##~##

நான்காம் பகுதிக்குள் செல்வதற்கு முன், சென்ற பகுதியில் கற்றுக்கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

சப், சட, யம், வம், நர், பக், பய, பச, பய், பத, பய், நர.

வடம், நடம், வட்ட, சக்கரம், கொய்யா பழம், தட்டம், பம்பரம், தயக்கம்.

நீங்கள் தமிழ் கற்றுத்தரும் பயனாளி, சென்ற முறையைவிட விரைவாகப் படிக்கிறாரா? அப்படியென்றால், நீங்கள் சரியாகப் பயிற்சி அளித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

இந்தப் பகுதியில், நான்கு அட்டைகளில் எட்டு எழுத்துகள் உள்ளன. சென்ற பகுதியில் சொன்னதைப் போல் மெய்யெழுத்து முதலாவதாகவும் உயிர்மெய் எழுத்து இரண்டாவதாகவும் இருக்கிறது.

முன்புபோலவே இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள எழுத்துகளையும் ஒலித்துப் பழக வேண்டும். இரண்டு எழுத்துகளைக் கற்றுக்கொண்ட பின்பு, செய்தித்தாளில் அந்த எழுத்துகளை வட்டமிட வேண்டும். அவ்வாறு வட்டமிடும்போது, வரியற்றித் தேட வேண்டும்.

இனிதாகக் கற்போம் தமிழ் !

எழுத்துகளைச் சரியாக ஒலித்துப் பழகிவிட்டால், சொற்களைத் தெளிவாகப் படிப்பது எளிமையாகிவிடும். அதனால், அட்டையில் காட்டப்பட்டிருக்கும் எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ல,ள-இந்த இரண்டு எழுத்துகளுக்கும் ஒலிப்பு முறை சற்று மாறுபட்டது. கீழே கொடுத்துள்ள படங்களைப் பாருங்கள்.

இனிதாகக் கற்போம் தமிழ் !

முதல் படத்தில் நாக்கின் நுனி, மேல் வரிசைப் பற்களுக்குப் பின்னால் (மேல் அண்ணம்) தொட்டுள்ளது. இப்படி வைத்து ஒலித்தால், 'ல’ ஆகும்.  

இரண்டாம் படத்தில் நாக்கின் நுனி, கொஞ்சம் உள்ளே சென்று நடு அண்ணத்தைத் தொட்டுள்ளது. இப்படி வைத்து ஒலித்தால், 'ள’ ஆகும்.

இதே முறைதான் ன, ண எழுத்துகளுக்கும்.

கண்ணாடி முன் நின்று இதைப் பழகினால் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

இப்போது 11அ, 12அ, 13அ, 14அ அட்டைகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் வாசித்துப் பழகுங்கள். படிப்பதற்கு சிரமப்படும் சொற்களை மீண்டும் மீண்டும் வாசிக்கும் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

இனிதாகக் கற்போம் தமிழ் !

இந்தப் பகுதியில் ல், ல, ன், ன, ண், ண, ள், ள போன்ற எழுத்துகளைக் கற்றுக்கொண்டோம். இதுவரை 28 எழுத்துகளைப் பழகியுள்ளோம்.

     - தொடர்ந்து கற்போம்...