##~## |
அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறது, புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி.
3,000 சதுர அடியில் அழகிய தோட்டம், 200-க்கும் மேற்பட்ட பலவகையான பட்டாம்பூச்சிகள், மீன்குஞ்சு களோடு தொட்டி என அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். 'இதுக்குக் காரணம் எங்க செல்வகுமார் சார்தான்’ என்கிறார்கள் மாணவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆரோவில் 'மாத்திர் மந்திர்’ பகுதியிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி. இதன் சமூக அறிவியல் ஆசிரியர் செல்வகுமார். அவரே தோட்டப் பராமரிப்புப் பணிகளையும் கவனித்துவருகிறார்.

''இந்தப் பள்ளியில் இருக்கும் ஒவ்வோர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குழுவாகச் செயல்பட்டதன் பலன்தான் இந்தத் தோட்டம். பசங்க ஒருமுறை முசுமுசுக்கை செடியைக் காட்டி, 'இது பாம்பு பழம்... விஷம்’னு தப்பாகச் சொன்னார்கள். அப்போதுதான் 'இதுபோல தவறான பல விஷயங்கள்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தேன். எங்கள் பள்ளி அருகே புதர் மண்டிய இடம் இருந்தது. அதை 2007-ல் சீர்செய்து, தோட்டம் அமைக்க ஆரம்பித்தோம்'' என்கிறார் செல்வகுமார்.
தோட்டம் அமைக்கத் தேவையான செடிகளை எல்லோருமே சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாணவர்கள், பள்ளிக்கு வரும் வழியில் சாலையோரம் புதிதாக ஒரு செடியைப் பார்த்தால், அதைப் பள்ளித் தோட்டத்துக்கு கொண்டுவந்து கொடுப்பார்கள். அதை அங்கே நட்டுவைத்து, கவனமாகப் பராமரிக்கவும் ஆரம்பித்தார்கள்.

''இப்படியாக எங்களின் தோட்டம் உருவாக ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக, மருத்துவக் குணநலன்கள்கொண்ட செடிகளைத் தேடிப்பிடித்து வளர்க்க ஆரம்பித்தோம். கொல்லிமலைக்குச் சென்று விதைகளை வாங்கி வந்தோம். தற்போது 250 வகையான செடிகள் இங்கே உள்ளன. அதில் 173 வகைச் செடிகள் மருத்துவக் குணம்கொண்டவை. தோட்டத்துக்குத் தேவையான உரங்களையும் இயற்கையாக நாங்களே தயார்செய்கிறோம்'' என்கிறார் செல்வகுமார்.

மேலும், தோட்டத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக, முனைவர் ஒருவரின் உதவியுடன் பட்டாம்பூச்சிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது இந்தத் தோட்டத்தில் 13 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன.
''பள்ளிப் பிள்ளைகளுக்கு பள்ளி நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால், தோட்டத்திலுள்ள மூலிகைச் செடிகளைக்கொண்டு குணப்படுத்துகிறோம். நாட்டு வைத்தியர்கள் இங்கே வந்து, அவர்களுக்குத் தேவையான செடிகளை வாங்கிச் செல்கிறார்கள். விதை வங்கியும் இருக்கிறது. விருப்பத்துடன் கேட்பவர்களுக்குக் கொடுக்கிறோம். இப்போது காய்கறிச் செடிகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். தோட்டப் பராமரிப்புக்கு வகுப்பும் ஒதுக்கியிருக்கினோம்'' என்றார் பூரிப்போடு.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ''எங்கள் பள்ளி மாணவர்களிடம் மதிய உணவு வீணாவது கிடையாது. மீதம் உள்ள உணவைத் தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்துகிறோம். படிப்பிலும் எங்கள் மாணவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். 2006-ல் இந்தப் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 35. தற்போது (2013-ல்) 96 சதவிகிதமாக உள்ளது'' என்கிறார் பூரிப்புடன்.
குழுவாக செயல்பட்டாலே வெற்றிதான்!