##~##

பலரோடு சேர்ந்தே வாழ்ந்தாக வேண்டிய சமூக உயிரினங்கள் நாம். நமது வெற்றியில் நம்மைச் சுற்றி இருக்கும் பிறருக்கும் பங்கு உண்டு. எனவே, பிறர் மனதைக் கவர்வது, வெற்றியை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்.

நம் எதிரில் இருப்பவர் மனதை யூகித்து அறிவதை அனைவருமே செய்கிறோம். எதிரில் இருப்பவராகவே நாம் மாற முடிந்தால்?  இதை 'பிறர்நிலை உணர்தல்’ என்பார்கள். ஆங்கிலத்தில் ணினீஜீணீtலீஹ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் சொல்கிற ஒரு கருத்துக்கு எதிராளியின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்வது, நாம் நடந்துகொள்ளும் விதம், எதிரில் இருப்பவரின் மனதில் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்று புரிந்துகொள்வது ஆகிய திறமை நமக்கு அவசியம்.

நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கையில் கேட்பவர் கொட்டாவி விடுகிறார் என்றால், உங்கள் பேச்சில் அவருக்கு ஆர்வம் இல்லை என்று புரியும். இப்படி வெளிப்படையாக அறிகுறிகள் காட்டாதபோதும், அவருடைய மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்துகொள்ள திறமை வேண்டும்.

இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள, எதிரில் இருப்பவர் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல், அவரது அங்க அசைவுகளைப் புரிந்துகொள்ளல், அவரிடம் கேள்விகளைக் கேட்பது போன்றவை அவசியம். இப்படிச் செய்வதன் மூலமே நமக்கும் அவருக்குமான உரையாடலை நேர்மறையான வழியில் கொண்டு செல்ல முடியும்.

உங்களிடம் யாராவது பேசும்போது, உங்கள் உள்ளுணர்வைச் செயல்பட அனுமதியுங்கள். உங்கள் கற்பனா சக்தியும் இயங்கட்டும். இதே போன்ற வேறொரு சந்தர்ப்பத்தில், பிறர் என்ன மாதிரி நடந்துகொண்டார்கள், எப்படி சிந்தித்தார்கள் என்று யோசியுங்கள். உங்களிடம் பேசுபவர் இடத்தில் நீங்கள் இருந்தால் என்று கற்பனை செய்துபாருங்கள்.

உங்களை தெரியுமா உங்களுக்கு

சாதாரண உரையாடலிலும் நாம் கவனம் செலுத்தும்போது, எதிராளியின் மனதில் இடம் பிடிப்பது எளிதாக இருக்கும். உங்கள் பள்ளித் தோழர்கள், தங்களை  வருத்தப்படுத்தும் ஏதாவது விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வருவார்கள். ஆனால், வேறு எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் மனதில் இருக்கும் விஷயத்தை மேலே கொண்டுவரக் கேள்வி கேட்கும் டெக்னிக்கைக் கையாள வேண்டும்.

'இப்போ என்ன நடக்கணும்னு நினைக்கிறே?'

'இந்த விஷயத்தில் உன்னை எது எல்லாம் வருத்தப்படுத்துது?'

'இதே மாதிரி வேறே என்ன விஷயங்கள் எல்லாம் உன்னைப் பாதிக்குது?'

இப்படிக் கேட்கும்போது அவர்களின் அடிப்படைப் பிரச்னைகள் உங்களுக்குப் புரிந்துவிடும். அதோடு, அவர்கள் மீது நீங்கள் அக்கறைகொண்டு இருக்கிறீர்கள் என்பதும் அவர்களுக்குப் புரியும். பிறரிடம் கேள்விகள் கேட்பதுபோல், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவும் சில கேள்விகள் உண்டு.

'எதிரில் இருப்பவர் சொன்னதை வைத்து நான் என்ன முடிவுக்கு வந்தேன்?’

'இதேபோன்ற விஷயத்தை வேறு எவராவது சொல்ல, நான் கேட்டிருக் கிறேனா? எங்கே கேட்டேன்?’

'இதே அனுபவம் எனக்கு ஏற்கெனவே ஏற்பட்டு இருக்கிறதா? அந்த அனுபவம் இங்கே  பொருந்துமா?’

'நான் எதையாவது கவனிக்கத் தவறிவிட்டேனா? விஷயத்தின் மையத்தைச் சரியாகப் புரிந்து கொண்டேனா?’

உங்களை தெரியுமா உங்களுக்கு

இந்தக் கேள்விகளின் மூலம் பிறர்நிலை உணரும் திறன் உங்களுக்குக் கைகூடும். அந்தத் திறன் உங்களுக்கு வந்துவிட்டால், ஓர் உரையாடலை நீங்கள் விரும்பும் திசையில் எடுத்துச்செல்ல முடியும். இதன் மூலம் பிறர் மனதைக் கவர முடியும்.

பிறர் மனதைக் கவர்வதற்கு நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அதற்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் தெளிவு இருக்கவேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களிடம் எந்த அளவுக்கு அதிகமாகப் பதில்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு பிறர் உங்களை நாடி வருவார்கள். அதே போல் ஒரு விஷயத்தில் நீங்கள் முதலில் பேச ஆரம்பித்தால், பிறரின் கவனம் உங்கள் மேல் குவியும்.

பிறர் உங்களிடம் ஓர் உதவி கேட்டு வரும்போது, அதை உங்களால் செம்மையாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமா என்பதை ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துக்கொள்ளுங்கள். முடியாது என்று தோன்றினால், அதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள். காலம் கடந்து அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவதற்குப் பதில், முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.

ஒருவர் ஏதோ சிரமத்தில் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியவருகிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்களுக்குத் தேவையான  உதவியை உங்களால் செய்ய முடியும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது என்ன செய்வீர்கள்? முடியும்போது உதவியைச் செய்துகொள்ளலாம். ஆனால், உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு 'நான் உங்களுக்கு உதவி செய்வேன்’ என்று தெரியப்படுத்திவிடுங்கள். இந்த ஆறுதல் வார்த்தைகள் உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.

பிறரைக் கவர்வதில் குழுச் செயல்பாடும் முக்கியம். குழுவாகச் செயல்படும்போது கருத்து வேற்றுமைகள் வரலாம். அப்போது நாம் நம்முடைய கருத்திலேயே பிடிவாதத்தோடு நின்றால், பிறர் மனதில் நாம் எதிரியாகத்தான் இடம் பிடிப்போம். அதன் பிறகு நாம் சொல்லும் நல்ல விஷயங்களும் எடுபடாது. எனவே, திறந்த மனதோடும் நேர்மையோடும் பிரச்னையை அணுகுவது சிறந்தது. உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அவற்றைச் சரிசெய்ய என்ன செய்யலாம் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

பிறர் சொல்ல வருவதைக் கவனமாகக் கேளுங்கள். எதிராளி சொல்வதிலும் உண்மைகள் இருக்கக் கூடும். பெரும்பாலான புதிய ஐடியாக்கள் உருவாவது, மாற்றுக் கருத்துகளின் மூலம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிறகென்ன வெற்றி உங்கள் கையிலே; வாழ்க்கை உங்கள் பையிலே!

(கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism