##~##

நாம் பிறருடன் பேசுகிற விதம் எப்படி என்பதை அறிவது ஒரு பக்கம் என்றால், நமக்கு நாமே எப்படி பேசிக்கொள்வது என்பதும் முக்கியம். அது என்ன நமக்கு நாமே பேசிக்கொள்வது?

நம்முடைய பெரும்பாலான செயல்களைத் தீர்மானிப்பது நம் ஆழ்மனமே. அதன் விருப்பங்களின்படியே நமது குணநலன்கள் உருவாகும். அதுவே நமது வெற்றி, தோல்விக்குக் காரணம் ஆகின்றன. இந்த ஆழ்மனதோடு பேசுவதுதான், நமக்கு நாமே பேசுவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலருக்குக் கணக்குப் பாடம் பிடிக்காது.  கணக்குக்கும் அந்த மாணவர்களுக்கும் என்ன சண்டை? காரணம், அவர்களின் ஆழ்மனதுக்குக் கணக்குப் பாடத்தின் மேல் விருப்பம் இல்லை. 'அது என்ன, நமக்கே தெரியாமல் நமக்குள்ளே ஆழ்மனம் என்று ஒன்று இருக்கிறதா?’

நிச்சயமாக. ஆழ்மனதின் சக்தியை வெவ்வேறு உதாரணங்களின் மூலம் விளக்குகிறார்கள். அவற்றில் பாதி அறிவியல் பூர்வமானவை. மீதி ஏதோ மந்திர வித்தை போன்றவை.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்’ என்றார். அதை இப்படிப் புரிந்துகொள்ளலாம். 'ஆழ்மனது கனவுக்குக் காரணம் ஆகிறது. காலப்போக்கில் ஆழ்மனதின் கட்டளைக்கும் ஆசைக்கும் வெளிமனது கட்டுப்பட்டு, அதைப் போலவே சிந்திக்கிறது. நாம் அந்த வெளிமனத்துக்கு ஏற்ப வழக்கம்போல நடந்துகொள்கிறோம். அது நம் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கிறது. நம் லட்சியம் ஈடேறுகிறது’ சரிதானே?

நாம் விரும்பும் விஷயங்களை ஆழ்மனத்துக்குத் தெரிவிக்க ஒரு டெக்னிக் இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை 'ஆட்டோசஜஷன்’ என்பார்கள். தமிழில் நம் வசதிக்கு 'மனசோடு பேசுதல்’ என்று வைத்துக்கொள்ளலாம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

ஒரு விஷயத்தை நாம் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது நம் மனதில் அழுத்தமாகப் பதியும். அதற்கு  சில வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம். அது ஜாலியாகவே இருக்கும். இதற்காக தனியாக நம் நேரத்தை ஒதுக்க வேண்டாம். பிறகு என்ன? 'மனதோடு பேசும்’ மந்திரத்தைச் செய்துதான் பார்ப்போமே.

சாதாரணமாக ஓர் ஆசையை, குறிக்கோளை உருவாக்கிக்கொண்டு, எப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கலாம். பள்ளிக்குப் பேருந்தில் போகும்போது, யாருக்காகவாவது காத்திருக்கும்போது அந்த ஆசையை அசைபோடலாம். இது நம் மனதின் மேல் மட்டத்தில் நடக்கிற செயல்பாடு. நாம் இப்போது இங்கே இன்னும் சக்தி வாய்ந்த, கூடிய விரைவில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையைப் பார்க்கப் போகிறோம்.

நம் ஆழ்மனம் தன் அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து விலகி, நாம் தெரியப்படுத்த விரும்பும் விஷயங்களைத் தன்னுள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கவனத்தோடு கீழ்க்காணும் விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்யலாம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

இரவில் படுத்துத் தூங்குவதற்கு முன் படுக்கையில் படுத்தபடியே இதைச் செய்யலாம். இது மாயமோ மந்திரமோ இல்லை, உடற்பயிற்சியைப் போல இது ஒருவகையான மனப் பயிற்சி.

நிலை-1 சுவாசத்தில் கவனம்: படுக்கையில் மல்லாக்கப் படுங்கள். சத்தமோ, வெளிச்சமோ உங்கள் கவனத்தை திசை திருப்பக் கூடாது.  நடக்க இருக்கும் பரீட்சை பற்றியோ, விளையாட்டுப் போட்டி பற்றியோ கவலைப்படக் கூடாது. உங்கள் மொத்தக் கவனத்தையும் மூச்சுக் காற்றில் குவியுங்கள். உங்களுக்கு உள்ளே போகும் மூச்சு நீல நிறத்தில் இருப்பது போலவும், வெளியேவிடும் மூச்சு, உடலுக்குள் இருக்கும் வீணான பொருட்களை எடுத்துக்கொண்டு சாம்பல் நிறத்தில் செல்வது போலவும் நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி 30 தடவை செய்யுங்கள்.

நிலை-2 உடல் கவனம் குறைத்தல்: ஒரு கம்பளியால் உங்கள் உடல் போர்த்தப்படுவது போல் கற்பனை செய்யுங்கள். பாதத்தில் தொடங்குங்கள். கால், வயிறு, மார்பு, புஜங்கள், கழுத்து, பிறகு முகம் என்று அந்தக் கனமான, வெதுவெதுப்பான கம்பளி உங்கள் உடலை மெள்ள மெள்ள மூடுகிறது. கம்பளியால் போர்த்தப்பட்ட உடல் பாகங்கள் எடை இழந்து மிதப்பது போல் நினையுங்கள். உடலைப் பற்றிய கவனமே மறந்துபோகிறதா? அப்படி இல்லை என்றாலும் கவலைப்படாமல் அடுத்த நிலைக்குப் போகலாம்.

நிலை-3 மேலும் இளைப்பாறல்: இப்போது மனக்கண்ணில் வேறு ஒன்றைக் கற்பனை செய்யுங்கள். உங்கள் மூளைக்குள் இருந்து ஒரு தடிமனான மின்சார வயர் உங்கள் பிடறியில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. பிடறிக்குக் கீழே அந்த வயர், சின்னச் சின்ன வயர்களாகப் பிரிகிறது. அப்படிப் பிரிந்து பிரிந்து படர்ந்து, உங்கள் உடல் முழுதும் பரவுகிறது. அப்படியே அந்த வயர்களில் இருக்கும் மின்சாரத்தைத் துண்டிக்க ஒரு ஸ்விட்சையும் கற்பனைசெய்யுங்கள். முதலில் குதிகாலில் இருக்கும் வயரின் ஸ்விட்சை அணையுங்கள். முழங்கால், இடுப்பு, மணிக்கட்டு, முழங்கை, தோள், கழுத்து என்று ஒவ்வொரு உறுப்பாக ஸ்விட்சை அணையுங்கள். இது சும்மா ஒரு கற்பனைதான். என்றாலும், நீங்கள் மின்சாரத்தை அணைப்பதாக நினைப்பதன் மூலம், உங்கள் ஆழ்மனது நீங்கள் தெரிவிக்க விரும்புவதைப் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்ட உடல் உறுப்பை மேலும் ரிலாக்ஸ் ஆக்கும்.

நிலை-4 ஆழ்மனதைப் பழக்குதல்: இப்போது உங்கள் சிந்தனைகளில் கவனத்தைக் குவியுங்கள். மனதில் வேறு யோசனைகளோ, திசை திருப்பல் களோ கூடாது. உங்கள் விருப்பத்தை ஆழ் மனதுக்குச் சொல்லுங்கள். அந்த விருப்பம்  ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, 'கணக்குப் பாடத்தில் ஃபெயில் ஆகக்கூடாது’ என்று இல்லாமல், 'பள்ளியில் முதல் மாணவனாக வர வேண்டும்’ என்பது போல. உங்கள் ஆசை எதுவோ, அதைச் சுருக்கமான வாக்கியமாக மாற்றி, மனதுக்குத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். பிறகு மெள்ள அப்படியே உறக்கத்துக்குள் போய்விடலாம்.

நிலை-5 விளைவை அனுபவித்தல்: மேலே சொன்னவை எல்லாம் சரியாக நடந்தால், வழக்கத்தைவிடக் காலையில் கொஞ்சம் முன்கூட்டியே எழுந்து இருப்பீர்கள். அதுவும் கனவு கண்டு எழுந்து இருப்பீர்கள். அந்தக் கனவை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பங்கள் மெள்ள மெள்ள நிறைவேறு வதை உணர்வீர்கள்.

எந்த மந்திர தந்திரமும் இல்லாமல் மனப்பயிற்சியாலேயே கிடைக்கும் வெற்றி இது.

(கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism