இருக்க விரும்புகிறோம். ஆனால், நாம் அப்படி இருக்கிறோமா?

'நான் தினமும் குளிக்கிறேனே... துவைத்த ஆடைகளைத்தானே உடுத்துகிறேன்’ என்பீர்கள். ஆனால்,  சுத்தம் என்பது சாதாரணமான செயல்பாடாக இல்லாமல், நம் குணத்தோடு பின்னிப் பிணைந்து இருக்க வேண்டிய ஒன்று. சின்ன வயதிலேயே இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் அறை எப்படி இருக்கிறது? கட்டிலில் மெத்தை ஒரு பக்கமாகத் துருத்திக்கொண்டும், மெத்தை மேல் போர்வைகள் வாழைப்பழத் தோல் போலவும் கிடக்கின்றன. கட்டிலுக்குக் கீழே உங்கள் பாடப் புத்தகங்கள். புயலால் பாதிக்கப்பட்ட ஏரியா போல் இருக்கிறது. இதைச் சரிசெய்ய என்ன தேவை? இன்னொரு புயல் வரட்டும் என்று காத்திருக்கலாமா? பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க இப்போதே பழகவேண்டும். இப்போதைய பழக்கம்தான் வாழ்நாள் முழுக்கத் தொடரும்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

பள்ளியில் இருந்து வரும்போது எவ்வளவு களைப்பாக இருந்தாலும், ஷூக்களைக் கழற்றி அவற்றின் இடத்தில் வைக்கத் தவறக் கூடாது. பகல் முழுக்க உபயோகித்த அழுக்குக் கர்ச்சீஃபை மாலையில் முகம் கழுவியதும் உபயோகிக்கக் கூடாது. அதேபோல காலையில் எழுந்ததும் படுக்கையை மடித்துச் சுற்றிவைக்கும் பழக்கத்தை இப்போதே ஆரம்பியுங்கள். உங்கள் அம்மா ''இருக்கட்டும், நான் மடிச்சுக்கிறேன்'' என்று பாசத்தோடு சொன்னாலும், நீங்களே அதைச் செய்யுங்கள். அம்மாவின் முகத்தில் சந்தோஷம் பெருகுவதைப் பார்க்கலாம்.

அப்படியே கொஞ்சம் உள்ளே வாருங்கள். பாத்ரூம் கம் டாய்லெட். உங்கள் ஒரு நாளின் முதல் காலைக் கடன்களை முடித்து, குளியல் போடப்போவதும் இங்கேதான். இந்த அறை எப்படி இருக்கிறது? சுவரில் சீயக்காய்த் தூள் தீற்றல்கள். வழுக்கும் தரை, டூத் பிரஷ்களின் அருகிலேயே ஷாம்பூ, சோப்பு. இதை எல்லாம் இப்படி வைத்தது யார்? வேறு யார் நாம்தான்.

அந்தந்தப் பொருட்கள் அதனதன் இடத்தில் என்பதைக் கடைப்பிடிக்கத் தவறியதால், அறை தாறுமாறாக இருக்கிறது. இதை எல்லாம்  சுலபமாகத் தவிர்க்க முடியும். வீட்டிலேயே சகோதர, சகோதரிகள் இருந்தால், முறை வைத்துக்கொண்டு பிரஷ், சோப் எல்லாம் தனித்தனியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். சுவரில் இருக்கும் சீயக்காய்க் கறைகளைக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நீக்கலாம். குழாய்கள் சரியாக மூடி தண்ணீர் வீணாகாமல் இருக்கிறதா என்று கவனிக்கலாம். அதுவும் இப்போது டெங்கு காய்ச்சல் மிரட்டும் நிலையில் தண்ணீர் தேங்கலாமோ?

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

சமையல் அறையோ, பால்கனியோ, உணவு மேஜையோ எதுவாக இருந்தாலும் அங்கே இருக்கும் பொருட்களைக் கலைத்து களேபரம் செய்யக் கூடாது. வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்கக் கூடாது. சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அவரவரே எடுத்துச் சென்று கையோடு கழுவிவிடலாம். வீட்டில் தாத்தா பாட்டி இருந்தால், அவர்கள் சாப்பிட்ட தட்டையும் 'நான் எடுத்துட்டுப்போறேன்' என்று சொல்லிப் பாருங்கள், அவர்களைவிட சந்தோஷப் படுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கையைக் கழுவியதும் வாயை நன்றாகக் கொப்பளிப்பது சிறந்த பழக்கம். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் வாயை நன்றாகக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்கலாம். விசேஷ பற்பசைகளோ, கொப்பளிப்பான்களோ தேவையே இல்லை.

வீட்டில் மட்டும் அல்லாமல் வெளியில் போகும்போது, நமக்கு நாமே சில உறுதியான விதிகளைப் பின்பற்றலாம். பூங்காவுக்குப் போனால் தின்ற நொறுக்குத்தீனி உறையை அங்கேயே வீசுவது, பேருந்து அல்லது ரயிலில் போகும்போது உள்ளே இருந்து குப்பையை வெளியே போடுவது போன்றவை கூடவே கூடாது. அதிலும் சிலர் அங்கங்கே நின்றபடி அப்படி அப்படியே காறிக் காறித் துப்புவார்கள் பாருங்கள்... சகித்துக்கொள்ளவே முடியாது. அப்படி நாமும் செய்யலாமா? கூடவே கூடாது.

சுற்றுப்புறத் தூய்மை ஒரு புறம் இருக்க, நம் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். ஃப்ளூ காய்ச்சல் உள்ள ஒருவரைத் தொட்டுவிட்டு நாம் கண்ணையோ, மூக்கையோ தேய்க்கும்போது நமக்கு ஜலதோஷம் உண்டாகிறது. ஜலதோஷத்தை விடுங்கள், ஒரு வாரம் தொல்லைப்படுத்திவிட்டுப் போய்விடும். மஞ்சள் காமாலை, வைரஸ் தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற தீவிரமான நோய்களும் இதே முறையில்தான் பரவுகின்றன. எனவே, கைகளைக் கழுவுவது என்பது மிக முக்கியமானது.

சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியபோது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதைப் பற்றி அரசு செய்த விளம்பரங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கும். சரி, எப்போது எல்லாம் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்?

அழுக்கான பகுதி, நோயுற்ற மனிதர், செல்லப் பிராணிகள் போன்றவற்றைத் தொட நேர்ந்தால், கிருமிகள் உங்கள் கைகளில் தொற்றிக்கொள்கின்றன. இந்தக் கிருமிகள் உங்கள் கைகளிலும் நக இடுக்குகளிலும் பல்கிப் பெருகுகின்றன. இந்த நிலையில் உங்கள் கண்களையோ, வாயையோ, மூக்கையோ நீங்கள் தொட்ட மாத்திரத்தில் கிருமிகள் உங்கள் உடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்று வேலையை ஆரம்பித்துவிடும். எனவே, மேலே சொன்னதைப் போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம் கைகழுவிக்கொண்டால் தப்பு இல்லை. அதுசரி, கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்வது என்றால் எப்படி?

சிலர் குழாயை ஒரு விநாடி திறந்துவிட்டு கையைத் தண்ணீரில் நீட்டிவிட்டு, கை கழுவிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். அது தவறு. முதலில் உங்கள் கையில் தண்ணீரை விடுங்கள். பிறகு சோப் போடுங்கள். அது, திரவ சோப்பாக இருந்தால் சிறப்பு. டெட்டால் போன்ற திரவ சோப்புகளில் ஆன்ட்டிசெப்டிக் மருந்தும் கலந்து இருக்கும்.

மணிக்கட்டு வரை கை முழுக்க சோப் போடுங்கள். நகங்களுக்குக் கீழேயும் சோப் போட வேண்டும். இரண்டு கைகளையும் 10, 15 விநாடிகளுக்குத் தேயுங்கள். நுரை வரட்டும். கைகளை நன்கு அலசுங்கள். பிறகு சுத்தமான துண்டால் துடையுங்கள். இதற்குப் பெயர்தான் கைகளை நன்கு கழுவுவது என்பது.

இப்படி சுத்தத்திற்கு நாம் கைகொடுத்தால், ஆரோக்கியம் நம்மை என்றைக்கும் கை விடாது.

(கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism