ஜோரா போகலாம் ஜாலி டூர்!
Published:Updated:

அவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் !

பி.ஆண்டனிராஜ் எல்.ராஜேந்திரன்

##~##

ஒரே இடத்தில் கடற்படையைச் சேர்ந்த 30 அதிகாரிகளைச் சந்தித்தால் எப்படி இருக்கும்? என்ற நம் எண்ணம், சமீபத்தில் நிஜமானது. நெல்லை, கே.டி.சி. நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் மாணவ, மாணவிகள் பிரேயருக்கு வரிசையில் நின்றுகொண்டு இருந்தனர்.

அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 30 பேர் கடற்படை கமாண்டர் வேடம் அணிந்து, அங்கே வர இருந்த வி.ஐ.பி-யை எதிர்நோக்கிப் பள்ளிக்கு வெளியே காத்து நின்றார்கள். இதுபற்றிய விஷயம் தெரியாமல், பிரேயரில் கூடி இருந்தார்கள் மற்றவர்கள். அடுத்த நிமிடம், அங்கே சர்ரென விரைந்து வந்த கடற்படை ஜீப், கமாண்டர்கள் கெட்-அப்பில் இருந்த மாணவர்கள் அருகில் நின்றது. கதவைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்து வந்த ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ரெஜிமென்டின் கமாண்டன்ட் சிவசிங், 'ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... சரியான நேரத்துக்கு வந்துட்டேனா? வாங்க, எல்லோரும் பிரேயருக்குப் போய் அசத்துவோம்’ என ஜாலியாகச் சொன்னார்.

அடுத்த நொடி, உடம்பை விறைப்பாக ஆக்கிக்கொண்ட அவர், 'பரேட்... அட்டென்ன்ன்ஷன்’ என்றபடி மார்ச் ஃபாஸ்ட் செய்து அவர்களை அழைத்துக்கொண்டு பிரேயர் நடந்த மைதானத்துக்குள் நுழைந்தார். கடற்படை உடையில் வந்த சுட்டிகளை சக மாணவர்களே சிறிது நேரத்துக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.

பள்ளியின் முதல்வர் வசந்தா ரூபி ஜேம்ஸ், இந்த மாணவர்கள் பற்றியும் அவர்கள் கடற்படை கமாண்டன்ட் சிவசிங்குடன் கலந்துரையாட இருப்பது குறித்தும் தெரிவித்த பிறகே, அடடே, நம்ம ஸ்கூல் நண்பர்கள்தான் என்பது புரிந்து,  அசடு வழிந்தார்கள்.

அவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் !

பின்னர், கமாண்டர்கள் அனைவரும் மீட்டிங் ஹால் சென்றனர். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் படைப் பிரிவின் உடையை அணிந்ததாலோ என்னவோ, அந்த அரங்கமே அமைதியாக இருந்தது. கமாண்டர் சிவசிங், அவர்களை அமரச் சொன்ன பிறகே அனைவரும் அமர்ந்தனர். அவர் கையோடு கொண்டுவந்திருந்த லேப்டாப்பில் கடற்படை குறித்து நிறையப் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவற்றைப் பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் பெரிய திரையில் சுட்டி கமாண்டர்களுக்கு திரையிட்டுக் காட்டினார் சிவசிங்.

கடற்படை வீரர்கள் அணிவகுப்பு, கப்பலில் தயாராக நிற்கும் வீரர்கள், மிகப் பெரிய போர்க் கப்பலில் உள்ள விமானத் தளத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாயும் போர் விமானங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் என அந்த வீடியோக் காட்சிகளைப் பார்த்த சுட்டிகள், தாங்களும் அந்த வீரர்கள் போலவே உடலில் இறுக்கமும் முகத்தில் பெருமிதமும் காட்டி நின்றார்கள்.

அவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் !

அடுத்து, மாணவர்களிடம் பேசிய கமாண்டன்ட் சிவசிங், ''உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு கடல்தான் என்பதால்,  தண்ணீர் மூலமாகத்தான் நிறையப் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. குறிப்பாச் சொல்லணும்னா உலகத்தில் நடக்கும் வர்த்தகத்தில் 90 சதவிகிதத்துக்கும் அதிகம் கடல் மார்க்கமாகவே இருக்கு. அதனால், நமது நாட்டின் கடற்படை என்பது பாதுகாப்புக்கு என்பதோடு மட்டும் அல்லாமல் வர்த்தக உதவிக்கும் துணை நிற்கிறது. நமது நாடு இதுவரை பாகிஸ்தானுடன் மூன்று முறை போரிட்டு இருக்கு. சீனாவுடனும் நாம் சண்டை போட்டிருக்கோம். அதனால், போருக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நாங்க எப்பவும் எதுக்கும் தயாரா இருக்கோம்'' என்றதைக் கேட்ட சுட்டிகள், ''வீ லவ் இண்டியா.'' எனக் கோரஸாகச் சொன்னதும் நெகிழ்ச்சி அடைந்தார் கமாண்டண்ட் சிவசிங்.

பின்னர் அவர், 'நீங்க படகில் போயிருக்கீங்களா?’ எனச் சுட்டி வீராங்கனை ஜோத்ஸனா ஜேனிடம் கேட்டதும்  ''ஆமா சார்.. கன்னியாகுமரி டூர் போயிருந்தப்ப விவேகானந்தர் பாறைக்கு படகில் போனேன்’ என்றாள். ''கடல் பகுதியைப் பாதுகாக்க கப்பல் மட்டும் அல்லாமல் நிறையப் படகுகள் கடற்படையில் இருக்கு. அதன் மூலமாகவும் கடற்படையினர் ரோந்து வருவாங்க'' என்று சிவசிங் சொன்னதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்கள் சுட்டிகள்.  

அவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் !

அப்போது 6-ம் வகுப்பு மாணவியான பிரேம் சகாய உஷா, ''சார், கடலில் கப்பல்கள் எதை மையமா வெச்சு சரியான பாதையில் போகுது? கடலில் எத்தனை பாதைகள் இருக்கு?'' எனக் கேட்டாள்.

''கடலில் நிறையப் பாதைகள் இருக்கு. அதில் மட்டுமே கப்பல்கள் போகும். சாலையில் பள்ளம் மேடு இருப்பதுபோல், கடலிலும் நிறைய ஆபத்துகள் இருக்கு. தண்ணீருக்குள் மலையே இருந்தாலும் வெளியே தெரியாது, அதில் கப்பல் முட்டினால் அதோகதிதான். அதனால், குறிப்பிட்ட பாதையில் மட்டுமே கப்பல்கள் போகும். நான் கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு நல்லிணக்கப் பயணமாகவும் நமது கடற்படையின் திறமைகளை வெளிப்படுத்தவும் போயிருக்கேன். ஆனாலும் இதுவரை எல்லாக் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்ள இயலவில்லை.''  என்றவர், ''உங்களில் எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும்?'' என்று கேட்டார்.

10 பேர் கையை உயர்த்தினார்கள். ''மற்றவர்களும் நீச்சல் கத்துக்கங்க,. அது எல்லா வகையிலும் நல்லது'' என்றார்.

''சார், நீங்க எவ்வளவு நேரம் கடலில் இருக்க வேண்டியிருக்கும்?'' என்று ஆண்ட்ரூஸ் கேட்டதும், ''கடற்படையில் டெக்னிக்கல், எக்ஸிக்யூட்டிவ், எஜுகேஷனல், அட்மினிஸ்ட்ரேஷன் எனப் பல பிரிவுகள் இருக்கு. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வேலை இருக்கு. அதுக்கு ஏத்தபடி அவங்க கப்பலில் இருக்கும் நாட்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்'' என்றார்.

அவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் !

'சார்.. இங்கே உங்களோட ஆபீஸ் எங்கே இருக்கு? அதில் என்ன வேலை செய்றீங்க?’ என்றான் பாலசுப்பிரமணியன்.

''நெல்லை மாவட்டம், விஜயநாராயணத்தில் கடற்படை முகாம் இருக்கு. 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த முகாமில் இருந்து நாங்கள் பல்வேறு கப்பல்களுக்கும் சிக்னல் அனுப்பும் வேலையைச் செய்றோம்.'' என்றார்.

''கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் உங்களுக்கு தகவல் கொடுக்க முடியுமா?'' என்று ஆண்ட்ரூஸ் கேட்டதும், ''குட் கொஸ்டீன்!'' எனச் சுட்டிக்குக் கை கொடுத்தவர், ''கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாகச் செல்லும் வீரர்களுக்குச் சில கட்டளைகளையும் தகவல்களையும் சிக்னல் மூலமாக நாங்கள் அளிப்போம்'' என்றார்.

''சார் ஒரு சந்தேகம். நேவியில் பெண்களைச் சேர்ப்பீங்களா?'' என ரோஸ் ஆர்வமாகக் கேட்டாள். ''நிச்சயமா. கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்குவது, அலுவலகத்தில் வேலை செய்வது, கல்விப் பணியில் ஈடுபடுவது என நிறைய வேலைகள் இருக்கு. அதனால், பெண்கள் நிச்சயம் வரலாம்'' என்றவர், ''இங்கே இருக்கிற கமாண்டன்ட்களில் இருந்து எத்தனை பேர் நிஜமாகவே எங்களோடு சேர்ந்து நாட்டைக் காக்கும் வேலையைச் செய்ய வருவீங்க?'' என்றதுதான் தாமதம், ஒட்டுமொத்தமாக எழுந்து, 'நான் வருவேன்’ என ஆளாளுக்கு ஆர்வம் காட்டினார்கள்.

''இந்த டீமில் இருக்கும் எல்லோரும் கடற்படைக்கு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்'' என்றார் சிவசிங்.

''வீ லவ் இண்டியா... ஜெய் ஹிந்த்'' என்ற கோஷத்துடன் அவருக்கு சல்யூட் வைத்தார்கள் நாளைய கமாண்டர்கள்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்து இருக்கிறது, ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. நகர்ப்புற மாணவர்களுக்கு இணையான கல்வியைக் கிராமப் பகுதி மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், இதன் நிறுவனர் ஜேம்ஸ் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். ''17 ஆண்டுகளாகத் தரமான கல்வியுடன் இன்றைய காலத்துக்குத் தகுந்த தனித்திறன் வளர்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பரதம், இசை, சங்கீதம், யோகா, நீச்சல், கராத்தே போன்றவற்றுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது'' என்கிறார், பள்ளியின் தாளாளர் ஜான்சன் ராஜா. பள்ளியின் முதல்வர் வசந்தா ரூபி ஜேம்ஸ், ''தரமான கல்வியுடன் நல்ல ஒழுக்கத்தைப் போதிப்பதும் ஆசிரியர்களின் கடமை என்பதைப் புரிந்து செயல்படுகிறோம்'’ என்கிறார்.