Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க!

பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க!

ஹாய் சுட்டீஸ்... போன முறை எவ்வளவு பெரிய கொடுமையான நோய் இருந்தாலும், கடுமையான பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என நிரூபித்த சைக்கிள் வீரர் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம்.

இந்த முறை யார் தெரியுமா? சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது சொந்த முயற்சியால் கடுமையாக உழைத்து, உலக விளையாட்டரங்கில் இந்தியாவுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்ததோடு நில்லாமல், தனது திறமையான வழிகாட்டுதலால் 1983-ல் உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்தவரின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

சண்டிகர் மாநிலம் ஹரியானாவில் ஜனவரி 6, 1959-ல் பிறந்தார் கபில்தேவ். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளி நாட்களில் கால்பந்து ஆட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். சில வருடங்களில் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது  ஆர்வம் ஏற்பட்டது. அந்தச் சிறிய வயதில், விளையாட்டரங்கில் இந்தியா உலக அளவில் சாதனைகள் புரிய வேண்டும் என்று எண்ணிவந்தார். கால்பந்தாட்டத்தில் இது சாத்தியமில்லை என்று உணர்ந்த அவர், கிரிக்கெட்டின் மூலம் சாதிக்க முடியும் என நம்பினார். இதற்காக, முன்பைவிட கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபட்டார்.

##~##

சில ஆண்டுகளில்... மித வேகப் பந்து வீச்சாளராக ஹரியானா அணிக்காக விளையாட ஆரம்பித்தார். அதுவும் தவிர, தனது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறமையினால் நல்ல ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தார். 'இன்ஸ்விங் யார்க்கர்’ பந்துகளை வீசுவதில் வல்லவர். இவரது வேகத்தில் எதிர் அணியினர் பந்துகளை எதிர்கொள்ளத் திணறித்தான் போவார்கள். இவருடைய பந்து வீசும் வேகத்தைப் பார்த்து, 'ஹரியானா சூறாவளி’ என்று ரசிகர்களாலும் கிரிக்கெட் வல்லுநர்களாலும் அழைக்கப்பட்டார்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் 1978-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர், தனது இடை விடாத முயற்சியாலும், சிறப்பான பந்து வீச்சாலும் அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஆனார்.  இலங்கையில் 1982-ல் நடைபெற்ற போட்டியில், சுனில் கவாஸ்கருக்கு உடல்நிலை சரி இல்லாததால் கேப்டன் பதவியை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து, அவரது லட்சியக் கனவான 'கிரிக்கெட் உலகக் கோப்பை’ போட்டிக்கு இந்திய அணிக்கே தலைமை தாங்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராகக் களம் இறங்கிய இந்திய அணியின் ஆட்டக்காரர்கள், வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். நான்கு விக்கெட்கள் வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் எந்தவொரு ஆட்டக்காரரும் சோர்ந்துதான் போய்விடுவார்கள். ஆட்டத்தைக் காண வந்த பார்வையாளர்களும், ஏன் இந்திய அணியின் வீரர்களுமே நம்பிக்கை  இழந்து போயிருந்த கட்டத்தில்... ஐந்தாவது ஆட்டக்காரராகக் களம் இறங்கினார் கபில்தேவ். மிகவும் இக்கட்டான அந்த நேரத்திலும் கபில்தேவ் நம்பிக்கை இழக்கவில்லை.

தன் அணி உலகக் கோப்பை வெல்வதற்கான  வாய்ப்பு கை நழுவுவதை கபில்தேவ் விரும்பவில்லை.

தோல்வியில் மூழ்கிக் கொண்டிருந்த இந்திய அணியைக் கடைசி நேரத்திலும் கூட மனோதைரியத்துடன்  போராடி, வெற்றிக் கனியைச் சுவைக்க வைத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் அதிரடி ஆட்டத்தால் ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்.  எதிர் முனையில் தன்னுடன் ஆடும் ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராக அவுட் ஆகிக்கொண்டிருந்த போதிலும், அவர் மட்டும் ஆட்டமிழக்காமல் அடித்து விளாசியது 175 ரன்கள். அவரது அதிரடியை  நேரில் பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நிஜமாகவே சூறாவளியாகத்தான் ஆடினார் கபில்தேவ். தோல்வியின் விளிம்பில் அணி

காப்பி அடிக்கலாம் வாங்க!

இருந்த போதிலும், அதைப் போராட்ட குணத்தால் மீட்டார். அந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி, அதன் மூலம் கிடைத்த ஊக்கத்தினால், தொடர்ந்த ஆட்டங்களிலும் நம் அணி சிறப்பாக ஆடி, இறுதிப் போட்டியிலும்  பங்கேற்க முடிந்தது. அது மட்டும் இல்லாமல், இதேபோல கபில்தேவின் திறமைக்குச் சான்றாக இன்னொரு நிகழ்வும் அந்த உலகக் கோப்பைப் போட்டியிலேயே  நடந்தது. அது, அந்த இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில், பந்துகளை அடித்து ஆடிக்கொண்டிருந்தார் விவியன் ரிச்சர்ட்ஸ். அந்தச் சமயத்தில், ரிச்சர்ட்ஸ் ஒரு பந்தைத் தூக்கி அடித்தார். கபில்தேவ் அந்தப் பந்தை கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். அந்தக் கேட்ச்தான்  போட்டியின்  திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து, கடகடவென மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் ஆட்டமிழக்க, இந்தியா மாபெரும் வெற்றி பெற்று உலகக் கோப்பையைப் பெற்றது.

தோல்வியின் விளிம்பில் இருந்தாலும்... போராடிப் பார்க்கும் குணம் இருந்தால், அதை வெற்றியாக மாற்றிவிடலாம் என்பதை கபில்தேவ் வாழ்க்கையில் இருந்து காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு