தொடர்கள்
Published:Updated:

அவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் !

கரு.முத்து படங்கள் : கே.குணசீலன்

##~##

கொள்ளிடம் கடைத்தெரு அப்படி ஒரு காட்சியை அதுவரை பார்த்தது இல்லை. சின்னச் சின்னப் பட்டாம்பூச்சிகள் மஞ்சள் வண்ணப் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்துகொண்டு முழுக்கைச் சட்டையும், கறுப்பு முழுக்கால் சட்டை அணிந்து வரிசையாக வந்துகொண்டு இருந்தார்கள்.

''அடி ஆத்தி, இது என்ன இத்தனை புள்ளைங்க தலையில் ஹெல்மெட் போட்டுகிட்டுப் போவுதுங்க?'' என்று பேருந்துக்குக் காத்திருந்த கிராமத்துப் பாட்டி ஒருவர் முகவாயில் கை வைக்க, ''எங்க ஸ்கூல்ல சுட்டி விகடன் சார்பில் அவதார் நிகழ்ச்சி நடக்குது ஆத்தா. அதில் கலந்துக்கத்தான் இப்படிப் போறோம்'' என்று பொறுப்பாய்ப் பதில் சொன்னான், ஏழாம் வகுப்புப் படிக்கும் அருண்பிரகாஷ்.

நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடத்தில் இருக்கும் சீனிவாசா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் சுட்டிகள் கட்டடப் பொறியாளராகத் தங்களை உருமாற்றிக்கொண்டு வந்திருந்தார்கள்.

''டேய், உன்கிட்ட ஒரு பென்சில்கூட இல்லை, நீ எப்படிடா இன்ஜினீயராக முடியும்?'' என்று கதிரவனைப் பார்த்துப் புகழேந்தி கேட்க, ''உன்னைப் பத்தித் தெரியும்டா. 'ஒரு அடி ஸ்கேல் எத்தனை அடி?’னு கேட்கிற நீயே இன்ஜினீயரா ஆகும்போது, நான் ஆக முடியாதா?'' என்று பதிலுக்குக் காலை வாரினான் கதிரவன்.

இப்படி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருந்தபோது வந்தது, நீண்ட விசில் சத்தம். உடனே எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தார்கள்.

அவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் !

பள்ளியின் தாளாளர் மோகனசுந்தரம், நிர்வாகி முருகேசன், முதல்வர் கனகசபை ஆகியோர் கட்டடப் பொறியாளர் சாமிநாதனுடன் உள்ளே நுழைந்தார்கள். ''நீங்கள் அணிந்து இருக்கும் இந்த ஆடை, கட்டடப் பொறியாளர்களுக்கு உரியது. அப்படி ஒரு கட்டடப் பொறியாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்'' என்று தாளாளர் மோகனசுந்தரம், எஸ்.என்.பி.பில்டர்ஸின் பொறியாளர் சாமிநாதனை அறிமுகப்படுத்த, மாணவர்கள் பொறியாளரைப் பிடித்துக் கொண்டார்கள்.

''கட்டடம் கட்டத்தான் கொத்தனார் போதுமே... அப்புறம் எதுக்கு சார் இன்ஜினீயர்?'' என்று எடுத்த எடுப்பில் அதிரடியாகக் கேட்டாள் சுவேதா.

''நல்ல கேள்விம்மா. கொத்தனார் செய்வதையே இன்னும் செம்மையாய்த் திட்டமிட்டு, சிக்கனமாய்க் குறைந்த செலவில், நவீன வசதிகளோடு செய்ய உதவி செய்வதுதான் எங்கள் வேலை. 25 வருடங்களுக்கு முன்பு வரை திண்ணை, முற்றம், ஹால், இரண்டு அறைகள், சமையலறை என்று ஒரே விதமாகத்தான் வீடுகள் கட்டப்பட்டன.  இப்போது அப்படியா? பல மாடல்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதிலும் அடுக்கு மாடிகளாக 50 வீடுகள் ஒரே கட்டடத்தில் கட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் எங்களைப்போன்ற பொறியாளர்கள் திட்டம் தீட்டினால்தான் கட்ட முடியும்'' என்றார் சாமிநாதன்.

அவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் !

''ஒரு சிறிய வீடு கட்டணும்னா எவ்வளவு ரூபாய் ஆகும்?'' இது பிரபாதேவியின் கேள்வி.

அவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் !

''இன்றைய நிலைமையில் 750 சதுர அடியில் வீடு கட்ட, ஒரு சதுர அடிக்கு 1,400 ரூபாய் செலவாகும்'' என்று சாமிநாதன் சொல்ல, ''ஆ... அவ்வளவா?'' என்று பிரவீனா வாய்பிளக்க ''யேய், நாம சம்பாதிச்சுக் கட்டுவோம்டி'' என்றாள் பிரபாதேவி.

''வீடு கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?'' என்று சாமிநாதன் கேட்க... ''செங்கல், சிமென்ட், ஆற்றுமணல், இரும்புக்கம்பி, கருங்கல் ஜல்லி'' என்று ஆளாளுக்குக் கத்தினார்கள்.  இவ்வாறு இன்னும் சில பல கேள்வி பதில்களில் கட்டடக் கலையின் தொழில்நுட்பங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டுவிட, ''சரி வாங்க, நாம் இப்போது புதிதாகக் கட்டப்படும் ஒரு கட்டடத்தைப் பார்ப்போம்'' என்று அருகில் உள்ள ஒரு கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார் சாமிநாதன்.

அங்கே சென்றதும் சந்தேகம் வந்துவிட்டது அகிலபாலனுக்கு. ''ஏன் சார், எல்லாக் கட்டடத்திலும் மாடிப்படியைச் சாய்ந்து இருக்கும் விதமாக கட்டுகிறார்கள்?'' என்று கேட்டான்.

''அதுதான் உயரமான கட்டடங்களில்   ஏறிச்செல்ல எளிதாக இருக்கும். இதே முறையில்தான் மலைப்பாதைகளும் அமைந்து இருக்கும்'' என்று விளக்கம் வந்தது சாமிநாதனிடம் இருந்து.

அவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் !

பிறகு கட்டடத்தின் உள்ளே போய் விதவிதமான தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பள்ளிக்குத் திரும்பினார்கள் மாணவர்கள்.

''யார் யார் கட்டடப் பொறியாளர்களாக ஆகப் போகிறீர்கள்?'' என்று நாம் கேட்க, பாதிப் பேருக்கும் மேல் கையைத் தூக்க... கையைத் தூக்காத சுட்டிகளிடம்  காரணம் கேட்டால்... 'ரொம்ப உயரம்னா எனக்கு பயம்’, 'வெயில்ல வேலை செய்யணும்’,  'கொத்தனார், கம்பி கட்டறவருன்னு பல பேரை வெச்சு வேலை வாங்குறது கஷ்டம்’ என விதவிதமான காரணங்களைச் சொன்னார்கள்.

''எல்லா வேலைகளிலும் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால், சிவில் இன்ஜினீயருக்கு மட்டும் இறக்கம் என்பதே இல்லை. எல்லா நாடுகளிலும் அதிகமான அளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று சொல்லி விடைபெற்றார் சாமிநாதன்.

''அப்படின்னா நாங்களும் சிவில் இன்ஜினீயராக ஆகப்போகிறோம்'' என்று உற்சாகக் குரல் இட்டவாறு வீடு திரும்பினார்கள் வருங்கால இளம் பொறியாளர்கள்.

சீனிவாசா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கொள்ளிடத்தில் 2001-ல் 70 மாணவர்களோடு துவங்கப்பட்டது. தற்போது 834 மாணவர்கள் படிக்கிறார்கள். ஏழை மாணவர்களின் மெட்ரிக்குலேஷன் கனவை நிறைவேற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சீர்காழி வட்டத்தில் மிகக் குறைவான கல்விக் கட்டணம் வாங்கும் பள்ளியாக இருக்கிறது. பெரும்பாலும் விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள்தான் இங்கே பயில்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாகப் பத்தாம் வகுப்பு வரையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.