Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்

அன்பால் உலகினை வென்ற அன்னை தெரசாவின் வாழ்க்கையைச் சென்ற இதழில் காப்பி அடித்தோம். இந்த முறை கொடிய நோயில் இருந்து மீண்டு, உலக சாதனைப் படைத்த விளையாட்டு வீரரின் மன உறுதியைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

 லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் 1971-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ்ஸில் பிறந்தார். சிறு வயதில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். 'ப்ளானோ நகர்’ அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !
##~##

நீச்சல், ஓட்டம் மற்றும் சைக்கிளிங் ஆகிய மூன்று போட்டிகளையும் ஒருங்கே கொண்டது 'டிரையத்லான்’ போட்டிகள். இதுபற்றிக் கேள்விப்பட்டதும், ஆம்ஸ்ட்ராங் நீச்சல் போட்டிகளில் மட்டும் கலந்துகொள்வதை நிறுத்திக் கொண்டு, டிரையத்லான் போட்டிகளில் கவனம் செலுத்தினார்.

1987 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் அவர்தான் இளையோருக்கான பட்டத்தை வென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனியர் பிரிவிலும், டிரையத்லான் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தார். பின்னர், 1991 முதல் சைக்கிள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி, அமெரிக்க அமெச்சூர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம், இவருக்கு மோட்டரோலா நிறுவனத்தின் அணிக்காக சைக்கிள் போட்டி களில் பங்கேற்க அருமையான வாய்ப்புக் கிடைத்தது.

அவரது இருபத்தி ஒன்றாம் வயதில், உலகின் மிகவும் இளைய சைக்கிள் வீரர் என்ற பட்டத்தை வென்றார். அடுத்து, 1992-ல் 'த்ரிஃபிட் ட்ரக் கிளாசிக்’ போட்டியில் பட்டம் வென்றார். உலகின் புகழ் பெற்ற 'டூர் டி ஃபிரான்ஸ்’ சைக்கிள் போட்டியில் 1996-ல் பங்கேற்று, ஆறாவது இடத்தைப் பெற்றார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

இவ்வளவும் இடைவிடாத முயற்சியால் அவருக்குக் கிடைத்த வெற்றிகள்! இது அனைவருக்கும் பொதுவானதுதானே என்கிறீர்களா சுட்டீஸ்? இன்னும் கொஞ்சம் படியுங்கள், அப்போது தெரியும் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனைகள் எவ்வளவு அசாதாரணமானவை என்று.

அக்டோபர் 2, 1996. அன்றைய தினத்தை ஆம்ஸ்ட்ராங் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ளவில்லை. தினமும் தொடர்ந்த பயிற்சிகள், வெற்றிகள் என பரபரப்பின் உச்சத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்குக்கு மருத்துவர் சொன்ன செய்தி  அப்படியே உலுக்கியது. அவரை மட்டும் இல்லை... அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

அந்தக் கொடூரமான செய்தி என்ன தெரியுமா? ஆம்ஸ்ட்ராங்குக்கு புற்று நோய்! அதுவும் விதைப்பையில். அவர் சரியாகக் கவனிக்காததால்... அது  ரத்தத்தில் பரவி, மூளையையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது.

மருத்துவர், ஆம்ஸ்ட்ராங்குக்கு உடனடியாக கீமோதெரபியும், அறுவை சிகிச்சையும் செய்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார். இது அவருக்கு ஆறுதலாக இருந்தது. ஒப்புதல் கொடுத்தார்.

புற்றுநோய் பரவி இருந்த பகுதிக்கு கீமோதெரபி சிகிச்சையும், மூளையில் இறந்துபோன செல்களை  அறுவை சிகிச்சை செய்தும் அகற்றினர். அதன்பிறகு தொடர்ந்த முறையான பாதுகாப்பு சிகிச்சைகளினால், 1998-ல் அவரது உடல் பிரச்னைகள் நீங்கின.

இரண்டு வருடங்களாக உடலை வருத்திய நோய்களில் இருந்து விடுபட்ட ஆம்ஸ்ட்ராங், அதன் பிறகு சும்மா இருக்கவில்லை. முன்பைவிட அதிக முனைப்புடன் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். அமெரிக்காவின் தபால்துறை அணிக்காக, 'அப்பலேச்சியன் மலைத் தொடர்’ பகுதியில் நடைபெற்ற போட்டியில் பங்கு கொண்டார்.

ஆம்! ஆம்ஸ்ட்ராங் பெயரைப் போலவே  மன உறுதியும் ரொம்பவே ஸ்ட்ராங்தான்.

கடும் நோய்வாய்ப்பட்டவர், அதில் இருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்த சமயத்தில், போட்டிகளில் பங்கேற் கும் அவரது மன உறுதியைக் கண்டு அனை வரும் வியந்தனர். அதன் பிறகு 1999-2005 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவர்தான் டூர் டி ஃபிரான்ஸின் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டிகளில் அவர் மஞ்சள் நிற ஜெர்க்கின் அணிந்து கலந்துகொண்டார். அதனால், மஞ்சள் ஜெர்க்கின் மிகவும் பிரபலம் அடைந்தது.

காப்பி அடிக்கலாம் வாங்க !

போட்டிகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல்,  கேன்சர் நோய்க்கு எதிராக ஒரு அமைப்பை (Lance Armstrong Foundation for cancer research and support) நிறுவினார். அந்த அமைப்புக்காக நிதி திரட்ட புதுமையான முயற்சியாக, லிவ் ஸ்ட்ராங் கைப்பட்டைகளை (Wrist Band) வெளியிட்டார். அது உலகம் முழுவதும் ஓர் இயக்கமாகவே மாறியது. அதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் திரட்டி, லட்சக்கணக்கான நோயாளிகளின் நோயைத் தீர்த்துவைத்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையில் இருந்து, நாம் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது போராடினால் வெல்ல முடியும் என்பதையும், மற்றவர்களுடன் சேர்ந்து ஓர் இயக்கமாகச் செயல்பட்டு, ஏழை எளியவர்களுக்கு உதவ முடியும் என்பதைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு