Published:Updated:

கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் !

மா.அ.மோகன் பிரபாகரன் படங்கள் : மு.சரவணக்குமார்

கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் !

மா.அ.மோகன் பிரபாகரன் படங்கள் : மு.சரவணக்குமார்

Published:Updated:

கலகல எனச் சிரிப்புச் சத்தம் கேட்ட, அந்த வகுப்பறையை எட்டிப் பார்த்தோம். மாணவர்கள் எல்லோரும் தமிழ்ப் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு வெள்ளைத் திரை. அதன் உள்ளிருந்து எட்டிப் பார்த்து, கைகளை அப்படியும் இப்படியுமாக அசைத்துப் பாடம் நடத்திக்கொண்டிருந்தது ஒரு பொம்மை. இடையிடையே, அந்தப் பொம்மை கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொன்னார்கள். தவறாகச் சொல்பவர்கள், தயங்கி நிற்பவர்களிடம் அந்தப் பொம்மை குறும்பாகப் பேசி, திருத்தியது. வகுப்பறை மீண்டும் மீண்டும் சிரிப்பால் நிறைந்தது.

'இது என்ன கலாட்டா?’ என்று யோசித்தவாறு, திரைக்குப் பின்னால் சென்று பார்த்தால், புன்னகையுடன் கையசைக்கிறார் தாமஸ் ஆண்டனி... அந்த வகுப்பின் ஆசிரியர். ஈரோடு மாவட்டம், நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர்.

''ஒருமுறை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசும்போது, 'நான் இந்த உயர்வை அடைந்ததற்குக் காரணம், எனக்கு எழுத்தறிவித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே. அவர்களை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்!’ என்று குறிப்பிட்டார். அவருக்கு மட்டும் அல்ல, நம்மில் பலருக்கும் அ, ஆ கற்பித்த ஆசிரியர்களை பசுமையாக நினைவில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி, விதை போன்றது. அதைச் சரியாக மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் இது'' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் !

பாரதியார், பாரதிதாசன் பாடல்களை திரைக்குப் பின்னால் இருந்தபடி தாமஸ் ஆண்டனி, பொம்மையின் வாயை அசைத்துச் சொல்ல, மாணவர்கள் திருப்பிச் சொல்கிறார்கள். பிறகு, ஆங்கிலப் பாடம். இப்போது வேறொரு பொம்மை. சில ஆங்கில வார்த்தைகளை எழுதிவைத்துக்கொண்டு திரைக்கு மேலே காட்டுகிறார். அதன் பொருள், உச்சரிப்பு முறை ஆகியவற்றை அந்தப் பொம்மை மூலம் சொல்கிறார். மாணவர்களையும் தனித்தனியாக எழுந்து சொல்லவைக்கிறார்.

இப்படி ஒவ்வொரு முறையும் பாடம் நடத்தும்போது, வெவ்வேறு குரல்களில் அந்தப் பொம்மைகள் மிமிக்ரி செய்கின்றன. சாலைப் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு என ஏதாவது ஒரு தலைப்பில் கலந்துரையாடல், பட்டிமன்றம் நடத்துகின்றன. ஒன்றையொன்று கிண்டல் செய்துகொள்கின்றன.

எப்படி வந்தது இந்தப் பொம்மை யோசனை?

கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் !

'எல்லாம் அன்புதான். நான் கத்துக்கிட்டதும் அதுதான், கத்துக்கொடுக்கிறதும் அதுதான். நான் 2004-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். 2006-ல் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறேன். குழந்தைகள், அவர்களின் உலகத்தில் நம்மை நண்பனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அவர்களுக்குப் பாடங்களைப் புரியவைக்க முடியும் என்று தோன்றியது. அவர்களுக்கு கார்ட்டூன் பொம்மைகள் மீது இருந்த ஆர்வம் தெரிந்தது. அதனால், பொம்மைகள் மூலம் கற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. பொம்மைகள் நம் வாழ்வியலோடு இணைந்தவை. ஆசிரியர் பயிற்சியின்போது எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முதலில், அட்டைகளைக்கொண்டு பொம்மைகள் செய்து, பாடங்களை நடத்தினேன். ஆசிரியராக நேரில் சொல்வதைவிட, பொம்மைகள் மூலம் சொல்லும்போது, உடனே புரிந்துகொள்கிறார்கள்'' என்கிறார் தாமஸ் ஆண்டனி.

திரைக்குப் பின் அமர்ந்து பாடம் நடத்துவது மேலும் பயனுள்ளதாக இருப்பதாகச் சொல்கிறார். ''ஆசிரியர் நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்ற பயம் அவர்களிடம் இருந்து விலகிவிடுகிறது. அதனால், சென்னைக்குச் சென்றிருந்தபோது, 5,000 ரூபாய் மதிப்பிலான இந்தப் பொம்மைகளை வாங்கியிருக்கிறார். இதில், இன்னும் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு குரலில் பேச பயிற்சி எடுத்தேன். இப்போ, எட்டு குரல்களில் மிமிக்ரி செய்வேன்'' என்கிறார்.

கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் !

66மாணவ, மாணவிகள் பயிலும் இந்த நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எண்ணிக்கை 35.

''இதில், பெற்றோரால் கைவிடப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் தான் அதிகம். அதனால், அந்தப் பாதிப்பும் கவலையும் அவர்கள் மனதில் தோன்றக் கூடாது என்ற பொறுப்பும் ஆசிரியர்களாகிய எங்களுக்கு இருக்கிறது. இந்த பொம்மை வழிக் கல்வி, அதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஓர் ஆசிரியர் என்பதைத் தாண்டி, இந்தக் குழந்தைகள் அனைவரும் என்னை நண்பனாகப் பார்க்கிறார்கள்'' என்று சொல்லும்போது, அவர் முகத்தில் அத்தனை பெருமிதம்.

அந்தக் குழந்தைகளிடம் பொம்மைகள் பற்றிக் கேட்டதும் உற்சாகமாகப் பேசுகிறார்கள், 'எங்க எல்லாருக்கும் இந்தப் பொம்மைகளை ரொம்பப் புடிச்சிருக்கு. எல்லாப் பொம்மைகளும் எங்ககிட்ட நல்லாப் பேசும். பாடங்களை நாங்க தப்பா சொன்னாலும் திட்டவே திட்டாது. மறுபடியும் மறுபடியும் சொல்லித்தரும். ஸ்கூல் லீவ் விட்டால், பொம்மைகள்கிட்ட பேச முடியாது. அதுதான் கஷ்டமா இருக்கும்' என்கிறார்கள்.

''நான் பெரியவன் ஆனதும் இவரை மாதிரி ஆசிரியராகி, பொம்மைகளை வெச்சு பாடம் நடத்துவேன்' என்கிறான் ஒரு சிறுவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism