Published:Updated:

கனவு ஆசிரியர்

வி.எஸ்.சரவணன் படங்கள் : ரா.ராம்குமார்

கனவு ஆசிரியர்

வி.எஸ்.சரவணன் படங்கள் : ரா.ராம்குமார்

Published:Updated:

''சண்டை போடாம, வரிசையா ஆட்டோவில் ஏறணும். ஆட்டோல போகும்போது, கைகளை வெளியே நீட்டக் கூடாது என்ன?'' என்று தலைமை ஆசிரியர் வில்சன் ராஜ் சொல்ல, ''சரீங்க சார்...'' என்று ராகம் போட்டவாறு ஆட்டோவில் ஏறினார்கள் மாணவர்கள்.

நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது போச்சிவிளாகம். அழகான அந்த ஊரின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் வில்சன் ராஜ்.

2012-13 கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 24. இந்த ஆண்டு 65 பேர்.  இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் கவனிப்பு மிக்க கற்பித்தலால் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி அடைகிறார்கள். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பவர் வில்சன் ராஜ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த ஆண்டு மட்டும் எங்கள் பள்ளி மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது. முதலாவது, மாவட்டத்தின் சிறந்த பள்ளி. அடுத்து, இந்தச் சரகத்தில் சிறந்த பள்ளி. மூன்றாவது, அதிகப் புரவலர் களைச் சேர்த்த பள்ளி என்ற விருதுகள்தான். இதுவரை 75 புரவலர்களைப் பள்ளியின் வளர்ச்சிக்காகச் சேர்த்து உள்ளோம்'' என்று பூரிப்புடன் சொல்கிறார் வில்சன் ராஜ்.

புரவலர்களைச் சேர்த்தது மட்டும் அல்லாமல், அந்தக் கிராமமே இந்தப் பள்ளியுடன் கைகோக்கும் வகையில் மாற்றி இருக்கிறார் வில்சன் ராஜ். பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, தினம் ஒரு கூட்டு அல்லது பொரியல். அதற்கான காய்கறிகளை ஊர்க்காரர்களே நறுக்கித் தந்துவிடுகிறார்கள். பள்ளியின் பயன்பாட்டுக்காக, மைக் உள்ளிட்ட ஆடியோ சிஸ்டத்தையும் வழங்கி உள்ளனர். பள்ளியின் பொன் விழாவின்போது, அதற்கான நினைவு வளைவையும் கட்டித் தந்துள்ளனர்.

கனவு ஆசிரியர்

எப்படி ஊர் மக்களை இவ்வளவு தூரம் செய்யவைக்க முடிந்தது?

''இந்தப் பள்ளி, உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத்தரும் என்பதை அவர்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைத்தேன். பிறகு, எல்லாம் தானாக நடந்தன. இவர்களின் ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பால், ஆங்கிலப் பள்ளிக்கு நிகராக உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடிந்தது.'' என்கிறார்.

ஹைலைட்டாக இந்த ஆட்டோ வந்த விஷயம்...

''பள்ளியில் சிறப்பான கல்வியைத் தந்தாலும் பக்கத்து ஊர்களில் இருந்து மாணவர்களை அனுப்ப, பெற்றோர் தயங்கினர். அதனால், ஊர் மக்களின் உதவியோடு பள்ளிக்கென சொந்தமாக ஒரு ஆட்டோவை வாங்கினோம். ஊரைச் சேர்ந்தவர்களே இதன் ஓட்டுநர்கள். தினமும் காலையில் அழைத்து வருவது ஒருவர், மாலையில் அழைத்துச்செல்வது ஒருவர் எனத் தங்களுக்குள் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்'' என்கிறார் வில்சன் ராஜ்.

இந்த ஆட்டோ வசதியால், சுற்றி உள்ள கார்த்திகை வடலி, கீரி வல, சூரங்குடி போன்ற  கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். ஆட்டோ கட்டணத்தை மாணவர்களிடம் தனியாக வாங்குவது இல்லை. செலவை ஊர் மக்களே பொதுவாக பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

''இதன்மூலம் நிறைய மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும். கல்வி அறிவு பெற்றுச் சிறக்க வேண்டும்'' என்கிற தலைமை ஆசிரியர் வில்சன் ராஜ் பேச்சில் அக்கறையும் அன்பும் மிளிர்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism