##~##

''ஒரு டீச்சர், ஸ்டூடன்ஸ்கிட்ட 'ஸாரி’ கேட்டுப் பார்த்திருங்கீங்களா? எங்க டீச்சர் ஈகோ பார்க்காமக் கேட்பாங்க'' என்கிறார்கள் திண்டுக்கல் - வத்தலக்குண்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள். தங்கள் அறிவியல் ஆசிரியையும் தலைமை ஆசிரியையுமான சுந்தரி பற்றி மேலும் சொல்கிறார்கள்.

சிவகாதம்பரி: ''அறிவியல் பாடத்தை ரொம்ப சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லித்தருவாங்க. எங்கள் பள்ளியில் கடந்த சில வருடங்களாகவே ஆண்டு விழா நடக்கலை. சுந்தரி டீச்சர் தலைமை ஆசிரியரா வந்ததும் ஆண்டு விழா, பொங்கல் விழா என எங்கள் பள்ளியே கோலாகலமா இருக்கு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பவித்ரா: ''சமீப காலமாக மாணவிகள் மீதான பாலியல் வன்முறை அதிகமாயிருச்சு. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில், நாம் எப்படி ஜாக்கிரதையாவும் முன்னெச்சரிக்கையாவும் இருக்கணும்னு சொல்லித் தருவாங்க. எல்லாரிடமும் பாகுபாடு இல்லாமல் பாசத்தோட பழகுறதும் அவங்க ஸ்பெஷல்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

முத்துமணி: ''எங்க அம்மா, அப்பா சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க. அதனால், என்னால் படிக்கவே முடியலை. எனக்கு ரொம்பக் கவலையா இருந்துச்சு. இந்த விஷயத்தை சுந்தரி டீச்சர்கிட்ட சொன்னேன். உடனே, எங்க அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப வீட்ல நிம்மதியா படிக்க முடியுது. ஒரு தடவை சென்னைக்கு டூர் போறதுக்கு என்கிட்ட பணம் இல்லை. அப்போ, டீச்சர்தான்  கூட்டிட்டுப்போனாங்க. அவங்க டீச்சர் இல்லை, என்னோட இன்னோர் அம்மா.''

மீனா: ''நான் கலைப் போட்டிகளில் கலந்துக்கவே மாட்டேன். ஒரு தடவை டீச்சர் கூப்பிட்டு, 'உன் கையெழுத்து  நல்லா இருக்கு. நீ கட்டுரைப் போட்டியில கலந்துக்க’னு உற்சாகப்படுத்தினாங்க. நானும் கலந்துக்கிட்டேன். எனக்குப் பரிசு கிடைச்சுது. என்னோட திறமை என்னன்னு சுந்தரி டீச்சர் புரியவெச்சுட்டாங்க. என்கிட்ட ஒரு யூனிஃபார்ம்தான் இருந்துச்சு. அவங்கதான் எனக்கு புது யூனிஃபார்ம் வாங்கித் தந்தாங்க.''

முத்துச்செல்வி: ''நாங்க ஏதாவது சேட்டை பண்ணினா, கோபமா எச்சரிப்பாங்க. அடுத்த நிமிஷமே எங்ககிட்ட வந்து 'ஸாரி’ கேட்பாங்க. டீச்சரே இப்படி ஸாரி கேட்ட பிறகு, நாங்க எப்படி சேட்டை செய்வோம்? நான் பிறந்தநாளே கொண்டாடினது இல்லை. என் பிறந்தநாளுக்கு, பிரேயர்ல எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு நிக்கவெச்சு வாழ்த்துச் சொன்னப்ப கண்ணுல தண்ணி முட்டிருச்சி.''

- கா.பெனாசீர்   படம்: வீ.சிவக்குமார்  

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - ஊஞ்சவேலான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நாயகன் மணிகண்டன். எட்டாம் வகுப்புப் படிக்கும் இவரின் சிறப்புகளை அடுக்கிறார்கள் ஆசிரியர்கள்.

ஜான்சி ராணி (தமிழ் ஆசிரியை): ''சக மாணவர்களோடு அன்பாகப் பழகுவான். ஆசிரியர்களுக்கும் நல்ல நண்பனா இருப்பான். படிப்பிலும் சுட்டி. நல்ல மனப்பான்மைகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுவான். நல்லொழுக்கத்துக்கு இவன்தான் எடுத்துக்காட்டு.''

ராஜேஸ்வரி (சமூக அறிவியல் ஆசிரியை): ''நிறைய நல்ல புத்தகங்களைக் கேட்டு வாங்கிப் படிப்பான். வகுப்பு இல்லாத நேரங்களில், மணியை லைப்ரரியில் பார்க்க முடியும். தான் மட்டும் படிக்காமல், தன் நண்பர்களையும் புத்தகம் வாசிக்க ஊக்கப்படுத்துவான். நண்பர்களின் பிறந்த நாளுக்கு புத்தகங்களைப் பரிசாக் கொடுப்பான்''

கிருஷ்ணவேணி (கணித ஆசிரியை): ''தனக்கு ஒரு சந்தேகம் வந்துட்டா, கூச்சப்படாமக் கேட்டுத் தெரிஞ்சுப்பான். கணித சூத்திரங்களை மனப்பாடம் பண்ண மாட்டான். அந்த ஃபார்முலாவோட அர்த்தத்தைக் கேட்டுப் புரிஞ்சு படிப்பான். சில நேரங்களில், மணி கேட்கிற சந்தேகங்களைத் தீர்க்க நாங்க ஹோம் வொர்க் பண்ணவேண்டி இருக்கும்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

சௌந்தரவேணி (ஆங்கில ஆசிரியை): ''வகுப்பில் டீச்சர்ஸ் யாரும் வரலைனா, தானே க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுருவான். ரொம்ப சுவாரஸ்யமா க்ளாஸ் எடுக்கிறதால், வகுப்பே அமைதியாக் கேட்டுட்டு இருக்கும். மணி, தலைமைப் பண்பு மிகுந்தவன் என்பதற்கு இதுவே சாட்சி.''

ரேணுகா (அறிவியல் ஆசிரியை): ''டிக்ஷனரி பயன்படுத்துறதில் கெட்டிக்காரன். தினமும் ஐந்து புது ஆங்கில வார்த்தைகளையும், அர்த்தங்களையும் போர்டில் எழுதிப்போட்டு எல்லாரையும் படிக்கவைப்பான். எல்லாருக்கும் ஒரு முன்மாதிரி மாணவன்னா அது மணிதான்.

தெய்வானை (தலைமை ஆசிரியை) : இந்தக் காலத்துப் பசங்க ஃபேஸ்புக், வீடியோ கேம்ஸ்னு ஆர்வம் காட்டுவாங்க. ஆனா, மணி வித்தியாசமானவன். கம்பராமாயணம், மகாபாரதம் மாதிரியான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பான். தன் வகுப்பு மாணவர்களுக்கு நீதிநெறிக் கதைகள் நிறைய சொல்வான். கதை சொல்லும் கலையில் வல்லவன்.''

             - கி.விக்னேஷ்வரி