##~##

''வீட்டைப் போலவே ஊரையும் பள்ளியையும் நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்'' என்று சொல்லும் கிஷோர், அதைச் செயலிலும் செய்துகாட்டிவருகிறார்.

சுனாமியால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் கீச்சான் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார் கிஷோர். கீச்சான் குப்பம் சுனாமியால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது என்பதால், அங்கு இருந்தவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கொடுத்திருக்கிறார்கள்.  புதிய இடத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு விடப்பட்டுள்ள தனிப் பேருந்தில் மாணவர்களைப் பத்திரமாக ஏற்றிவிடுவதில் துவங்குகிறது கிஷோரின் சமூகப் பணி. கிராமம் முழுவதும் சுகாதார விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் பிரசாரம் செய்யும் வேலையைக் கிஷோருக்குத் தந்துள்ளார் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசாங்கத்தில் துறைவாரியாகப் பணிகளைக் கவனிக்கும் அமைச்சர்களைப் போல கிஷோர் படிக்கும் பள்ளியின் பணிகளையும் பிரித்திருக்கின்றனர். கிஷோர்தான் அந்தப் பள்ளியின் சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்வி அமைச்சர்.

மாண்புமிகு மாணவன் !

பள்ளிக்கு முதல் ஆளாக வந்துவிடும் கிஷோர், எல்லா வகுப்புகளும் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பதே முதல் வேலை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும், பிரேயரை செம்மையாக நடத்துவதும் கிஷோரின் முக்கிய வேலை. பள்ளியில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று கிஷோர் சுறுசுறுப்பாகப் பிரிப்பது, வருகைப் பதிவேட்டைச் சரிபார்ப்பது, சரியான நேரத்துக்கு மணி அடிப்பது போன்றவற்றையும் கனிக்கிறார். இதில் எல்லாம் சரி, கிஷோர் படிப்பில் எப்படி என்றுத்தானே யோசிக்கிறீர்கள். வகுப்பில் அவர் கேட்கும் கேள்விகளுக்காகவே முன்தயாரிப்புகளோடு வருவேன் என்கிறார் வகுப்பு ஆசிரியர்.

''சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க,  ஒவ்வொரு மனிதரும் தன்னால் இயன்றதைச்  செய்ய வேண்டும். அதைத்தான் நண்பர்களோடு செய்துவருகிறேன்.'' என்று அடக்கமாகச் சொல்லும் கிஷோரை மாணவர்கள் பின்பற்ற வேண்டியது கடமையாகும்.