கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

ஹாய் சுட்டீஸ்... இதுவரை  வாழ்க் கையை தங்கள் போராட்டத்தால் வெற்றி பெற்றவர்களைக் காப்பி அடித்தோம். இந்த முறை வாழ்க்கையே போராட்டமாக அமைந்துவிட்ட ஒருவர், அதை எப்படி வென்றார், எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார் என்பதைக்  காப்பி அடிக்கலாம் வாங்க!

 அமெரிக்காவின் அலபாமா மாகாணத் தில் 1880 ஜூன் 27 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. குழந்தையை, பெற்றோர் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.

குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும் போது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. சில நாட்களில் காய்ச்சல் விட்டுவிட்டாலும், அதன் பாதிப்பு குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

அந்த ஜுரத்தின் விளைவு... குழந்தையின்  பேச்சு மற்றும் கேட்கும் திறன் ஆகியவை பாதிக் கப்பட்டதோடு, கண்பார்வையும் போய்விட்டது.

குழந்தை, தனது தேவைகளை சைகை மொழியின் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. இந்தச் சைகை மொழியை, அந்த வீட்டுப் பணிப்பெண்ணின் குட்டி மகளான மார்த்தா எளிதில் புரிந்துகொண்டு,      குழந்தையின் தேவையை நிறை வேற்றினாள்.  

##~##

அந்த நேரத்தில் 'அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்’லின் (தொலைபேசி யைக்கண்டுபிடித்தவர்)  ஆலோசனையின்படி குழந்தையை பார்வை இழந்தவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர்.

அப்பள்ளியில் சேர்க்கும் வரை யாருக்கும் தெரியாது... பேசவும், கேட்கவும், பார்க்கவும் இயலாத அந்தக் குழந்தையின் பேச்சுக்களைத் தான் எதிர்காலத்தில் உலகம் ஆவலுடன் கேட்கப் போகிறது... இந்தக் குழந்தையின் வாழ்க்கையைத்தான் உலகம் முழுவதும் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கப் போகிறார்கள்... அந்தக் குழந்தையின் மேற்கோள்களைத்தான் ஊரெங்கும் மேடைகள்தோறும் முழங்கப் போகிறார்கள் என்று. ஆம், அந்த அதிசயக் குழந்தையின் பெயர் ஹெலன் கெல்லர்.

அக்குழந்தைக்கு அதுவரை கிடைக்காத மிகப் பெரிய வரம் சிறப்புப் பள்ளியில் கிடைத்தது. தன் வாழ்நாள் முழுவதுக்குமான உற்ற துணையாக இருக்கப்போகிற குரு, நெருங்கிய தோழி, வழிகாட்டி என பல விதங்களில் ஹெலன் கெல்லரை வழிநடத்திய ஆன் சல்லிவன் அங்குதான் பணிபுரிந்தார். இவர்கள் சந்தித்த 1887-ஆம் ஆண்டு முதல் கிட்டத் தட்ட நாற்பத்து ஒன்பது ஆண்டுகள் ஹெலன் கெல்லருக்கு தாமே எல்லாமுமாக இருந்து உதவினார் ஆன் சல்லிவன்.

ஹெலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியது. ஆன் சல்லிவன் மற்றவர்கள் பேசும்போது அவர்களின் உதடுகளில் ஏற்படும் அதிர்வை விரல்களால் உணர்ந்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்தார். கொட்டும் தண்ணீரில் ஹெலன் கெல்லரின் கைகளை நீட்டச் செய்து, அதன் பெயர் 'Water’ என்பதை  உள்ளங்கையில் எழுதிக் காட்டி அவரை உணரச் செய்தார்.

இந்தச் சமயத்தில், 'பிரெய்ல்’ முறை எழுத்துக்களைப் பற்றி அறிந்த சல்லிவன், அதன் மூலம் கெல்லருக்கு பாடங்களைப் பயிற்று வித்தார். எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்த கெல்லருக்கு இது மிகவும் அருமை யான வாய்ப்பாக அமைந்தது.

அதன் பிறகு, ஹெலன் கெல்லர் கற்றுக் கொள்ள எதுவுமே தடையாக இல்லை. அவர் பிரெய்ல் முறையின் மூலமாகவே ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஜெர்மன் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

அடுத்த சில ஆண்டுகளில்... முறையான பேச்சுப் பயிற்சியின் மூலம் சரளமாகப் பேசவும் கற்று, தன்னைப் போன்று பாதிக்கப் பட்டவர்களுக்கு வழி காட்டவும், அவர்களை முன்னேற்றவும், தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் தொடங்கினார். பார்வையற்றோரின் முன்னேற்றத்துக்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்தார். அதற்குத் தேவையான நிதியைச் சேர்ப்பதற்காக 39-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து, சொற்பொழிவு கள் நிகழ்த்தி, அதன் மூலம் பெருமளவு நிதியைத் திரட்டினார்.

அதேபோல, ஹெலன் கெல்லர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற 'சோஷியல் பார்ட்டி’யைத் தீவிரமாக ஆதரித்தார். இவரது பேச்சு, தொழிலாளர்களை மிகவும் கவர்ந்தது.

இவர், பனிரெண்டுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவரது (Story of My Life)என்ற புத்தகம், உலகில் அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட சுயசரிதை நூல்களில் ஒன்றாகும். இப்படி வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், உறுதியை இழக்காமல்... கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கற்றுக்கொண்ட ஆற்றலை ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் இருந்து காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு