Election bannerElection banner
Published:Updated:

கனவு ஆசிரியர்

கூட்டு முயற்சியில் வெற்றிக்கொடி ஏற்றும் ஆசிரியர் !மா.அ.மோகன் பிரபாகரன் படங்கள் : மு.சரவணக்குமார்

''சமுதாய முன்னேற்றத்துக்குத் தேவையான விஷயங்கள் எல்லாவற்றையுமே அரசு செய்யட்டும் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், நம்மால் முடிந்ததை இந்தச் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டும். அப்படியான ஒரு சிறு முயற்சிதான் இது'' என்கிறார், பானுரேகா.

ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள சிறிய கிராமம், வெட்டையன்கிணறு. இங்குள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், பானுரேகா. இந்தச் சிறிய கிராமத்துப் பள்ளியின் மாணவர் சேர்க்கைச் சதவிகிதம், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவருகிறது. காரணம், பானுரேகாவின் முயற்சியும் தன்னார்வச் செயல்பாடுகளும்தான்.

''ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால், அதை எப்படியும் செய்துகாட்டுவது என் வழக்கம். நான், இதற்கு முன் பெருந்துறை, சீனாபுரம் அருகே உள்ள கீழேரிப்பாளையம் பள்ளியில் பணிபுரிந்தேன். அந்தப் பள்ளியில், 20 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அந்தப் பகுதியில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். தமிழ் சரியாகவே பேசத் தெரியாது. எனவே, பெற்றோரும் பள்ளிக்கு அனுப்பத் தயங்கினார்கள். முதலில், அவர்களுக்காக நான் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இதனால், அவர்களோடு சகஜமாக உரையாட முடிந்தது. பிறகு பாடங்களைக் கற்றுக்கொடுத்தேன்'' என்கிறார் பானுரேகா.

இவரின் அக்கறையான முயற்சியால், மாணவர்களின் சேர்க்கைச் சதவிகிதம் அதிகரித்தது. அந்தப் பள்ளிக்கு, அரசு கணினி கொடுப்பதற்கு முன்பே, இவரது சொந்தப் பணத்தில் இரண்டு கணினிகளை வாங்கி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்கள் பலரும் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

கனவு ஆசிரியர்

அஹமதாபாத்தில் உள்ள IIM கல்வி நிறுவனம் இவருக்கு தேசிய அளவிலான செயல்திறனுக்கான சிறந்த ஆசிரியர் விருது அளித்தது. 2013-ல் தமிழக நல்லாசிரியர் விருதையும் பெற்றிருக்கிறார்.

''தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களை ஈர்க்க வேண்டுமெனில், அந்தப் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பள்ளிக்கான புரவலர்களைச் சேர்த்தோம். அவர்களின் மூலம் 12 லட்சத்துக்கும் அதிகமான தொகையைச் சேர்த்து, பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினோம்'' என்கிறார் பானுரேகா.

முன்னாள் கலெக்டர் உதயசந்திரன் மூலமாக SSA திட்டத்தைப் பயன்படுத்தி, ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கான கணினி பயிற்சித் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். ஆசிரியர்கள் ஒரு பாடம் நடத்தும் முன், அது சம்பந்தமான விஷயங்களை இணையத்தில் இருந்து எடுத்து மாணவர்களுக்குக்  கற்றுத்தருகிறார்கள்.

'இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். முன்பே சொன்னதுபோல அனைத்துக்கும் அரசை எதிர்பார்க்காமல், 100 பேரின் கூட்டு முயற்சியில் இறங்கினால், எதையும் சாதிக்க முடியும். என்னிடம் படிக்கும் மாணவர்கள், வசதி இல்லை என்ற காரணத்துக்காகப் படிப்பில் பின்தங்கிவிடக் கூடாது. அவர்களின் முன்னேற்றத்துக்கான விஷயங்களைத் தொடர்ந்து கொடுப்பேன்'' என்கிறார் பானுரேகா மகிழ்ச்சியுடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு