Published:Updated:

உலக உலா...

விதவிதமா வித்தைகள் !

உலக உலா...

விதவிதமா வித்தைகள் !

Published:Updated:

கே.யுவராஜன்

 ஹாய் சுட்டீஸ்... நம்ம ஊர் கழைக் கூத்தாடிகளைப் போல பிழைப்புக்காக மட்டும் இல்லாம,  ஜாலிக்காகவும் பல வித்தைகளை உலகம் முழுக்க செய்றாங்க. அப்படி சிலரை 'உலக உலா’ மூலமா சந்திக்கலாமா...

உலக உலா...
##~##

இந்தியாவில் இருந்தே ஆரம்பிக்கலாம். பாட்னாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நகரம்... புத்த கயா. இங்குள்ள புகழ்பெற்ற புத்தர் கோயிலில் திபெத்திய தலைவர் தலாய் லாமா மாணவர்களுக்கு யோகா கற்றுத் தர்றார். இங்கே யோகா கற்ற ஒன்பது வயது சுட்டி மெய்டி, மக்கள் முன்னாடி செய்து காட்டுகிறாள். கூடவே ஒரு முயலும் யோகா செய்யுது. ஒரு மேஜை மீது உடலைச் சுழற்றியும் வில்லாக வளைச்சும் மெய்டி செய்றப்ப முயலும் செய்து அசத்துது. ('முயலும்’ சிறுமியே, 'முன்னேறிக் காட்டு!)

ஜெர்மனியை சில ஆண்டுகளாகக் கலக்கிய தொங்கு ராஜா... ஜான் லோர்பிர்(Johan Lorbeer). மக்கள் கூடும்  இடத்தின் உயரமான சுவரில், இடது உள்ளங்கையை ஒட்டிக்கிட்டு அந்தரத்தில் தொங்குவார். பேலன்ஸ் செய்ய கயிறோ, கம்பியோ எதுவுமே இல்லை. இன்னொரு கையால் கூல்டிரிங்ஸ் குடிப்பார், வாயைப் பிளந்து பார்க்கும் மக்களை நோக்கி சிரிப்போடு கை அசைப்பார். இதுக்கு 'ஸ்டில் லைஃப்’ என்று பெயர் வைத்து இருந்தார். இதை எப்படி செய்றாருன்னு பலரும் மண்டையை உடைச்சுக்கிட்டாங்க. ஒரு வழியாக ரகசியத்தைச் சொன்னார். அந்த இடது கை அச்சு அசலாக ஒரு பிளாஷ்டிக் கை. அதை சுவரொடு ஃபிக்ஸ் பண்ணிட்டு, உண்மையான கையால் பிடிச்சுக்கிட்டு இருந்திருக்கார். (தன்னம்பிக்'கை’யோட பிளாஸ்ட்டிக் கையையும் வெச்சு சாதிக்கலாம் போல!)

உலக உலா...

போலந்து நாட்டின் க்ரகொம் பகுதியில் இருக்கும் மார்சின் சிஸ்லக் (marcin cislak) என்ற பெண், அந்தப் பகுதியில் ரொம்பவும் பேமஸ். சாலை ஓரம் சம்மணம் போட்டு உட்கார்ந்துப்பாங்க. கையில் நீளமான கொம்பு. அதன் ஒரு முனையைத் தரையில் ஊன்றி, மறுமுனையை ஒரு கையால் பிடிச்சுக்கிட்டு கண்களை மூடிப்பாங்க. கொஞ்ச நேரத்துல அப்படியே அந்தரத்தில் மிதக்க ஆரம்பிச்சுடுவாங்க. முனிவர்கள் தவம் செய்ற மாதிரி இருக்கும். பல நாட்கள் பயிற்சியில் இதை சாதிக்கிறாங்க மார்சின். இவரை  'மிதக்கும் யோகி’ என்று மக்கள் செல்லமாக சொல்றாங்க.  (இவங்களை 'தவம்’ இருந்து பெத்தாங்களோ!)

உலக உலா...

லண்டனில் எரிக் என்பவர் தலைமையில் 'கிரீன் பீபிள்’ என்று ஒரு அமைப்பு இருக்கு. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் முகம் உள்பட,  உடலை ஒரு பச்சை ஆடையால் மூடிப்பாங்க. ஹோட்டல், சாலை போன்ற இடங்களில் ஒண்ணு கூடி பசுமை, சுற்றுச்சூழல், நோயற்ற வாழ்வு போன்ற ஏதாவது ஒரு செய்தியை மையமாக வைத்து பாட்டு, நடனம், நாடகம் நடத்துறாங்க. தெரு வித்தையா ஆரம்பிச்சு இப்ப இவங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு (பசுமரத்து ஆணியா மனசுல பதிஞ்சுட்டாங்க!)

உலக உலா...

தென் கொரியாவின் மத்திய சியோல் நகரில், ஆண்டுதோறும் 'வணக்கம் சியோல்’ என்ற திருவிழா நடக்கும். இதில் 'வண்ண மனிதர்கள்’ என்ற பெயரில் உடல் முழுவதும் பெயின்ட்டை லிட்டர் கணக்கில் பூசிக்கிட்டு  செய்ற  வித்தை, சுட்டிகளை மிகவும் கவரும். இதைவிட ஜாலியான தெரு வித்தைகளைப் பார்க்க... ஸ்பெயின் நாட்டுக்குப் போகணும். 'லா லாம்ப்ரா’ என்ற இடத்தின் மிக நீண்ட சாலையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை ஒரே கலர் கலக்கல்தான். பல்வேறு வித்தியாசமான வேடங்களில் கலக்குவாங்க. பல்வேறு நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவாங்க. நாள் முழுவதும் பார்த்தாலும் சலிப்பே வராது. (சுத்தம் செய்துக்க எத்தனை 'டன்’ சோப் தேவைப் படுமோ!)