Published:Updated:

நோபல் லேடி....100 வருஷம் !

நோபல் லேடி....100 வருஷம் !

நோபல் லேடி....100 வருஷம் !

நோபல் லேடி....100 வருஷம் !

Published:Updated:

த.வி.வெங்கடேஸ்வரன்

இந்த ஆண்டு, மேரி க்யூரி வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற நூறாவது ஆண்டாகும். இந்த ஆண்டை ஐ.நா குழு வேதியியல் ஆண்டாகக் கொண்டாடுகிறது என்பது இன்னும் ஒரு சிறப்பு!

 நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது மட்டுமல்ல, இரண்டு வேறு  வேறு துறைகளில் நோபல் பரிசுகளைப் பெற்றவர் என்ற தனிப் பெருமையும் மேரி கியூரிக்கு மட்டுமே உண்டு!

நோபல் லேடி....100 வருஷம் !
##~##

போலந்து நாட்டில் பிறந்தவர் மேரி. இயற்பெயர் மரியா ஸ்க்லோடோவ்ஸ்கா. இவரது தந்தையார் இயற்பியல் ஆசிரியர். தாயார் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை.

அப்போது ரஷ்யாவின் அடிமை நாடாக போலந்து இருந்தது. எனவே, போலந்து மக்கள் கல்வி கற்பதை ரஷ்யா தடை செய்து இருந்தது. எனவே, மேரி மற்றும் அவரது சகோதரிகள் ரகசியமாக இரவில் ஆரம்பக் கல்வி கற்க வேண்டியிருந்தது. மேலும், ஐரோப்பாவில் பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் பெண்கள் படிக்க அனுமதி இல்லை. பாரிஸ் நகரில் சோர்போன் (Sorbonne) பல்கலைக் கழகத்தில் மட்டுமே பெண்கள் கல்வி கற்க வசதி இருந்தது. அதனால், மேரியும்  அக்கா பிரானியாவும் மேற்படிப்புக்காகப் பாரிஸ் நகருக்குச் சென்றனர்.

குடும்பச் சூழல் காரணமாக இருவரின் படிப்புக்கு போதிய  வசதி இருக்கவில்லை. எனவே, இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். முதலில், மேரி ஒரு செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலை செய்து பணம் ஈட்டுவது; அக்கா படிப்பது. அக்கா படித்து முடித்ததும், அவர் வேலைக்குச் சென்று மேரியின் கல்விக்கு உதவுவது என்பதே அந்த ஒப்பந்தம்.

இப்படி ஆறு ஆண்டுகள் வீட்டு வேலை செய்து மேரி பணம் சம்பாதித்து அக்காவுக்கு உதவினார். பிரானியா பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1891-ஆம் ஆண்டு மேரி தன் உயர் கல்வியைத் தொடங்கினார். அக்கா உதவினாலும், பற்றாக்குறைதான். பாழடைந்த தங்குமிடத்தில் சரியான உணவு, உடை இன்றி, பாரிஸ் நகர கடுங்குளிரைச் சமாளித்து, படித்து முடித்தார் மேரி.

அதன்பின் லிப்மன் எனும் விஞ்ஞானியின் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும்போது,  பியரி கியூரியைச் சந்தித்தார். திருமணத்துக்குப் பின்பு, உனது ஆய்வுக்குத் தடையை கூற மாட்டேன் என பியரி உறுதியளித்த பின்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சரி,  இரண்டு நோபல் பரிசுகள் கிடைக்கும் படி என்னதான் செய்தார் மேரி?

ஹென்றி பெக்குரல் என்பவரின் ஒரு கட்டுரையைப் படித்த பின்புதான் கியூரி தம்பதியினர் கதிரியக்கம் குறித்து தங்கள் ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்கள்.

வேதிமுறை கொண்டு பொட்டாசியம், யுரேனியம் மற்றும் சல்ஃபரைப் பிரித்துப் பார்த்தபோது, யுரேனியம் மட்டுமே கதிரியக்கம் வெளிப்படுத்துவது உறுதிப் பட்டது. எனவே, கதிரியக்கம் என்பது தனிமங்களின் கூட்டுக் கலவை ஏற்படுத்தும் குணம் அல்ல என்பது விளங்கியது.

நோபல் லேடி....100 வருஷம் !

எக்ஸ்ரே தூண்டப்பட மின்னாற்றல் வேண்டும். ஆனால்... யுரேனியம், தோரியம், இவற்றில் வெளிப்படும் கதிரியக்கக் கதிர்கள் தாமே சுயம்புவாக உலோகத்தில் இருந்து தொடர்ச்சியாக எப்போதும் வெளி வந்து கொண்டிருந்தன. எனவே, இது இயற்கை நிகழ்வு என்பதைத் தெளிவுபடுத்தி, இந்த இயற்கை வினைக்கு கதிரியக்கம் (Radioactivity) என்று பெயரிட்டனர். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக... மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்றி பெக்குரல் மூவருக்கும் 1903-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

யுரேனியம்... பிட்ச்பிளன்டு (Pitchblende Ore) எனும் கனிமத்தில் இருந்துதான்  கிடைத்தது. அவ்வாறு பிட்ச்பிளன்டு கனிமத்தில் இருந்து யுரேனியத்தைப்  பிரித்தெடுத்த மேரிக்கு, தூய யுரேனியம் வெளியிட்ட கதிரியக்கத்தை விட, யுரேனியம் இல்லாத பிட்ச்பிளன்டு கழிவு வெளியிட்ட கதிரியக்கம் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நோக்கில் தமது ஆராய்ச்சிகளைத் தீவிரப் படுத்தினர் கியூரி தம்பதியினர். அடுத்த மூன்று மாதங்கள் மேரியும், பியரியும் இரவு பகலாக உழைத்து, பிட்ச்பிளன்டியை சுத்திகரித்துச் சோதித்ததில், யுரேனியத்தை விட 400 மடங்கு அதிகக் கதிர் வீசும் புதிய, இதுவரை அறியப்படாத தனிமம் (Element) ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு, மேரி தன் நாட்டின் நினைவாக 'பொலோனியம்’ (Polonium) எனப் பெயரிட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், யுரேனியம் மற்றும் பொலோனியம் பிரித்து எடுக்கப்பட்டும் மீதம் இருந்த  பிட்ச்பிளன்டு கழிவு, முன்னை விட அதிக கதிரியக்கத்தைக் காட்டியது. யுரேனியக் கதிரியக்கத்தை விட 900 மடங்கு அதிகமாக உக்கிரமாக கதிரியக்கம் செய்யும், மேலும் ஒரு புதிய தனிமத்தை 1898-ல் பிரித்து எடுத்தனர். இருளில் ஒளிர்ந்த அந்தத் தனிமத்துக்கு ரேடியம் (Radium) எனப் பெயரிட்டனர்.

ரேடியத்தைக் கண்டுபிடித்ததற்காக 1911- ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.  

இப்படி அறிவியல் துறைக்காக அயராது உழைத்தார். கியூரியின் புகழுக்குக் காரணமாக இருந்த ரேடியமே அவருடைய மரணத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது.