Published:Updated:

சுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி

ஆயிஜா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஜா

சுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி

ஆயிஜா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஜா

Published:Updated:
சுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி

அகதாவுக்கு அப்போது மூன்று வயது. இங்கிலாந்தின் டேவான் (Devon) நகரில் 1890, செப்டம்பர் 15-ல் பிறந்தாள். அகதாவின் அப்பா, அமெரிக்கர். அம்மா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இருவருமே வேலைக்குச் செல்வதால், சிறுமி அகதாவை பக்கத்துத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டில் விடுவார்கள்.

அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள், தினமும் அகதா வீட்டுக்கு வருவார்கள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொள்வார்கள். அம்மா கிளாராவுக்கு பாட்டி மூலம் விஷயம் தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வீட்டில் என்ன நடக்கிறது... ஏன் அகதாவைச் சுற்றி ஒரு கூட்டம்?’ என்று யோசித்த அம்மா, ஒருநாள் தனது வேலைக்கு லீவு போட்டுவிட்டு, நடப்பதை ஒளிந்திருந்து பார்க்க முடிவெடுத்தார்.

சிறிது நேரத்தில் வீட்டில் கூடிய சிறுவர்கள் கூட்டம், குட்டிப் பெண் அகதாவை தோட்டத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே சென்று பார்த்தார் அம்மா. மரத்தடியில் அகதா கதை சொல்லிக்கொண்டிருக்க, எல்லோரும் கண் சிமிட்ட மறந்து, கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பாட்டி தவிர யாருமே இல்லாத அந்தப் பெரிய வீட்டில், சந்து பொந்து விடாமல் நுழைந்து பல மர்மங்களைக் கண்டுபிடிப்பாள் அகதா. அது பற்றி பாட்டிக்கு கதை கதையாகச் சொல்வாள். பொதுவாக, பாட்டிகள்தான் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால், அகதா விஷயத்தில் அப்படி அல்ல. பேத்தி அகதாவிடம் பாட்டி ஆவலாகக் கதை கேட்பார். அகதாவுக்கு அப்போது வயது நான்கு.

அம்மா கிளாரா, அகதாவுக்கும் உடன் பிறந்தவர்கள் மூவருக்கும் வீட்டிலேயே கல்வி அளிக்கத் தீர்மானித்தார். புனித பைபிளை வாசிக்கவும், அது தொடர்பாக எழுதிப் பழகுவதுமே 1890-களில் ஆரம்பக் கல்வி. கணக்குப் போடவும் வீட்டிலேயே கற்பார்கள். அகதா, இவை அனைத்தையும் கதையாகவே புரிந்துகொள்வாள். பைபிள் கதைகளைத் தனது பாணியில் மாற்றி, புதிய கதைகளைச் சொல்லி, அனைவரையும் ஆச்சர்யப்படவைப்பாள்.

சுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி

பாட்டி வீட்டில் இருந்த புத்தகங்கள் அவளை மிகவும் ஈர்த்தன. ஆறு வயதில், அந்தக் காலத்தின் தலைசிறந்த சிறுவர் கதைகளை  வாசித்தாள். மணிக்கணக்கில் புத்தகங்களுடன் காணாமல்போவாள். சாகசக் கதைகள், புதையல் கதைகள், ரயில் சாகசங்கள் எனப் பாட்டி வீட்டில் இருக்கும் புத்தகங்கள் அகதாவுக்குள் நுழைந்தன. படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்,  அந்தக் கதைகளில் வருவது போல நாய்கள், பேசும் கிளி, பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து, கதையாகவே வாழ்வாள்.

'தி வுமன் ஆஃப் கார்டு’ என்கிற கில்பர்ட் மற்றும் சுல்லிகான் எழுதிய கதையை, நண்பர்களோடு நாடகமாக அரங்கேற்றினாள் அகதா. கதாநாயகன் ஃபேர்பாக்ஸ் வேடத்தில் நடித்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியபோது  அவளது வயது ஏழு.

அகதாவை ஒரு பெண்கள் பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கூடத்தின் கெடுபிடிகள் அகதாவுக்குப் பிடிக்கவில்லை. நோட்டுப் புத்தகங்களில் எழுதுவது பெரிய போராட்டமாக இருந்தது. அகதாவை ஒரு டிஸ்லெக்ஸியா வகைக் குழந்தை என்று அறிவித்த பள்ளி நிர்வாகம், அவளை வெளியேறச் சொன்னபோது அகதாவின் அம்மா துடித்துப்போனார்.

எழுதுவதில் உள்ள பிரச்னையில் இருந்து மூன்று ஆண்டுகள் போராடித் தன்னை மீட்டுக்கொண்ட அகதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரின் 'பேஸ் ஸ்கிரிட்’ பள்ளியில் சேர்ந்து, தனது கல்வியை முடித்தாள். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே, அவளது கதை ஒன்று புத்தமாக வெளிவந்து, சிறுவர் மத்தியில் சக்கைப் போடு போட்டது.

அகதா கதை சொல்லச் சொல்ல, அதைச் சகோதரி மார்கரெட் எழுதினார். அந்த மர்மக் கதை அச்சேறியபோது அகதாவுக்கு 11 வயது.  'அகதா கிறிஸ்டி’ என்று பின்னாட்களில் மிகப் பிரபலமானார். 66 மர்ம நாவல்களைப் படைத்து, மர்ம நாவல் உலகின் முடிசூடா ராணி என்று அழைக்கப்பட்ட அகதா, ஒரு சுட்டி நாயகி என்பதில் சந்தேகம் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism