##~##

மதுரை மாவட்டம், நரசிங்கம் ஊராட்சியில் உள்ள ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தி.கிருஷ்ணவேணி, தன் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கியது எப்படி?

நா.கௌரி (ஓவிய ஆசிரியை): 'கிருஷ்ணவேணி ரொம்பப் பொறுப்பான பொண்ணு. படிப்பில் இருக்கிற அக்கறை, ஆர்வம் ஓவியம் வரைவதிலும் இருக்கு. தவிர, சக மாணவிகளின் ஓவியங்களையும் மனதாரப் பாராட்டி ஊக்கப்படுத்துவாள்.'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீ.சுகுணா (கணித ஆசிரியை): 'வகுப்பில் ஆசிரியர்கள் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை அப்படியே அழகாக வெளிப்படுத்துவாள். எல்லோரிடமும்  அன்பாகப் பழகுவாள். வகுப்பில் எல்லோரும் ஒரு முறையில் கணக்குப் போட்டால், இவள் மட்டும் வேறு ஒரு வழிமுறையில் எளிமையாகப் போட்டு விடையைக் கொண்டுவருவாள். சுருக்கமாகச் சொல்லணும்னா, கிருஷ்ணவேணி வகுப்பைப் பொறுப்புடன் வழிநடத்தக்கூடிய மினி டீச்சர்.'

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

சு.காந்திமதி (ஆங்கில ஆசிரியை): 'கிருஷ்ணவேணி ஒரு புதுமை விரும்பி. எதையாவது புதிதாகக் கற்பதில் ஆர்வமாக இருப்பாள். மதிப்பெண் குவிப்பதற்காகப் படிக்காமல், பாடங்களை  உணர்ந்து படித்து, அதில் இருந்து வாழ்க்கைக்குப் பயன்படுகிற விஷயங்களை எடுப்பாள். தன் நண்பர்களுக்கும் இந்த மனப்பான்மை வரணும்னு விரும்புகிறவள்.''’

வி.சுப்புலட்சுமி (தையல் ஆசிரியை): 'வகுப்பு அறையும் வீடு மாதிரியே சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பாள். கைத்தொழில்களில் கலக்குவாள். நவீன காலத்துக்கு ஏற்ப ஜமுக்கி, கண்ணாடி, பாசி எல்லாம்வைத்து, அழகாத் தைத்து அசத்துவாள். தையல் வகுப்பில் கிருஷ்ணவேணிதான் என் செல்லக் குட்டி.'

ஜி.தேவசேனா (ஸ்கௌட் ஆசிரியை): 'இவள் தலைமையில்தான் ஸ்கௌட் அணி செயல்படுது. எப்பவுமே சுறுசுறுப்பாக இருப்பாள். தான் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாகவும் கருத்தாகவும் இருப்பாள். பள்ளியில் சுத்தம் பற்றி எடுத்து கூறுவதிலும், அதைப் பின்பற்றுவதிலும் முன்னோடியாக இருப்பாள். சமூக அக்கறை உள்ள மாணவி கிருஷ்ணவேணி.''

 - ச.பா.முத்துக்குமார் படம்: ஜெ.பிரதீப் ஸ்டீபன் ராஜ்

 ''எங்களுக்கு வீட்டில் இருக்கிறதைவிட ஸ்கூலில் பால் ரத்னா டீச்சர்கூட இருக்கிறதுதான் ரொம்பப் பிடிக்கும்.' என்று பாசம் பொங்கும் கண்களோடு சொல்கிறார்கள், திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனி அரசு நடுநிலைப் பள்ளியின் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள்.

ஜெயஸ்ரீ: ''ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு சாப்பிடாம வந்துட்டேன். மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட ரத்னா மிஸ், உடனே பசங்களை அனுப்பி, எனக்கு டிபன் வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தாங்க. நான் வேண்டாம்னு சொன்னேன். 'என் குழந்தையாக இருந்தால், இப்படிப் பசியோடு இருக்கிறதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பேனா?’னு சொன்னாங்க. மத்தவங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு உதவி செய்யணும்கிறதை அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்.''

இந்துஜா: 'எங்க ஸ்கூலில் நிறையக் கலைப் போட்டிகள் நடக்கும். நாடகத்தில் நான் பின்னி எடுப்பேன். ஆனால், வேஷத்துக்கான டிரெஸ் வாடகைக்கு எடுக்கிற அளவுக்கு வசதி இல்லை. ரத்னா டீச்சர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அன்னைக்கு நான் ஜான்சி ராணியா மேடையில கலக்கிக் கைதட்டு வாங்கினதுக்குக் காரணமே அவங்க வாங்கித் தந்த டிரெஸ்தான்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

அனு ப்ரியா: ''இந்த வருஷம்தான் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நோட்டு, பேனா, பென்சில் தர்றாங்க. போன வருஷம் சீருடைகூட எல்லாம் நாங்களே கடையில் வாங்க வேண்டியதா இருந்தது. அப்போ, வசதி இல்லாத எங்களுக்கு வாங்கித் தந்தது ரத்னா டீச்சர்தான். ஆரம்பத்தில் ஸ்கூல்னாலே எனக்கு பயமும் வெறுப்புமா இருக்கும். அதைப் போக்கினதும் அவங்கதான்.''

மதன்குமார்: ''நான் ரெண்டாவது வரைக்கும் தனியார் பள்ளியில் படிச்சேன். இந்தப் பள்ளியில சேர்ந்ததும் சரியாவே வகுப்புக்கு வர மாட்டேன். ரத்னா டீச்சர்கூட பழகின பிறகு, பழைய பள்ளியைவிட இது எவ்ளோ மேல்னு உணர ஆரம்பிச்சேன். இப்ப இன்னும் நல்லாப் படிக்கிறேன். அவங்க கொடுத்த ஊக்கத்துலதான் வகுப்புத் தலைவனா உயர்ந்து இருக்கேன்.''

ராகுல்: 'பள்ளிக்கு வரும் வழியில் ஒரு நாள் எனக்குக் காலில் சின்னக் காயம் பட்டுருச்சு. ரத்தம் கொட்டிக்கிட்டே இருந்துச்சு. ரத்னா டீச்சர்தான் என்னை அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப்போய் ரத்தத்தைச் துடைச்சு, மருந்து போட்டாங்க. அப்புறம், என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சாங்க. என்னிடம் மட்டும் இல்லை, எங்க வகுப்பில் இருக்கிற ஒவ்வொருவரிடமும் அம்மாவைப்போல ரொம்ப அக்கறையாக இருப்பாங்க. அவங்கதான் எங்க ரோல் மாடல்.''

- ப.கவிமணி படம்: எஸ்.நாகராஜ்