Published:Updated:

ஆரோக்கியம் விளையும் பூமி!

ஆரோக்கியம் விளையும் பூமி!

##~##

விடுமுறை என்றால் கடற்கரை, தீம் பார்க் என்றுதான் போகணுமா? ஒரு மாற்றத்துக்காக நண்பர்களுடன் ஒரு விவசாயப் பண்ணைக்குச் சென்றேன். வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு சட்டை இல்லாத விவசாயியைப் பார்த்திருப்போம். ஆனால், அரிபிரசாந்த் வித்தியாசமான விவசாயி. ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டு பைக்கில் வந்து இறங்கினார். இவர், அய்யன் ஆர்கானிக் மற்றும் கூட்டுப் பண்ணையின் உரிமையாளர்.

இவரின் விவசாய முறையும் வித்தியாசமானது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார். இதைத்தான் இயற்கை விவசாயம் அல்லது ஆர்கானிக் ஃபார்மிங் என்கிறார்கள்.  பல தலைமுறைகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் செய்ததுதான் இது. சில அறிவியல் முன்னேற்றத்துடன், நவீன இயந்திரங்களைக்கொண்டு செய்கிறார்.

ஆரோக்கியம் விளையும் பூமி!

''செயற்கை உரங்களைப் பயன்படுத்திச் செய்யும் விவசாயத்தில் நிலம் விரைவிலேயே தனது சக்தியை இழந்துவிடும். ஆர்கானிக் முறையில் 60% உற்பத்தியே கிடைத்தாலும் இந்த உணவு, உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. தவிர, அடுத்த தலைமுறைக்காக மண், தண்ணீர், காற்று ஆகியவற்றைப் பாதுகாக்க முடியும். அதுதானே முக்கியம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பது சுயநலம்.'' என்கிறார் அரிபிரசாந்த்.

மரத்தின் தழைகள், மாடு, ஆடு, கோழிக் கழிவுகளில் இருந்து மற்றும் விதைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு ஆகியவற்றையே பயன்படுத்தி உரம் தயாரிக்கிறார் அரிபிரசாந்த்.

ஆரோக்கியம் விளையும் பூமி!

அரிசி, தர்பூசணி, வெள்ளரி, சில மர வகைகள் என அனைத்துமே இங்கே இயற்கை விவசாயம் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ''ஆர்கானிக் உணவில் ரசாயனக் கழிவு குறைவு. இதைச் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி, இதயநோய் போன்ற பிரச்னைகள் இருக்காது. உங்களைப் போன்ற சுட்டிகள்  இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற விழிப்பு உணர்வை அடைந்தால், அதுதான் எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி'' என்கிறார் அரிபிரசாந்த்.

இயற்கை விவசாயத்தைக் கரம் கூப்பி வரவேற்போம்!

த.பிரியங்கா, வேல்ஸ் வித்யாஸ்ரம், பழைய பல்லாவரம், சென்னை-43.

அடுத்த கட்டுரைக்கு