Published:Updated:

கனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் !

Vikatan Correspondent

உ.சிவராமன் படங்கள் : வீ.சிவக்குமார்

கனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் !

''இங்கிலீஷ் மீடியத்துல குழந்தையைச் சேர்க்க ஆசை. ஆனா, அதிகமா ஃபீஸ் கேக்கிறாங்களே'' எனத் தயங்கும் அப்பா, அம்மா ஆச்சர்யப்படும் வகையில், எல்லாமே இலவசமாகக் கொடுத்து அழைக்கிற அரசுப் பள்ளியைத் தெரியுமா!

திண்டுக்கல், மேற்கு ரத வீதியில் இருக்கும் நகராட்சித் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் ஜெயக்குமார், ''நான் 1982-ல் இருந்து ஆசிரியராக இருக்கேன். 27 வருடங்கள் உதவி ஆசிரியர், ஆறு வருடங்களாகத் தலைமையாசிரியர். முன்பு நான் வேலைபார்த்த பள்ளிக்குச் சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது கிடைச்சது. 2011-ல் இந்தப் பள்ளிக்கு வந்தபோது, சரியான கட்டட வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. முதல் வேலையாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், 3 லட்சம் செலவில் தலைமையாசிரியர் அறையும், நகராட்சி உதவியோடு இரண்டு வகுப்பறைகள், கழிப்பிட வசதி, போர்வெல் மூலம் தண்ணீர் வசதியை உருவாக்கினேன்'' என்கிறார். இதில் 80,000 ஆயிரம் ரூபாய் இவரது சொந்தப் பணம்.

''அப்போ, பள்ளியில் பசங்களோட எண்ணிக்கை 47. டீச்சர்ஸ் எல்லோரும், சுத்தி இருக்கிற கிராமங்களில் புள்ளிவிவரம் எடுத்தோம். படிக்காமல் இருக்கிற, படிப்பை நிறுத்திய பிள்ளைகளை வீடுகளில் சந்திச்சோம். 'ஸ்கூல் தூரத்தில் இருக்கிறதால அனுப்ப முடியாது’ என்ற பெற்றோர்களிடம் பேசி, அந்தப் பொறுப்பை ஏற்றோம்'' என்கிறார் டேவிட் ஜெயக்குமார்.

கனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் !

இரண்டு ஆட்டோக்களை ஏற்பாடுசெய்து, பிள்ளைகளின் போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறார். இப்போது இதற்கான செலவை, ஆசிரியர்களே பங்கிட்டு அளிக்கிறார்கள்.

''அரசு இலவசமாக் கொடுக்கும் சீருடைகள் ஒரே அளவில் இருபதால், பலருக்குப் பொருந்துவது

கனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் !

இல்லை. அதனால், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு, பொங்கல் மற்றும் தீபாவளிக்கு துணி எடுத்து, அவரவர் அளவுக்கு சீருடை தைத்துக் கொடுக்கிறோம்'' என்கிறார்.

திண்டுக்கல்லில் மூன்று நகராட்சிப் பள்ளிகளுக்கு ஆங்கில மீடியம் தொடங்க, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தபோது ஏற்று நடத்தப் பலரும் தயங்கினர். ''நான் துணிஞ்சு ஆரம்பிச்சேன். பசங்களுக்கு ஐ.டி கார்டு, பெல்ட் எல்லாம் இலவசமா கொடுத்தோம். பாடங்களை, பொம்மைகள் மூலமா நடத்தினோம். உதாரணமாக, புலி பொம்மையின் பின் உள்ள சாவியைத் திருகினால், அது ‘I am tiger. I live in Forest’ என்று சொல்லும். ஆறு மாணவர்களுக்கு ஒரு கம்ப்யூட்டர், ஓர் ஆசிரியர் என நியமிச்சோம். இப்ப ஒன்றாவது படிக்கும் பசங்களே கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, டிராயிங் வரையுறாங்க'' என்கிறார் டேவிட் ஜெயக்குமார்.

மாலை நேரத்தில், விளையாடும் குழந்தைகளுக்கு இலவசமாக சுண்டல், பிஸ்கட், ரஸ்க் கொடுக்கிறார்கள். ஓவியம், நடனம், நாடகம் போன்ற குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்.

''இங்கிலீஷ் மீடிய மாணவர்களுக்கும் தமிழ் மீடிய மாணவர்களுக்கும் இடையே வேறுபாடு, பிரிவு வந்துடக் கூடாதுனு, மாலையில் ஒரு மணி நேரம் ரெண்டு குழுக்களும் சேர்ந்தே விளையாட ஏற்பாடு செய்திருக்கோம். மதிய உணவையும் ஆசிரியரோடு சேர்ந்து, எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுறோம். வசதி இல்லை என்கிற காரணத்துக்காக, ஒரு குழந்தைகூட படிக்காம இருக்கக் கூடாது. அதற்கான என்னோட சின்ன முயற்சிதான் இது'' என்கிறார்  டேவிட் ஜெயக்குமார் தன்னடக்கமாக.