##~##

'கற்றல் என்கிற உணர்வை உங்களுக்குள் உருவாக்குங்கள். உங்களுக்குள் எழும் ஆற்றல் அலைக்கு யாரும் அணை போட முடியாது' என்கிறார் அந்தோணி ஜெ.டி.ஏஞ்ஜலோ.

அதுபோல்தான் கையெழுத்துப் பயிற்சியிலும் ஆர்வத்துடன் முயற்சித்தால், முத்தான கையெழுத்து வசப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் சொன்னதுபோல் எளிமையில் இருந்து கடினம் என்பதே நம் பயிற்சியின் சிறப்பம்சம். நம் பயிற்சியின் நோக்கமே, முத்து முத்தான அழகான கையெழுத்தை எழுதுவதுதான். எனவே, அவசரம் வேண்டாம். ஆரம்பத்தில் வேகம் குறைத்து, நிதானமாக எழுதினால் அழகு கூடும். கார் அல்லது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஆரம்பத்தில் மெதுவாகவே ஓட்டுகிறோம். நன்கு பழகிய பின்னரே பந்தயத்தில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறுகிறோம்.

படிப்படியாக முன்னேறுவதே பாதுகாப்பானது. அதன் அடிப்படையில் ஆரம்பத்தில் எளிமையான வடிவம்கொண்ட உயிர் எழுத்துகளை ஏற்கெனவே எழுதிப் பயிற்சி செய்திருக்கிறோம். இப்போது, உருவத்தில் கடினமான வடிவம்கொண்ட எழுத்துகளை எழுதத் தொடங்குவோம்.

முத்தான கையெழுத்து !
முத்தான கையெழுத்து !

அ, ஆ, இ போன்ற எழுத்துகள்  வளைவு, நெளிவு, சுளிவுகளுடன் காணப்பட்டாலும், அவற்றை ஓர் ஓவியம்போல் பாவித்து எழுதினால், அழகாக எழுத முடியும். உதாரணமாக, அ என்கிற எழுத்தை மாட்டு வண்டியின் மேற்புறத் தோற்றம்போலவும், இ என்கிற எழுத்தை ஒருவர்  பத்மாசனத்தில் இருப்பதைப் போலவும், ஓ என்கிற எழுத்தை விநாயகப் பெருமானின் தலை போலவும் கற்பனை செய்து பாருங்கள்.

இப்படி மனதில் உருவங்களுடன் ஒப்பிட்டு எழுதிப் பழகினால், எழுதுகிறோம் என்கிற மனநிலை இல்லாமல், வரைகிறோம் என்கிற எண்ணம் தோன்றும். அது உங்கள் கையெழுத்தைப் பிரகாசிக்கச் செய்யும். ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒவியம்தான். எனவே, எழுதாதீர்கள்... வரையுங்கள்!

முத்தான கையெழுத்து !

அ, ஆ, இ உருவத்தில் ஒன்றுபோல் இருப்பதால், இவற்றை அடுத்தடுத்து எழுதிப் பழகுதல் நன்று. அதன் பின்னர், உயிர் எழுத்துகளில் கடைசியில் இருக்கும் ஒ, ஓ, ஒள ஆகியவற்றை எழுதலாம். இந்தக் கடைசி மூன்று எழுத்துகளும் உருவத்தில் ஒன்றுபோல் இருப்பவை. உயிர் எழுதுகளுடன் மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகளை இணைத்து, முன் பக்கத்தில் சில வார்த்தைகளைப் பயிற்சிக்காகக் கொடுத்திருக்கிறோம். அவற்றைக் கவனமாகப்  பயிற்சி செய்யுங்கள்.

இது வரை பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துகளை அழகாக எழுதிட முயன்று வரும் உங்களைப் பாராட்டி மகிழ்கிறோம். இன்று வரை பயின்று வரும் உங்களின் கையெழுத்து எப்படி முன்னேற்றம் அடைந்துள்ளது எனப் பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்கிறது.  இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கும், 'நாம் சரியாகத்தான் எழுதிவருகிறோமா?’ என்று சந்தேகம் வரலாம்.

முத்தான கையெழுத்து !

இவற்றுக்கு எல்லாம் இனி வரும் இதழ்களில் ஆலோசனை சொல்லப்போகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு வெள்ளைத்தாளில் ஏதாவது ஒரு பத்தியை (ஜீலீணீக்ஷீணீரீக்ஷீணீஜீலீ) உங்கள் கையெழுத்தில் எழுதுங்கள். பிறகு, உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணுடன் சுட்டி விகடன் அலுவலகத்துக்கு அனுப்பிவையுங்கள். உங்களின் கையெழுத்தை ஆய்வுசெய்து மேலும் எப்படிச் செம்மைப்படுத்தலாம் என்கிற ஆலோசனைகளை அடுத்தடுத்து வரும் இதழ்களில் வழங்கிட ஆவலுடன் இருக்கிறோம்.

என்ன, தயாரா சுட்டிகளே?

முத்தான கையெழுத்து !

(எழுதுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism