##~##

மேடையில் வெற்றிகரமாகப் பேச, நம்மைவிட புத்திசாலிகள் என்று பார்வையாளர்களைக் கருத வேண்டும்’ என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அப்படி நினைத்தால், நாம் பேச நினைக்கும் விஷயம் குறித்து அதிகப்படியாகத் தயார் செய்துகொண்டு செல்வோம். நாம் சொல்ல நினைத்ததை அழகான முறையில், பார்வையாளர்களை நம் பக்கம் ஈர்க்கும் வகையில் பேசுவோம். சொல்லும் விஷயம் ஒன்றுதான். அதை எப்படிச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தே, மற்றவர்களுக்கு நாம் ஒரு உந்துசக்தியாக இருக்கிறோம். இது நமது அன்றாட வேலைகளிலும் நம்மை உயரவைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகுப்பில் பல மாணவர்கள் இருப்பார்கள். அவர்களில் சிலர், நமக்கு மிகவும் விருப்பமான நண்பர்களாக இருப்பார்கள். அந்த நண்பர்கள், எதிலும் ஓர் உந்துசக்தி இல்லாமல் மந்தமாக இருந்தால் நமக்கு எப்படி இருக்கும்?

சோர்வு ஒரு தொற்றுநோய் போல. அது ஒருவரிடம் இருந்து சுற்றி இருப்பவர்களுக்கும் மெள்ளப் பரவும்.  

''படிச்சது போதும்டா. ப்ளஸ் ஒன்னில் காமர்ஸ் குரூப் சேர இந்த மார்க் எடுத்தால் போதாதா?’ என்று ஒரு நண்பன் சொல்லும்போது, நமக்கும் அந்த மனோபாவம் வந்துவிடும். இதைத் தவிர்க்க ஓர் அழகான உபாயம் இருக்கிறது.

சோர்வு ஒரு தொற்றுநோய் என்றால், உற்சாகமும் அப்படித்தானே இருக்க வேண்டும்? அந்த உற்சாக ஊக்கியாக நாமே ஏன் இருக்கக் கூடாது? இதன் மூலம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உந்துசக்தியை ஊட்டி, அவர்களையும் உற்சாகம் நிரம்பியவர்களாக மாற்றலாம்.  நாமும் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.

உங்களை தெரியுமா உங்களுக்கு

செயல்பட வேண்டும் என்கிற எண்ணமே உந்துசக்தி. ஒவ்வொருவரும் பலவிதமான காரணிகளால் இந்த உந்துசக்தியைப் பெறுகிறார்கள். சுற்றி இருப்பவர்களை உற்றுக் கவனியுங்கள்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்று திருக்குறள் சொல்கிறது. ஒருவர் மனதளவில் சோர்ந்து இருப்பது அவரது முகத்திலேயே தெரிந்துவிடும். உட்கார்ந்து இருக்கும்போது கையைக் கட்டிக் கொண்டு இருப்பது; கன்னத்தில் கைவைத்து இருப்பது; அமைதி அற்றுக் காணப்படுவது போன்றவை உந்துசக்தி இல்லாமல் இருப்பதன் அறிகுறிகளே.

சோர்வாகக் காணப்படும் நண்பனிடம் என்ன பிரச்னை என்று கேளுங்கள். பாடம் குறித்த பிரச்னை என்றால், தைரியம் கொடுத்து எளிதில் தீர்க்கலாம். பாடம் அல்லாத, தனிப்பட்ட பிரச்னை என்றால்?

இந்த வயதில், ஒருவன் தன்னுடைய பிரச்னையை அம்மா, அப்பாவைவிட நட்பு வட்டத்திலேயே பகிர்ந்துகொள்ள விரும்புவான். எனவே, அந்த நண்பன் சொல்லும் பிரச்னையைக் கவனமாகக் கேளுங்கள். ஒரு மாணவனின் தனிப்பட்ட பிரச்னையை, இன்னொரு மாணவனால் முழுமையாகத் தீர்க்க முடியாதுதான். ஆனால், ஆறுதலான வார்த்தைகள் சொல்ல முடியும். பிரச்னையின் தீர்வுக்காக ஒரு வழியைக் காட்ட முடியும். இவை அந்த நண்பனுக்குள் உற்சாகத்தைக் கொடுக்கும்.

உங்களை தெரியுமா உங்களுக்கு

ஒரு நண்பன் உற்சாகமாக இருப்பதையும் முகக்குறிகளின் மூலமே தெரிந்துகொள்ளலாம். ஒரு வேலையைக் கையில் எடுக்கிறான், அது பிடித்தமான வேலையாக இருக்கிறது. அப்போது அவன் முகம் பிரகாசமாக இருக்கும். கண்களில் ஒரு ஸ்பார்க் தெரியும். 'ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது அவருடைய கண்களில் உள்ள பாப்பா விரிவடையும்’ என்கிறது உடலியல்.

ஓர் அழகான இயற்கைக் காட்சியைப் பார்க்கும்போது, 'கண்கள் விரியப் பார்த்தாள்’ என்று சொல்கிறோமே, அது இதனால்தான். ஒரு மெல்லிய புன்னகை, சுவாசத்தின் வேகம் அதிகப்படுவது போன்றவை உற்சாகமாக இருப்பதன் மற்ற சில அறிகுறிகள்.

ஒரு முக்கியமான விஷயம்... உங்களுக்கு எதிரே ஒரு நண்பர் மட்டும் இருந்தால், அவரைக் கையாள்வது எளிது. குழுவாக இருந்தால்?

உங்களை தெரியுமா உங்களுக்கு

உங்கள் குழுவை நீங்கள் வழிநடத்துவதற்குச் சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழுவினர் மொத்தமாகக் கூடி சந்திக்கும்போது, நீங்கள் அங்கே இருக்க வேண்டியது அவசியம்.

திட்டமிடும்போதும், முடிவுகள் எடுக்கும்போதும் குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க வேண்டும். ஒருவர் நல்ல யோசனை சொல்லும்போது அவரை மனம் திறந்து பாராட்ட வேண்டும். இது எவ்வளவு முக்கியமோ... அதே அளவு முக்கியம், ஒருவர் பொருத்தம் இல்லாத கருத்தைச் சொல்லும்போது அவரைக் கிண்டல் செய்யாமல் இருப்பது.

ஒரு குழுவுக்கு உந்துசக்தி சரியாக இல்லை என்றால், அதற்கு அந்தக் குழுவின் தலைவர்தான் காரணம். குழுவில் ஏதோ இரண்டு பேருக்கு இடையில் சின்னத் தகராறு. இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றால், அதை அப்படியே விட்டு விடாதீர்கள். இருவரிடமும் பேசிச் சரி செய்யுங்கள்.

குழுவினர் தங்களால் இயன்ற அளவு முயற்சி எடுத்த பிறகும் திட்டமிட்டபடி ஒரு காரியம் நடந்து முடியவில்லை. இப்போது என்ன செய்வது? மொத்தக் குழுவையும் கலைத்துவிட்டு, புது உறுப்பினர்களைத் தேடக் கூடாது. எங்கே தவறு நடந்தது என்பதைப் பற்றிப் பேச வேண்டும். முதலில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவார்கள். பேச்சுப் போக்கில் தவறு எங்கே நடந்தது என்று தெரியவரும். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று பேசித் தீர்க்கலாம்.

நடந்து செல்கிறவர்களுடன் நீங்களும் நடந்து பாருங்கள். ஓர் இடத்தைக் கடக்க 10 நிமிடங்கள் பிடிக்கிறது என்றால், அவர்களை ஓடச்சொல்லிவிட்டு, நீங்களும் சேர்ந்து ஓடுங்கள். அதே தூரம் பாதி நேரத்திலேயே முடிந்துவிடும். அதுதான் பிறருக்கு உந்துசக்தி அளிப்பதன் சிறப்பு.

இப்போது வாய்ப்பு உங்கள் கையில்.

(கற்போம்)