Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

சென்ற இதழில்,  தன் அறிவாற்ற   லினாலும் போரிடும் முறைகளாலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்ற மாவீரர் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம். இந்த முறை தன் அன்புச் சேவையால் உலகையே வென்ற பெண்மணியின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

செவிலியர் என்றாலே 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்ற பெயர்தான் நினைவுக்கு வரும். 'கைவிளக்கேந்திய காரிகை’ என்று போற்றப்பட்ட ஃப்ளாரன்ஸ், இங்கிலாந்தின் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு சிறு வயதாக இருக்கும் போது, குடும்பத்தினர் பல்வேறு நாடுகளுக்கு தங்களது சொந்த கோச் வண்டியிலேயே

##~##

சுற்றுப்  பயணம் மேற்கொள்வார்கள். சொந்தமாக கோச் வண்டி வைத்துக்கொள்வது அந்தக் காலத்தில் மிகவும் பெருமைக்குரிய  விஷயம்.

அவருக்கு எல்லாக் கலைகளையும்  ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து கற்றுக்கொடுத்தனர். அவர் கணிதத்தை விரும்பிக் கற்றார். ப்ளாரன்ஸ் செல்வச் செழிப்புடன் வளர்ந்தாலும் அவரது உள்மனம் 'மக்களுக்கு நம் சேவை அவசியம்’ என சொல்லிக் கொண்டே இருக்குமாம்.

ஃப்ளாரன்ஸ் குடும்பத்தினரோ, அவரை தக்க வயதில் திருமணம் செய்துகொடுத்து, ஒரு பிரபு குடும்பத்துத் தலைவியாக்க  நினைத்தனர். ஃப்ளாரன்ஸ்க்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன செய்வது என்கிற தெளிவுக்கும் வரமுடியவில்லை.

தன்னைப் போன்ற செல்வக் குடும்பத்துப் பெண்களைத் தவிர, மற்ற பெண்களின் வாழ்வு மிகவும் மோசமாகவே இருந்தது. அவர்களுக்கு எந்த விதத்திலாவது தான் உதவியாக இருக்கவேண்டும் என எண்ணினார். அந்தச் சமயத்தில் அவரது வீட்டுக்கு டாக்டர் சாமுவேல் என்ற அமெரிக்கர் விருந்தினராக வந்தார். அவருடன் பேசியபோது, ''என்னைப் போன்ற செல்வச் சீமாட்டிகள் செவிலியாகப் பணிபுரிய முடியுமா?'' எனக் கேட்டார் ஃப்ளாரன்ஸ். அதற்கு டாக்டர், ''கொஞ்சம் சிரமமான பணிதான்.  சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டி இருக்கும்'' என்றார். இதனால் கொஞ்சம் தெளிவுபெற்ற ஃப்ளாரன்ஸ், தன் வழி இதுதான் என முடிவு செய்தார். முதல் முயற்சியாக உள்ளூர் மருத்துவ மனைகளுக்குச் சென்று, நோயாளிகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தார். மருத்துவமனை முறையாக இயங்காமல் இருந்தது. தொற்று நோயாளியையும் இதர நோயாளிகளையும் ஒன்றாகத் தங்கவைத்து இருந்தனர்.

அப்போது, மருத்துவமனையில் இருந்த செவிலியர் பணிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர், சமூகத்தில் மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்களே. தங்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கும் நோயாளிகளை நன்றாகக் கவனித்தார்கள். மற்ற நோயாளிகளை குளிக்க வைப்பது,  ஆடைகள், படுக்கை விரிப்புகளை மாற்றுவது என எதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. நோயாளிகளிடம் பெற்ற பணத்தில் மது அருந்திவிட்டு, போதையிலேயே மருத்துவமனைப் பணிகளைச் செய்தனர். இதனால் ஃப்ளாரன்ஸ் மருத்துவமனைக்குப் போய், நோயாளிகளுக்குச் சேவை செய்வது குடும்பத்தினருக்குப்  பிடிக்கவில்லை.  தங்களது குடும்பத்தின் கௌரவம் குறையலாம் என நினைத்தனர்.

அன்புத் தேவதைகளாகப் பணியாற்ற வேண்டிய செவிலியர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வது ஃப்ளாரன்ஸுக்குப் பிடிக்கவில்லை. அதேபோல, மருத்துவமனைகளின் போக்கும் சரியில்லை என உணர்ந்தார். தினமும்... ஒரு மருத்துவமனை எப்படி நடக்கவேண்டும், எதை எல்லாம் மேம்படுத்தவேண்டும் என்பது பற்றி நிறைய குறிப்புகள் எழுதிவைத்தார்.

இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து மகளிர் மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். ஃப்ளாரன்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறி, விடுதி ஒன்றில் தங்கிப் பணிபுரியலானார்.  ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் மருத்துவமனை தொடர்பான வினாத்தாள் தயார்செய்து, வெளிநாடுகளில் இருந்த தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அனுப்பிய  பதில்கள் மூலம் மருத்துவமனையை மேம்படுத்தினார்.  

படுக்கை விரிப்புகளைச் சீரான இடை வெளியில் சுத்தம் செய்து பயன்படுத்துவது முதற்கொண்டு, செவிலியரை நோயாளிகள் அவசரமாக அழைப்பதற்கு அழைப்பு மணி பொருத்துவது வரை பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

மருத்துவமனையின் கண்காணிப்புக் குழு, ஃப்ளாரன்ஸின் செயல் வேகத்தைக் கண்டு அஞ்சியது. அதேசமயம், அவர் செய்யும் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்து, அவற்றை நிறைவேற்றியும் கொடுத்தது. மோசமான ஊழியர்கள் விலக்கப்பட்டனர் அல்லது விலகிவிட்டனர். அந்த மருத்துவமனையே சுகாதாரத்தின் இருப்பிடமாக மாறியது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மீதும் குறிப்பாக செவிலியர் மீதும் நன்மதிப்பு ஏற்பட்டது.  

அப்போது நடைபெற்ற போர் மற்றும் காலரா நோயினால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து குவிந்தார்கள். மலர்ந்த முகத்துடன் சிகிச்சை அளித்தார். எந்த நேரமும் மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளைக் கவனித்து வந்தார்.  இரவு நேரத்திலும்கூட தூங்காமல், அவர்களுக்குத் தேவையான ஆறுதல் வார்த்தைகளைப் பேசி, மன ரீதியாகவும் தேற்றினார்.

''அவர் எங்கள் அறைக்கு வந்து சென்றாலே நிம்மதி கிடைக்கும். அவரது நிழல் பட்டாலே எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்'' என்பார்கள் நோயாளிகள்.

செல்வச் செழிப்பில் இருந்தாலும் அடித்தட்டு மக்களுக்கு, அதிலும் குறிப்பாக நோயாளிகளுக்குச் சேவை செய்து உலகப் புகழ்பெற்ற ஃப்ளாரன்சின் வாழ்க்கையில் இருந்து சேவை மனப்பான்மையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு