Published:Updated:

கனவு ஆசிரியர் !

ஞா.சுதாகர் ர.சதானந்த்

##~##

இரவு 9 மணி... அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால், கோயம்புத்தூர், துணி வணிகர் சங்க அரசு பெண்கள் பள்ளிக்குச் சென்றால், அங்கே தலைமையாசிரியர் சந்திரசேகர் இருப்பார்.

போதுமான கட்டமைப்பு எதுவும் இல்லாதிருந்த பள்ளியைத் தனது முயற்சியால், கோவையின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறார்.

'நான் 31 வருடங்களாக ஆசிரியராக உள்ளேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று இந்தப் பள்ளிக்கு வந்தேன். பள்ளியின் உட்கட்டமைப்புகள் திருப்தியாக இல்லை. கட்டடங்கள் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை. கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மோசமாக இருந்தன. இவற்றைச் சரிசெய்தால்தான், மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்தேன்'' என்கிறார் சந்திரசேகர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் இதைப் பற்றி முறையிட்டு, அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும் நிதி உதவி பெற்று, புதிய கட்டடங்கள் கட்டியிருக்கிறார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தனது சொந்தப் பணத்தையும் கொடுத்திருக்கிறார். பிறகு, 10 கணினிகளுடன் இருந்த ஆய்வுக்கூடத்தை, 30 கணினிகள் உள்ள ஆய்வுக்கூடமாக மாற்றியிருக்கிறார்.

கனவு ஆசிரியர் !

''அடுத்து, மாணவிகளின் கல்வியில் புதுமையைக் கொண்டுவர, பொது நிறுவனங்கள் சிலவற்றோடு சேர்ந்து, கோவையிலேயே முதன்முதலாக 'அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் அமைத்தேன். அரசுப் பள்ளியின் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் ஏன் குறைகிறது?’ என்று யோசித்தேன்.  மேல்நிலை வகுப்புகளுக்கு குறைந்த மதிப்பெண்களுடன் வருபவர்களும் குறிப்பிட்ட ஒரே பாடப் பிரிவையே தேர்ந்தெடுப்பதைக் கவனித்தேன். ஆசிரியர்களுடன் கலந்து பேசி ஒரு குழுவை உருவாக்கினேன். அவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுரைகள் வழங்கி, அவர்களது மதிப்பெண் மற்றும் ஆர்வம் ஆகியவற்றைப் பொருத்து, எந்தப் பாடப் பிரிவு பொருத்தமாக இருக்கும் என்பதையும், அதில் இருக்கும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றியும் சொன்னார்கள். பிறகு, எல்லாப் பாடப் பிரிவுகளிலும் தேர்ச்சி சதவிகிதம் அதிகமானது'' என்கிறார் சந்திரசேகர்.

கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் அரசுப் பள்ளி என்றாலே, மக்களிடம் தயக்கம் இருக்கும். ஆனால், இந்தப் பள்ளியின் வளர்ச்சியைப் பார்த்த பலர், தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்க்க ஆரம்பித் திருக்கிறார்கள். முன்பு, 300 மாணவிகள் மேல்நிலை வகுப்புகளுக்கு வருவதே பெரிய விஷயமாக இருந்தது. தற்போது 460 மாணவிகள் படிக்கின்றனர்.

சந்திரசேகர் பற்றி மாணவிகள் கூறும்போது, ''தலைமை ஆசிரியர் என்றாலே, கடுகடுப்பும் முறைப்புமான உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால், எங்கள் தலைமையாசிரியர் அப்படி அல்ல. கல்வி விஷயத்தில் கண்டிப்பான இவர், ஒரு தந்தையைப் போல எங்கள் மீது அக்கறை காட்டுகிறார். இந்தப் பள்ளியில் புகார் பெட்டிகள் இருக்கின்றன. எங்கள் குறைகளை எழுதிப் போடுவதற்காக வைக்கப்பட்ட அந்தப் பெட்டிகளில் இப்போது, வெறும் காற்றுதான் இருக்கிறது'' என்று சிரிக்கிறார்கள்.

'இதில் எனது தனிப்பட்ட சாதனை எதுவும் இல்லை. இந்தப் பள்ளியில் 79 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும், அரசு மற்றும் தன்னார்வம் மிக்கவர்களின் நிதியுதவியும்தான் காரணம்'' என அடக்கமாக சொல்கிறார் தலைமையாசிரியர் சந்திரசேகர்.