FA பக்கங்கள்
தொடர்கள்
Published:Updated:

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

##~##

வேலூர், பகவான் மகாவீர் தயானிகேசன் ஜெயின் பள்ளி, அந்தக் காலை நேரத்தில் வழக்கத்தைவிட வித்தியாசமான பரபரப்பில் இருந்தது. ஒரு பக்கம் என்.சி.சி., மாணவர்கள் மேள தாளங்களை வாசித்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் வரப்போகும் வி.ஐ.பி-க்காக ரெட் கார்ப்பெட் விரித்துக்கொண்டு இருந்தார்கள்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.சங்கர், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வர இருப்பதையும், அவரைப் போல் கலெக்டர் வேடம் அணிந்து, அவரிடம் பேச இருக்கும் தம் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் வந்து பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர்.

பூஜாசாமி தன் பக்கத்தில் இருந்த நவீனிடம், ''வீட்டில் உங்க அப்பா, அம்மா என்னடா சொன்னாங்க?'' என்று ஆர்வமாகக் கேட்க, ''கலெக்டர் ஸ்கூலுக்கு வரும்போது 'விஷ்’ பண்ணணுமாம்.'' என்றான்.

''நீ யாருக்குமே விஷ் பண்ண மாட்டேங்கிறது உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சா?'' என்றதும் நவீன் முறைக்க, வேறு பக்கம் பார்த்தான் பூஜாசாமி. அடுத்து, ''அவர்கிட்ட பொறுமையா கேள்வி கேட்கணுமாம்.'' என்று சொல்ல,  ''அதுசரி.. லோன் விஷயமா எதுவும் கேட்கச் சொன்னாரா?'' என்று பூஜாசாமி ஒரு சரவெடியைக் கொளுத்திப்போட, சுற்றி நின்ற மற்ற சுட்டிக் கலெக்டர்கள் சிரித்தார்கள்.

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

''இங்கே பாரு அவர்கிட்ட கேட்கவேண்டிய கேள்வியை எங்க அம்மா நாலு பக்கத்துக்கு எழுதிக் கொடுத்து இருக்காங்க!'' என்றபடியே கையில் இருந்த பேப்பர்களை எடுத்துக் காட்டினான் தினேஷ். ''இதுகூடப் பரவாயில்லை. எங்க வீட்டில் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ். நேரா நிக்கணுமாம், கலெக்டர் பேசும்போது சிரிக்கக் கூடாதாம், நிமிர்ந்து உட்காரணுமாம்.'' என்று அடுக்கினான் வினோத். அப்போது அருகில் வந்த ஜோதிலட்சுமி, ''எங்க மாமா என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா?'' என்று உரத்த குரலில் கேட்க.  ''என்ன சொன்னாங்க?'' என்று அந்த மூவரும் கேட்க, ''அதை... உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு சொல்லிட்டாரே'' என்றபடி ஓடினாள்.  

''கலெக்டர் சார் நமக்காக அவருடைய நேரத்தை ஒதுக்கி, நம்மைப் பார்க்க வர்றார். இது நமக்குப் பெருமைதானே?'' என்று நவீன் சொல்ல, ''நாமளும் இப்போ கலெக்டர்தானே'' என்று கோரஸாகச் சுட்டிகள் குரல் எழுப்புவதற்கும், கலெக்டரின் கார் பள்ளியை அடைவதற்கும் சரியாக இருந்தது.

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, நம் சுட்டி கலெக்டர்களைப் பார்க்க ஆவலோடு தேடினார்.

அப்போது, 40 சுட்டி கலெக்டர்களும் உற்சாகமாக அவர் முன் வந்து, கை கொடுத்தனர். அதற்குப் பிறகு ஆரம்பமானது அதிரிபுதிரி அமர்க்களம்.

''உங்கள் எல்லோருக்கும் வணக்கம். என்னை உங்க ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க. தம்பி, உன்னைப் பற்றி சொல்லு!'' என்று யுவன் ராஜேஷிடம் கேட்டார்.

''சார், நாங்க இப்போ கலெக்டர்களா வந்து இருக்கோம். ஆனா, கலெக்டர்கள் இல்லை!'' என்று முதல் பதிலிலேயே நச்னு சொல்ல, ''ஓ.... நீங்க எல்லாம் கலெக்டரா? சரி, நீங்க எல்லாம் எந்த எந்த ஊர் கலெக்டர்ஸ்?'' என்று கேட்க, ''இப்பதான் டிரெயினிங் எடுக்கப்போறோம். முடிச்சுட்டு வந்தப்புறம்தான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம்னு தெரியும்!'' என்று சுட்டி ஸ்ரீதேவி சொன்னாள்.

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

''இல்லம்மா, தமிழ்நாடு மட்டும் இல்லை. இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் உங்களை நியமிக்கலாம். உங்க கனவு கலெக்டர் ஆவதுதான் என்றால், எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று உற்சாகத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

''கலெக்டர் பணி என்பது மிகவும் ஆத்மார்த்தமானது.   ஒரு கையெழுத்தால் பல நலத் திட்ட உதவிகள் செய்யலாம், தவறு செய்பவர்களைச் சிறையில் தள்ளலாம், பணி நியமன ஆணை வழங்கலாம், சுற்றுப்புறத்தைத் தூய்மை ஆக்கலாம்.  ஓரு மாவட்டத்தில் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அது கலெக்டரின் பார்வைக்கு வரும். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. பொறுப்பு மட்டும் அல்ல; அதற்கான தீர்வுகாண வேண்டிய வேலையும் உள்ளது'' என்றார் சங்கர்.

''கலெக்டர் ஆக, படிப்போடு வேறு என்ன விஷயங்கள் தெரிஞ்சு இருக்கணும்?'' என்று பூஜாசாமி கேட்க, ''பாடப் புத்தங்களுடன், பொது அறிவு கண்டிப்பாக வேண்டும். தினமும் நாளிதழ்கள் படிக்க வேண்டும்.'' என்றார்.

''வேலூர் மாவட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. இதுக்கு நீங்க ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கீங்களா?'' என்று சொர்ணமால்யா கேட்க, நிதானமாக யோசித்த கலெக்டர், ''இந்தப் பொண்ணு வருங்காலத்தில் கலெக்டரா அல்லது பத்திரிகை நிருபரா

அவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் !

வருவாங்க'' என்று பாராட்டிவிட்டு, ''இதுவரை பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பி உள்ளோம். தொடர் நடவடிக்கைகள் மூலம் முழுமையாக இதை மாற்றுவோம்'' என்றார்.

''உங்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து மிரட்டல் ஏதாவது வருமா சார்?'' இப்படி கேட்டாள் ஜெய்வர்ஷா.

''வரும். ஆனா, அதுக்கு எல்லாம் பயப்படக் கூடாது. நம்ம வழியில் போய்க்கொண்டே இருக்கணும்'' என்றார்.

''சார், பள்ளி மாணவிகள் மீது தொடரும் வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' என்று கேட்டாள் கீர்த்தனா.

''கொஞ்சம் நல்லாப் புரிஞ்சுக்கோங்க. எப்பவும் பெண்கள் தைரியமா இருக்கணும். முடிந்தவரை தனியாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வதும் முக்கியம்'' என்றார்.

மேலும், பல அதிரடிக் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களை சரசரவெனச் சொன்னார் கலெக்டர்.

''உங்களிடம் இருக்கும் துடிப்பும் சமுதாய அக்கறையையும் பார்க்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது ஏதோ நிகழ்ச்சிக்கான ஒரு நாள் விஷயமாக மட்டுமே முடிஞ்சுடக் கூடாது. இதே துடிப்புடனும் லட்சியத்துடனும் படிங்க. வருங்கால மாவட்ட ஆட்சியராக உருவாக வாழ்த்துகள்'' என்று சொல்லி கைகொடுத்து விடைபெற்றார்.

கலெக்டர் ஆகப்போகும் லட்சியத்துடன் சுட்டிகள் அனைவரும் தங்களது வகுப்பு நோக்கி நடந்தார்கள்.

வேலூர், விருதம்பட்டு அருகில் உள்ள பகவான் மகாவீர் தயானிகேசன் ஜெயின் பள்ளி, 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐ.சி.எஸ்.ஈ பாடப் பிரிவுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், இப்போது எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 2,500 மாணவ,  மாணவிகள் படிக்கிறார்கள். கடந்த ஒன்பது வருடங்களாகத் தொடர்ந்து 10-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று வருகிறது. இங்கே, சிறந்த முறையில் கல்வியுடன் சிலம்பாட்டம், பரதம், இசை மற்றும் தற்காப்புக் கலை ஆகியவையும் கற்றுத் தரப்படுகின்றன.