Published:Updated:

கனவு ஆசிரியர் !

அன்பால் அசத்தும் ஆசிரியர்...கு.ஆனந்தராஜ் படங்கள் : அ.நவின்ராஜ்

சிறைக் கைதிகளின் குழந்தைகளைப் படிக்கவைப்பதன் மூலம், அந்தக் குழந்தைகளைத் தனது அன்புச் சிறையில் பூட்டி, அறிவை அளித்து, அழகுபார்க்கிறார் உதயகுமார்.

சேலம் மாவட்டம், சின்னக் கொண்டலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் உதயகுமார், ‘‘பள்ளிக்கு வந்தோம், பசங்களுக்குப் பாடம் நடத்தினோம், வீட்டுக்குப் போனோம் என்று கடனாக ஆசிரியர் பணியைச் செய்ய எனக்குப் பிடிக்காது. நம்மால் நான்கு பேருக்கு நல்லது நடக்க வேண்டும்” என்று அடக்கமாகச் சொல்கிறார் உதயகுமார்.

1990-ல் ஏற்காடு அருகே உள்ள துங்கமடுவு என்ற சிறிய கிராமத்தில் தொடங்கியது, இவரது ஆசிரியர் பணி். ‘‘வாகன வசதி இல்லாத மலைக்கிராமப் பகுதியில் நானே சமைத்துச் சாப்பிட்டு, பல மைல் நடந்தே பள்ளிக்குச் செல்வேன். 1995 முதல் 2005 வரை சேலம் மாவட்டத்திலேயே பல அரசுப் பள்ளிகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். 2005-ல் தலைமை ஆசிரியராக இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றேன்” என்கிறார்.

இவர் வந்தபோது, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் விசைத்தறி கூடங்களின் சத்தங்களுக்கு இடையில் பள்ளி இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவரது தொடர் முயற்சியால், பள்ளிக்கூடம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

கனவு ஆசிரியர் !

‘‘காற்றோட்டமான, அமைதியான இந்த இடத்தில் நாங்க படிக்கக் காரணமா இருக்கிறது, எங்க ஹெட் மாஸ்டர்தான். கழிப்பிட வசதி, குடிநீர் வசதி், மின்சார வசதி எல்லாம் செய்துகொடுத்தது, சார்தான்” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

கணிதம் மற்றும் அறிவியல் உபகரணங்களைத் தனது சொந்தப் பணம் மற்றும் நன்கொடைகள் மூலமாக வாங்கி் வைத்தி்ருக்கிறார். ஒவ்வொரு வீடாகச் சென்று, பெற்றோர்களிடம் கல்வி கற்பதன் அவசியத்தைக் கூறி, மாணவர்களைப் பள்ளிக்கு அதிக அளவில் வரச் செய்திருக்கிறார்.
‘‘நான், அடிக்கடி சிறைச்சாலை விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காகச் செல்வேன். அங்கு இருக்கும் கைதிகளின் பிள்ளைகள் படிக்கிறார்களா என்று கேட்பேன். படிக்காத குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுப்பேன். இந்தப் பள்ளியிலும் அப்படியான சில மாணவர்கள் படிக்கிறார்கள்” என்கிறார்.

தொன்போஸ்கோ அன்பு இல்லத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளையும் இந்தப் பள்ளியில் சேர்த்து, கற்றல் திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிகளையும் அளிக்கிறார். படிக்க வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு, வாரம் ஒரு முறை பயிற்சி அளிக்கிறார்.

2007-ல் மாநில நல்லாசிரியர் விருது, தேசிய நல்லாசிரியர் விருது, இந்திய மேலாண்மைக் கழகம் மற்றும் ரத்தன் டாடா இணைந்து வழங்கும் கனவு ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ள இவர், ‘‘இந்த விருதுகளை என் பணிக்கான பெருமையாக நினைக்காமல், இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் செய்தியாகவே எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்லி வியக்கவைக்கிறார் உதயகுமார்.