Published:Updated:

கனவு ஆசிரியர்

கல்வி ஒளிதரும் சரஸ்வதி டீச்சர்க.பிரபாகரன் படங்கள் : ரா.மூகாம்பிகை

''பாடம் நடத்துவதில் மட்டும் ஒரு ஆசிரியரின் கடமை முடிஞ்சுடாது. உலக அறிவையும் நேர்மையுடன் சேர்ந்த ஒழுக்கத்தையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில்தான் இருக்கிறது ஆசிரியரின் திறமை.'' பளிச்செனச் சொல்கிறார் சரஸ்வதி டீச்சர். சென்னை, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் சரஸ்வதி, பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி.

''பிரெய்ல் முறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். பள்ளியில் டாய்லெட், குடிநீர் போன்று  அத்தியாவசியத் தேவைகளுக்காக, மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து, அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். ''இந்த முயற்சியின் பலனாக, இப்போது அந்த வசதிகள் எங்கள் பள்ளியில் இருக்கிறது'' என்கிறார் பள்ளித் தலைமையாசிரியை கஸ்தூரி.

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது, தேர்வு நேரங்களில் 2 மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கித்தந்து படிக்கவைப்பது என்று, தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வதால், சரஸ்வதி டீச்சரை எல்லோருக்கும் பிடிக்கிறது.

கனவு ஆசிரியர்

''எனக்குக் கண் தெரியாது என்பதை மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது இல்லை. வகுப்பில் சண்டை போடாமல் அமைதியாக இருப்பது, தப்பாக எழுதினாலும் என்னிடம் என்ன தப்பு என்பதை ஒப்புக்கொண்டு, திருத்திக்கொள்வது என, என்னுடைய மாணவர்கள் எல்லோருமே வைரங்கள். அதனால்தான், என்னால் தொடர்ந்து இந்தப் பள்ளியில் ஆசிரியையாக இருக்க முடிகிறது. எனவே, என்னைவிட இவர்களைத்தான் நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும்'' என்று அன்புடன் மாணவர்களைத் தடவிக்கொடுக்கிறார் சரஸ்வதி டீச்சர்.

கனவு ஆசிரியர்

''எங்களின் இந்த ஒழுக்கத்துக்குக் காரணமே டீச்சர்தான். அவங்க ஒரு முன்மாதிரியாக இருக்காங்க. எங்களின் தேவை எதுவாக இருந்தாலும், தயங்காமல் சரஸ்வதி டீச்சரிடம் சொல்வோம். அதைப் போராடிப் பெற்றுத் தருவது சரஸ்வதி டீச்சரின் ஸ்பெஷல். உழைப்பின் அருமையையும் நம்பிக்கையையும் விதைப்பதில் சரஸ்வதி டீச்சருக்கு நிகர் அவங்கதான்'' என்கிறார்கள் மாணவர்கள்.

பள்ளி முடிந்ததும், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி(விமிஜி)கல்லூரிக்கு மேல் படிப்பு படிக்கச் செல்கிறார் சரஸ்வதி டீச்சர். ''பிரெய்ல் புத்தகத்தில் இல்லாத விஷயங்களை, அங்கே இருக்கும் கல்லூரி மாணவர்கள் வாசிக்க, அதை மனதில் வாங்கிக்கொள்வேன். அதைப் பள்ளியில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவேன். தினமும் ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொண்டு, எனது மாணவர்களுக்குச் சொல்லித்தருவதில் தனி மகிழ்ச்சி'' என்கிறார்.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி, ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் போன்றவற்றையும் சொல்லித்தருகிறார் சரஸ்வதி டீச்சர்.

''என்னுடைய பணியில் சக ஆசிரியர்களின் உழைப்பும் இருக்கிறது. என் அன்பு மாணவர்களுக்காக நான் இன்னும் நிறையச் செய்வேன்'' என்கிறார் இந்தக் கனவு ஆசிரியர்.