இனிதாகக் கற்போம் தமிழ் !
பொள்ளாச்சி நசன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்
##~## |
சுட்டி விகடனின் 15-ம் ஆண்டு சிறப்பிதழைப் படித்த மகிழ்ச்சியில் இருப்பீர்கள். ஓர் இதழ் இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இந்த முறை, 'உ’ மற்றும் 'ஊ’ உயிரெழுத்துகள் மெய்யெழுத்தோடு சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை, உங்கள் நண்பருக்குக் கற்றுத் தரப்போகிறீர்கள்.
கொ, கோ எழுத்துகளைப் போல உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகளில் குறியீடு கிடையாது. மெய்யெழுத்தோடு உயிரெழுத்து இணைவதால் உருவாகும் எழுத்துகள், புதிய வடிவங்களைப் பெறுகின்றன. புதிய வடிவங்கள், மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு சற்று மிரட்சியை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக வரும் பாடங்களின் எழுத்துகளையும் குழப்பிக்கொள்வர். எனவேதான், நாம் இந்த உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகளை இறுதிப் பாடமாக வைத்திருக்கிறோம்.
இந்த 36 எழுத்துகளையும் எப்படி எளிமையாக உள்வாங்குவது என்பதை முதலில் பார்ப்போம்.
அட்டை எண் 34, 35-ல் உள்ள 'உ’ மற்றும் 'ஊ’ உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களை, நன்கு மனதில் பதியுமாறு சொல்லிக்கொடுங்கள்.
அட்டை எண் 36, 37-ல் மூன்று உயிர்மெய் எழுத்துகளுக்கான வடிவங்கள் மட்டும் இருப்பதை நன்கு கவனிக்கச் செய்யுங்கள்.
க், த், ப் என்ற மூன்று மெய்யெழுத்துகள் 'உ’ என்ற உயிரெழுத்துடன் இணையும்போது... கு, து, பு என்னும் உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன. இதுபோலவே,

க், த், ப் என்ற மூன்று மெய்யெழுத்துகள், 'ஊ’ என்ற உயிரெழுத்துடன் இணையும்போது... கூ, தூ, பூ என்னும் உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.
இந்த ஆறு எழுத்துகளின் வடிவங்களையும் கூர்ந்து கவனிக்கச் செய்யுங்கள்.
உ வரிசையில் படம்-1 என்கிற வடிவமும், ஊ வரிசையில் படம்-2 என்கிற வடிவமும் உள்ளதைக் கவனிக்கச் செய்யுங்கள். உங்கள் பயனாளி, இதைக் கற்பதில் கடினமாக இருக்கிறது என்று சொன்னால் பரவாயில்லை. அதிகமாகப் பயனாகும் எழுத்துகளைக் கற்கும்போது, இவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வார்.
அட்டை எண் 36கி, 37கி-ல் இருக்கும் சொற்களை உங்கள் உதவியின்றி படிக்கச் சொல்லுங்கள். தெரியாத சொற்களைச் சொல்லிக்கொடுங்கள்.

உ, ஊ உயிரெழுத்துகள் மெய்யெழுத்து களுடன் இணைவதால் உருவாகும் அனைத்து எழுத்துகளையும் பார்ப்போம்.
கு சு டு து பு று
யு ரு லு வு ழு ளு
ஙு ஞு ணு நு மு னு
கூ சூ டூ தூ பூ றூ
யூ ரூ லூ வூ ழூ ளூ
ஙூ ஞூ ணூ நூ மூ னூ

இந்தப் பகுதியை தொடர்ந்து பயிற்சி எடுத்தால், எளிமையாகிவிடும். தமிழில் உள்ள எழுத்துகள் அனைத்தையும் (ஒள வரிசை தவிர) பார்த்தாயிற்று. இந்தச் சொற்களைச் செய்தித்தாளிலோ, பாடப் புத்தகங்களிலோ பார்த்து, அந்த எழுத்தை அடையாளம் கண்டு ஒலித்துப் பழகச் செய்தால், புரிதல் திறன் இன்னும் அதிகமாகும்.
- தொடர்ந்து கற்போம்.