Published:Updated:

கனவு ஆசிரியர்!

வில்லுப்பாட்டில் பள்ளிப் பாடம் !உ.சிவராமன் படங்கள் : வீ.சிவக்குமார்

கனவு ஆசிரியர்!

வில்லுப்பாட்டில் பள்ளிப் பாடம் !உ.சிவராமன் படங்கள் : வீ.சிவக்குமார்

Published:Updated:
##~##

கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு மூலம் பாடங்களை நடத்தி, கடினமான பாடங்களையும் எளிமையாக்கிச் சொல்லித்தருகிறார், ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கறையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையான கல்பனாவிடம் பேசியதிலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என் சிறு வயதில் வில்லுப்பாட்டு பிரபலமாக இருந்தது. நானும் அதை ஆர்வமாகத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால், அந்தக் கலை அழிவின் விளிம்பில் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டேன். அந்தச் சமயத்தில்தான் செயல்வழிக் கற்றல் அறிமுகம் ஆச்சு. இந்த வில்லுப்பாட்டு மூலமாகவே அதைச் செய்தால், நம் கலையை வளர்த்த மாதிரியும் இருக்கும், பாடமும் சுலபமாக மனதில் பதியும்னு நினைச்சேன். என் நம்பிக்கை வீண் போகலை. திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளி விருதும், 25,000 ரூபாய் பரிசும் வாங்கியிருக்கோம். 'CCE கல்வி முறையில் சிறந்த பள்ளி’ என்ற பாராட்டும் மாவட்டக் கல்வி அதிகாரி மூலம் கிடைச்சிருக்கு'' என்கிறார் கல்பனா.

தலைமை ஆசிரியையாக 2010-ல் இந்தப் பள்ளிக்கு வந்தவர் கல்பனா. அப்போது, இரண்டு கட்டடங்கள், 95 மாணவர்கள் என இருந்தனர். புதிய கட்டடம், தூய்மையான வகுப்பறை, வித்தியாசமான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பள்ளியை எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி உயர்த்தி இருக்கிறார்.

கனவு ஆசிரியர்!

''முன்னாடி, இந்த ஸ்கூலில் பசங்களை சேர்க்கவே யோசிப்பாங்க. ஆனா இப்போ, மற்ற ஸ்கூலில் செயல்வழிக் கற்றலில் சந்தேகம் இருந்தா, எங்க ஸ்கூலில் இருந்துதான் மாடல்களை வாங்கிட்டுப் போறாங்க. வில்லுப்பாட்டில் எளிமையான ராகங்கள் மூலம் பாடங்களைப் படிக்கிறப்ப சுலபமாகப் புரிஞ்சுக்க முடியுது. பாடங்கள் மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைதல் குறித்த செய்திகளையும் வில்லுப்பாட்டு மூலம் செய்றோம்'' என்கிறார் ஒரு மாணவி.

இங்கே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பன்முகத்திறன் போட்டி நடத்தப்படுகிறது. பாட்டு,  நடனம், மிமிக்ரி என மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

''அதோடு, 'அன்னையர் கூட்டம்’ என்று வாரம்தோறும் நடத்தி, பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவைக்கிறோம். அவர்களிடம் பிள்ளைகளின் திறமையை எடுத்துச்  சொல்வோம். மாதம் ஒருமுறை நடக்கும் மேலாண்மைக் கூட்டத்தில், பெற்றோர்களிடம் இருந்து பள்ளிக்கான மதிப்பீடு பெறுகிறோம். அதன் மூலம் எங்களின் குறைகளைச் சரிசெய்துகொள்கிறோம்'' என்கிறார் கல்பனா.

இவரது முயற்சியால் படிப்புடன் சேர்த்து, மற்ற திறமைகளிலும் மாணவர்கள் அசத்திவருகிறார்கள். ஓவியம், கேரம், பேச்சுப் போட்டிகளில்... மாவட்ட அளவில் பெற்றுவந்த மெடல்கள், சான்றிதழ்கள்  ஒவ்வோர் வகுப்பறையையும் அழகாக அலங்கரிக்கின்றன.

''2010-ல் பள்ளிக்குள் நடத்திய ஆண்டு விழாவை,  ஊருக்கே தெரிகிற மாதிரி இப்போது கொண்டாடினோம். ஊர் மக்களும் தானாக முன்வந்து உதவி செய்தாங்க. இங்கே இருக்கிற மற்ற ஆசியர்களுக்கும் வில்லுப்பாட்டு சொல்லிக் கொடுத்திருக்கேன். நான் இல்லாத நேரங்களில் அவங்களும் வில்லுப்பாட்டு மூலமாக பாடம் நடத்துறாங்க. இந்தப் பள்ளியில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு குழந்தையும் கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கணும். அது போதும் எனக்கு'' என்கிறார், இந்தக் கனவு ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism