குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !
##~##

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராஜேந்திரா சாலை, அரசு மேல்நிலைப் பள்ளியின் டியர் டீச்சர், ஏழாம் வகுப்பின் அறிவியல் டீச்சர் ராஜேஸ்வரிதான். அவர் தன் மாணவர்களை அன்பால் வழி நடத்தும் அறிவியல் ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிதா: ''எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் இருந்து வர்றவங்க. பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறவங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதைப் புரிஞ்சுக்கிட்ட ராஜேஸ்வரி டீச்சர், எப்படித் தன்னம்பிக்கையுடன் இருக்கணும், மற்றவர்களிடம் எப்படிப் பழகணும், எல்லாரும் பாராட்டுகிற மாதிரி எப்படி நடக்கணும்னு சொல்லிக்கொடுத்தாங்க. அது எங்க தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறியத் தூண்டுகோலா இருந்துச்சு.''

சபிதா பேகம்: ''முன்பு எல்லாம் நிறைய வீட்டுப் பாடம் கொடுப்பாங்க. ஆனா, இப்ப மின்வெட்டு அதிகமா இருக்கிறதால், வீட்டில் சரியாப் படிக்கவே முடியலை. இந்தக் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்ட மிஸ் கொஞ்சமாத்தான் வீட்டுப் பாடம் தர்றாங்க. எந்த விஷயத்தையும் எங்க நிலையில் இருந்து யோசிச்சுச் செய்வாங்க.''

செல்வபாரதி: '’எங்க ராஜேஸ்வரி டீச்சர் எந்தக் கிளாஸுக்குப் போனாலும் தன்னோட காலணியை வெளியே கழட்டிவிட்டுட்டுதான் போவாங்க. ஒரு முறை, 'ஏன் மிஸ் இப்படிப் பண்றீங்க?’னு கேட்டேன். 'நாம் செய்யும் தொழில்தான் நமக்கு தெய்வம். அதுக்கு மரியாதை தரணும். செருப்பில் இருக்கும் அசுத்தத்தினால் நோய்த்தொற்று வந்துடக் கூடாது’னு சொன்னாங்க. இதுமாதிரி பல விஷயங்களை அவங்ககிட்ட இருந்து ஃபாலோ பண்றோம்''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

அக்‌ஷய் குமார்: ''ஒரு நாள் பஸ்ஸுக்காக வெச்சு இருந்த காசைத் தொலைச்சுட்டு, என்ன செய்றதுனே தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். அதைப் பார்த்த ராஜேஸ்வரி டீச்சர் உதவினாங்க. இப்படி ஏழை மாணவர்கள் பேனா, பென்சில் வாங்கவும் உதவுவாங்க. எல்லாரையும் தன்னோட குழந்தைகளாட்டம் பார்த்துப்பாங்க. அரசுப் பள்ளியில் படிப்பதை நாங்கள் பெருமையாக நினைக்க அவங்கதான் காரணம்.''

ஆன்ட்ரூ ஜான் பால்: ''எனக்கு அறிவியல் பாடமே புரியாது. அதனால், அந்தப் பாடத்தைச் சரியாப் படிக்க மாட்டேன். ஒரு நாள் என்கிட்ட வந்த ராஜேஸ்வரி டீச்சர், 'உனக்கு ஏன் அறிவியல் பிடிக்க மாட்டேங்குது?’னு கேட்டாங்க. 'புரியவே மாட்டேங்குது’னு சொன்னேன். அதுக்கு அப்புறம், எனக்குப் புரியற மாதிரி எளிமையாச் சொல்லித் தந்தாங்க. இப்போ, என்னோட ஃபேவரைட் சப்ஜெட்... சயின்ஸ்!''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

நாகப்பட்டினம் மாவட்டம், குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன், சண்முகம். தன் நற்பண்புகளால் ஆசிரியர்கள் அனைவரையும் கவர்ந்து பலருக்கும்  ரோல் மாடலாக உலா வருகிறான்.

பாலு (தலைமை ஆசிரியர்): ''எளிமையான தோற்றமும், கனிவான முகமும்தான் சண்முகத்தின் அடையாளம். ஒரு நாள் பள்ளி விட்டதும் ஒண்ணாம் வகுப்பு மாணவர்கள் வெளியே வேகமாக ஓட, அந்த நேரம் பார்த்து எதிரில் பஸ் வந்துடுச்சு. ஆசிரியர்கள் யாரும் கவனிக்கலை. அப்போ, அந்த இடத்துக்கு ஓடிப்போய், படுவேகமாக மாணவர்களைப் பள்ளி வளாகத்துக்குள் அனுப்பி அவர்களைப் பாதுகாத்தான் சண்முகம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பள்ளியை ஒட்டி பஸ் செல்லாத அளவுக்கு பெரிய கல்லை அங்கே வைத்தோம்.''

அசோக் (கணித ஆசிரியர்): ''எந்தச் செயலையும் நிதானமாகவும் கவனத்தோடும் செய்யக்கூடியவன். அவனிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், அதைச் செய்து முடிக்கும் வரை வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டான். நிறையப் புத்தகங்கள் படிக்கிற பழக்கமும் சண்முகத்துக்கு உண்டு.''

முத்துக்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) : ''மாணவர்களை வெளியே அழைச்சுட்டுப் போகும்போது, அவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தும் பொறுப்பை சண்முகம் செய்வான். ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்பு அறையை அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.  இதுவரைக்கும் சண்முகம் ஸ்கூலுக்கு லேட்டா வந்து நான் பார்த்ததே இல்லை.''

கீதா (அறிவியல் ஆசிரியர்): ''சண்முகம்தான் எங்க பள்ளியின் உணவுத் துறை அமைச்சர். ஒரு நாள் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனுடைய சத்துணவு கீழே கொட்டிவிட்டது. அதைக் கவனித்தவன், அந்த மாணவனுக்குத் தன்னோட சாப்பாட்டைக் கொடுத்தான். அவன்கிட்ட எல்லாருக்கும் உதவும் குணம் நிறையவே இருக்கு.''

ராஜ்குமார் (சுற்றுச்சூழல் ஆசிரியர்): ''சண்முகம் எல்லோரிடமும் அனுசரித்துப்போகும் மனப்பான்மை உடையவன். சென்ற மாதம், மழை பெய்து பள்ளியில் நீர் தேங்கி இருந்தது. ஆசிரியர்கள் யாருமே சொல்லாமல், மணல் மேடுகளில் இருந்து மணல் எடுத்து வந்து, நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தைச் சரி செய்தான். ஒவ்வொரு மாணவனும் அவனை மாதிரி சமூக ஆர்வலராக இருந்தால் நாளைய சமுதாயம் நல்லதாகவே இருக்கும்.''