தொடர்கள்
Published:Updated:

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ் படங்கள் : வீ.சக்தி அருணகிரி

##~##

'இளமையில் கல்’, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ஆகியவை நம் ஊர் சொலவடைகள். சிறிய வயதில் எளிதில் நிறையக் கற்கலாம் என்பது உளவியல். ஆர்வமும் அளவில்லாத பயிற்சியும் மேற்கொண்டால், எந்த வயதிலும் கற்கலாம் என்பதற்கு எண்ணிலடங்கா உதாரணங்களைக் கூற முடியும். மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் அவரது மோசமான கையெழுத்தை எண்ணி வருந்தியதுடன், அதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். இதோ, அவர் வருந்தி எழுதிய வார்த்தைகளைச் சற்றுப் பாருங்கள்.

'தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்துவிட்டதனால் எனக்குத் தீமை ஏற்படாது போனாலும், மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்துவிட்டதன் பலனை இப்போதும் அனுபவிக்கிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதி அல்ல என்ற கருத்து எனக்கு எங்கே இருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது.  தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும், இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப் பட்டேன். ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்துவிட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக்கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்ய முயன்றேன். ஆனால், காலம் கடந்துவிட்டது.

இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்துகொள்ள இயலவில்லை. ஒவ்வோர் இளைஞரும் இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துகளை எழுதுவதற்குக் கற்றுக்கொடுப்பதற்கு முன்னால், சித்திரம் வரையக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இப்போது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்துகொள்வதைப் போல், எழுத்துகளையும் பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து, அவற்றை வரையக் கற்றுக்கொண்ட பிறகு, எழுத்துகளை எழுதக் கற்கட்டும். அப்போது அந்தக் குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்’ என்றார்.

முத்தான கையெழுத்து !

அவரது சொந்த அனுபவத்தை சுயசரித்திரத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், எதிர்காலத்தில் என்னைப் போன்று யாரும் கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம் என்று குழந்தைகளை அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், நல்ல கையெழுத்துக் கைவர ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். அதன்படி கையெழுத்து எழுதிப் பழகும் முன், ஓவியங்களைக் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். எனவே, 'ஒவ்வோர் எழுத்தும் ஓவியம்தான். அதை எழுதாதீர்கள், வரையுங்கள்’ எனக் குறிப்பிட்டு உள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

மகாத்மாவே உணர்ந்து எழுதிய இந்த வார்த்தை களைக் கண்டு, வயதில் மூத்தவர்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மகாத்மா தனது தத்துவ வார்த்தைகளால், 'நீங்கள் எதை மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை மாற்றத் தயங்காதீர்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளதையும் பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். எந்த வயதிலும் ஆர்வத்துடன் பயின்றால், சாதிக்க முடியும் என்பதை நமக்கான ஆறுதல் மொழியால் அவரே உணர்த்தி இருக்கிறார்.

'உங்கள் எதிர்காலம் இன்றைய நிகழ்கால நேரங்களில் ஒளிந்திருக்கிறது.’ இதுவும் மகாத்மாவின் மகத்துவமான தத்துவங்களில் ஒன்று. எனவே, உங்கள் எதிர்காலம் ஒளிர இன்றே பயிற்சியைத் துவக்குங்கள். வெற்றி நம் வாசலில் கரம் பிடிக்கக் காத்திருக்கிறது.