##~##

'தொழில்நுட்பத்தில் வெறும் கருவிகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அந்தக் கருவியை நாம் பயன்படுத்தும் நேர்த்தியில்தான் புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்'' என்கிறார் பில் கேட்ஸ்.

நல்ல தரமான வீணையை வாங்கிவிட்டால் மட்டும் இசை வந்துவிடாது. அதை மீட்டும் விரல்களுக்கு மிகுந்த ஆர்வமும், பயிற்சியும் அவசியம். நல்ல உயர்தர பேனா அல்லது பென்சிலை வாங்கிவிட்டால் மட்டும் போதாது. அயராத பயிற்சிதான் உயரம் தொட உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்தான கையெழுத்துப் பயிற்சியில், நாம் தேர்ந்தெடுக்கும் பேனா அல்லது பென்சில்கள் மிகவும் முக்கியமானவை. ஆரம்பப் பயிற்சியாளர்கள், முதலில் பென்சிலால் பயிற்சி செய்வது நல்லது. பென்சில்களில் பல்வேறு வகையான மென்மை மற்றும் கடினத்தன்மை மிக்க எழுதுமுனைகள் உள்ளன. இவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

பென்சில்கள், 'கிராஃபைட்’(GRAPHITE) எனும் கனிமத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. இது ஒவ்வொரு பென்சிலுக்கும், அதன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கடினம் மற்றும் மென்மை எனப் பல்வேறு அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படுகின்றன. நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பென்சிலின் மேல் பகுதியில், HB என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். H என்றால், Hard எனும் கடினத் தன்மையும் மெல்லிய கோடுகளை உருவாக்குபவையும் ஆகும். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் எவ்வளவுதான் அழுத்தி எழுதினாலும் அவை கருப்பாக இருக்காது. B என்று குறிப்பிடப்படும் பென்சில்களின் முனை மிகவும் மென்மையாக இருப்பதால், அடிக்கடி உடையும். ஆனால், லேசாக எழுதினாலே கரிய கோடுகளைப் பெறலாம். இந்த இரண்டு தன்மைகளையும் ஒரே விகிதாசாரத்தில் கலந்து உருவானவைதான் HB பென்சில்கள் எனப்படும் சாதாரண பென்சில்கள்.

முத்தான கையெழுத்து !

1795-ல் நிக்கோலஸ் ஜாக்ஸ் கான்ட்டே என்பவர் முதன்முதலாக களிமண்ணையும், எழுது கரியையும் (GRAPHITE) கலந்து, புதிய வகைப் பென்சில்களை உருவாக்கினார். இந்தக் கலவையின் விகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம், எழுதும் பென்சிலின் கடினத்தை நம் வசதிக்கு ஏற்ப மாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றமே, நம் தேவைக்கு ஏற்ற இன்றைய பென்சில்கள்.

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் HB பென்சில் தவிர்த்து, 1H, 2H, 3H, 4H, 5H, 6H என்கிற கடின முனைகொண்ட மெல்லிய கோடுகளை உருவாக்கும் பென்சில்களும், 1B, 2B, 3B, 4B, 5B, 6B என்கிற மண்களிமண்ணால் தயாரிக்கப்பட்ட கருமைக் கோடுகளைத் தரும் பென்சில்களும் உள்ளன. உலக அளவில் ஐரோப்பியத் தரம் பிரிப்பு முறையில் B என்றால், கருமையைக் குறிக்கும். H என்பது கடினத்தைக் குறிக்கிறது. அமெரிக்க முறையில் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர்ந்த எண்கள் உயர்ந்த கடினத்தைக் குறிக்கும்.

நீங்கள் அழுத்தி எழுதும் நபராக இருப்பின், ஆரம்பத்தில் 2H பென்சிலைப் பயன்படுத்திப் படிப்படியாக 4B வரை முயற்சிக்கலாம். மெல்லிசாக எழுதும் நபராக இருப்பின், 8B பென்சிலைக்கூடப் பயன்படுத்தலாம். சில காலம் பென்சிலில்  பழகிவிட்டு பேனாவுக்கு மாறலாம்.

முத்தான கையெழுத்து !

பேனாக்களில் இங்க் பேனா, பால் பாயின்ட் பேனா, ஜெல் பேனா  வளர்ந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் ஆரம்பப் பயிற்சியாளர் எனில், முதலில் இங்க் பேனாவைப் பயன்படுத்துவதே சிறந்தது. காரணம், இங்க் பேனா ஒரு நிதானத்தைக் கொடுக்கும். நன்றாகப் பயிற்சி பெற்ற பின் பால் பாயின்ட், ஜெல் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக, தமிழ் எழுத்துகளுக்குப் பட்டை அடிக்கும் இங்க் பேனாவைப் பயன்படுத்தினால், குண்டு வடிவ முத்தான கையெழுத்தைப் பெறலாம். ஆங்கில எழுத்துகளுக்கு சன்னமாக எழுதும் பேனாவே சிறந்தது.

முத்தான கையெழுத்து !

மொழிகளுக்கு ஏற்ப எழுத்தின் வடிவங்கள் மாறுபடுவதால்,  பேனாவையும் அதன்படி தேர்ந்தெடுக்க வேண்டும்.  

பேனா அல்லது பென்சில்களை அழுத்தமாகப் பிடிக்காதீர்கள். மென்மையாகப் பற்றி, நிதனமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட்டுங்கள். எந்த கம்பெனி பென்சில், பேனா என்றாலும் அது தரமானதாக இருப்பது முக்கியம். சில கம்பெனிகள் தயாரிக்கும் பென்சில்களில், 'கிரிப்’ என்கிற பிடிமான வசதிகள் உள்ளன. முக்கோண வடிவில் அந்தப் பென்சில் இருக்கும்.

அழகான பேனா அல்லது பென்சிலை வாங்கிவிட்டால் மட்டும் போதாது.  அழகாக எழுத வேண்டும் என்கிற எண்ணமும் உங்களுக்குள் ஊற்றெடுக்க வேண்டும். அப்போதுதான் முத்தான கையெழுத்தை நம் சொத்தாக்கிக்கொள்ள முடியும்.  

(எழுதுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism