Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்

 ஹாய் சுட்டீஸ்... தனது தூய அன்பால் செவிலியர் பணியின் மீது மரியாதையை உண்டாக்கிய 'ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ வாழ்க்கையில் இருந்து, அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மையைச் சென்ற இதழில் காப்பி அடித்தோம். இந்த முறை இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய, 'கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க !
##~##

இந்தியாவில் ஆங்கிலேயர் களின் ஆட்சி நடந்த சமயத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார் சிதம்பரம் பிள்ளை. தூத்துக் குடியில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் விளங்கிய வ.உ.சி.  விடுதலைப் போராட்டத் தில் தன் பங்குக்கு ஏதாவது செய்ய நினைத்தார். மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர் களை ஒன்று திரட்டி, வெள்ளையர்களுக்கு எதிராகப் பல போராட்டங் களை நடத்தினார். பாரதியார், சுப்ரமணிய சிவா போன்றவர்களின் அறிமுகம் வ.உ.சி-க்குக் கிடைத்தது.

அப்போது, வட மாநிலங்களில் இந்திய தேசிய காங்கிரஸின் பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் ஆகியோரது சுதேசி இயக்கம் மிகவும் எழுச்சியுடன் செயல்பட்டு வந்தது. அதனை தென்னாட்டிலும் பரவச் செய்ய, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அண்ணல் காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸில் வ.உ.சி. இணைந்தார். அப்போது, இந்தியாவில் வங்காளப் பிரிவினை நடை பெற்றது.

வெள்ளையர்கள், கிழக்கிந்தியக் கம்பெனியின் நலனுக்காக மற்ற இந்திய நிறுவனங்களை, வணிக மையங்களை முடக்கினர். எல்லா செல்வங்களும் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.  இந்தியத் துணிகள் உட்பட, இந்தியத் தயாரிப்புகளை விற்கவும், வாங்கவும் பல தடைகளை ஏற்படுத்தியது வெள்ளையர் அரசாங்கம்.

ஆங்கிலேயரின் இத்தகைய மேலாதிக்க மனோபாவத்தால், இந்தியத் தொழில்கள்  பாதித்தது. வெள்ளையர்களின் வணிகப் போட்டியை நாம் வெற்றி கொள்ளவேண்டும் என்றால், கடல் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும் என வ.உ.சி. முடிவு செய்தார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

அதற்காக, 'சுதேசி நாவாய்ச் சங்கம்’ (Swadeshi Steam Navigation Company), என்ற சுதேசியக் கப்பல் கழகத்தை ஆரம்பித்தார். இதற்கான நிதியை பொதுமக்களிடம் இருந்தே திரட்டினார். இவரது அயராத முயற்சியால் காலியோ, லாவோ என்ற இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன. 1906 அக்டோபர் 16-ல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கின. வெள்ளையர்கள், இந்தக் கப்பல் கழகத்துக்கு எதிராக நிறைய வரிகளையும், தங்கள் கழகத்துக்கு நிறைய சலுகைகளையும் வழங்கினர். இருந்தாலும், மக்கள் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். இதனால், வெள்ளையர்களின் கப்பல் கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர்களின் கோபம் வ.உ.சி-யின் மீதும் அவரது சுதேசிக் கப்பல் கழகத்தின் மீதும் திரும்பியது.

நாடு முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அதில் முக்கியமான போராட்டம் 'கோரல் மில்’ தொழிலாளிகளின் போராட்டமாகும். இதற்கு வ.உ.சிதான் தலைமை தாங்கினார். இதனால் கோபம் அடைந்த வெள்ளையர் நிர்வாகம், வ.உ.சி-யின் பின்னால் மக்கள் அணி திரள்வதைக் கண்டு, அவர் மீது ராஜ துரோக வழக்கும், சுப்ரமணிய சிவாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தி  இரட்டை ஆயுள் தண்டனையையும் விதித்து,  சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். கை, கால்களில் விலங்கிட்டு, செக்கிழுக்கவும் வைத்தனர்.  

நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனைக்குப் பிறகு விடுதலை அடைந்த வ.உ.சி, சென்னைக்கு வந்து தங்கினார். அப்போது அஞ்சல் துறைப் பணியாளர்களுக்கான தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்.

சிறைச்சாலைக் கொடுமைகளால் பாதிக்கப் பட்ட வ.உ.சி. விரைவில் உயிர் நீத்தார். இவரை மக்கள் கப்பலோட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் இன்றும் மனதில் வைத்துப் போற்றி வருகின்றனர்.

வெள்ளையருக்கு எதிராக இந்தியா முழுவதும் பலர் போராடினாலும், வெள்ளையருக்கு கிலி ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று, 'சுதேசி கப்பல் கழகம்’. இப்படி ஒரு போராட்ட வடிவத்தைச் சிந்தித்து, அதைப் பொது மக்களின் உதவியுடன் நிதி சேர்த்து செய்து காட்டிய போராடும் குணத்தைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு