Published:Updated:

ஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்!

ஈ.கோ.சஞ்ஜீத்

பிரீமியம் ஸ்டோரி

''எட்டு வயதில் 35 மெடல்கள். இத்தனைக்கும் முறையான பயிற்சியாளர் இல்லாமல் இந்தச் சாதனை!'

ரோஷனைப் பற்றி இப்படித்தான் சர்ப்ரைஸ் அறிமுகம் தருகிறார்கள். பல இளம் மாரத்தான் போட்டிகளில் ஓடி ஓடி வெற்றிக் கோட்டை முத்தமிடும் சுட்டி.

ஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்!

சென்னை, அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார் ரோஷன். இவரது அப்பா, ஜனார்த்தனன். இவருக்கும் மாரத்தான் போட்டிகளில் ஆர்வம் அதிகம். ''2012-ம் வருஷம் புதுச்சேரி, ஆரோவில்லில் ஒரு மாரத்தான் போட்டி நடத்தினாங்க. அதுக்குப் போகும்போது ரோஷனையும் கூட்டிட்டுப் போனேன். அவனை டிரைவர்கிட்டே பார்த்துக்கச் சொல்லிட்டு, போட்டியில் கலந்துக்கிட்டேன். திடீர்னு பார்த்தா, நிகழ்ச்சி மேடையில் பரிசோடு நின்னுட்டு இருக்கான். அப்புறம்தான் தெரிஞ்சது, ஜூனியர் பிரிவுக்கும் போட்டி நடக்கிறதைப் பார்த்து, இவனாக ஆர்வத்துடன் கலந்து கொண்டு  ஜெயிச்சிருக்கான்' எனச் சொல்லி, ரோஷனை அணைத்துக் கொண்டார்.

ஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்!

சிரிக்கும் ரோஷன், '' 'உங்க பெர்மிஷன் இல்லாம் கலந்துக்கிட்டதுக்கு ஸாரிப்பா’னு அப்பவே சொல்லிட்டேன். எல்லோரும் ஓடிட்டு இருக்கிறதைப் பார்த்ததும் என்னால சும்மா இருக்க முடியலை. அதான், நானும் ஓட ஆரம்பிச்சுட்டேன்' என்கிறார்.

5 கிலோமீட்டர், 7 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் எனப் பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களுடன் வருவது ரோஷனின் ஃபேஷன்.

''தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என எங்கே மாரத்தான் போட்டி நடத்தினாலும் கிளம்பிடுவேன். நான் ஓடும்போது, மரங்கள், கட்டடங்கள் எல்லாம் பின்னாடி போகப்போக, 'ஓடியே உலகத்தைக் கடந்துடணும்’னு உற்சாகம் ஏற்படும். வானத்தைப் பார்க்கிறப்ப, மேகங்கள் எல்லாம் வேற வேற உருவங்களில் என்னைப் பார்த்து உற்சாகமாகச் சிரிக்கும். வாழ்த்திக் கை தட்டுற மாதிரியே இருக்கும்' என்று ரோஷன் சொல்லும் ஒவ்வொரு வரியும் க்யூட்.

ஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்!

சென்னை மேயர் சைதை துரைசாமி,  சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நடிகர் அரவிந்த்சாமி எல்லாம் ரோஷன் ரசிகர்களாம்.

''100 மீட்டர் ஓட்டத்தின் உலகச் சாம்பியன் உசேன் போல்ட், மில்கா சிங் தான் என்னோட ரோல்மாடல். நானும் இவங்களைப் போல சாதிப்பேன். கொச்சியில் ஒரு மாரத்தான் போட்டி நடக்கப்போகுது. இப்போ, அதுக்காக பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கேன் அங்கிள்' எனச் சொல்லிவிட்டு, ஓட ஆரம்பித்தார் இந்த இளம் ர(வி)ன்னர்.

படங்கள்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு