Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

போயா கீதாஞ்சலி- ஆயிஷா இரா.நடராசன், ஓவியம்: கண்ணா

பிரீமியம் ஸ்டோரி

அன்புமிக்க போயா கீதாஞ்சலிக்கு...

வீரவணக்கம்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் கிராமத்தை உலகம் அறியவைத்த வீராங்கனை நீங்கள்.

மற்றவர்களின் வயிறு நிறைவதற்காக, வெயில், மழை பாராது வயலில் இறங்கி உழைக்கும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தீர்கள். அப்போது, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள். சுமார், 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே போவீர்கள்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

மற்ற குழந்தைகள், தொடக்கக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு, விவசாய வேலைக்குப் போய்விடும் துயரம் தொடர்ந்த அந்த நாட்களில், உங்கள் தந்தை,  உயர்நிலைப் பள்ளிக்கு உங்களை அனுப்பி வைத்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரே படித்த பெண், உங்கள் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ. ஆனதை ஊரே கொண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது. ஆந்திராவில் பெண் எம்.எல்.ஏ.க்கள் மிகவும் அபூர்வம்.

வருடம் 2003. உங்களது அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது அந்தச் சம்பவம் நடந்தது. அப்பா, அம்மாவுக்கு வயல் வேலைகளில் உதவிவிட்டு, மாலையில் நண்பர்களுடன் விளையாடப் போனீர்கள். கோயில் திருவிழா  நடத்தவும் பஞ்சாயத்துகள் நடத்தவும் ஒரு பொட்டல் வெளி இருந்தது. அங்கேதான் விளையாட்டு.

மாலை வேளை... இருட்டியிருந்தது. சற்று அருகே இருந்த பெண் எம்.எல்.ஏ. வீட்டின் பின்புறம் விழுந்த பந்தை எடுக்கப் போனீர்கள். அப்போது, அந்த வீட்டின் ஜன்னல் வழியே கண்ட காட்சி, உங்களைத் திடுக்கிடவைத்தது. கையில் துப்பாக்கியுடன் சிலர் உள்ளே இருப்பதைப் பார்த்துவிட்டீர்கள். யாரையோ அடித்துத் துன்புறுத்துவது போல சத்தம். நீங்கள் உடனடியாக நண்பர்களை அழைத்தீர்கள். அங்கே வந்த தோழிகள், விவரம் புரிந்ததும் ஓடிவிட்டனர்.

நீங்களும் நமக்கேன் வம்பு என்று போயிருக்கலாம். ஆனால், உங்கள் மனம் அதை ஏற்கவில்லை. அந்த வீட்டின் பின்பக்கச் சுவரின் மேலே ஏறி  உள்ளே குதித்தீர்கள். அவர்கள் ஆறு, ஏழு பேர் இருந்தார்கள். திருடர்கள் என்றுதான் முதலில் நினைத்தீர்கள். அந்தப் பெண் எம்.எல்.ஏ.வை அவர்கள் எங்கோ அழைக்க, அவர் மறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் உங்களுக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. அவர்கள், பெண் எம்.எல்.ஏ.வைக் கடத்திச் செல்ல வந்திருக்கும் நக்சல் தீவிரவாதிகள். சட்டென்று உங்களிடம் வீரமும் ஆவேசமும் கூடியது. அங்கே இருந்த கற்கள், கட்டை எனக் கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து அவர்கள் மீது வீசி, பெருங்கூச்சல் போட்டீர்கள்.

உயிரைப் பெரிதாக நினைக்காத உங்கள் வீரம், சிலிர்ப்பான விஷயம் கீதாஞ்சலி. இப்படித் திடீரென  பின்னால் இருந்து ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் போட்ட கூச்சலில், ஊர் கூடிவிடுமோ எனப் பயந்தார்கள். கோபமாகி, துப்பாக்கியால் உங்களை நோக்கிச் சுட்டார்கள். உங்கள் தொடையிலும் தோளிலும் குண்டுகள் பாய்ந்தன.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அப்போதும் நீங்கள் விடவில்லை. இன்னும் அதிக சத்தத்துடன் கூவியவாறு, பாத்திரம், தகர நாற்காலி எனக் கிடைத்தவற்றை எதிரிகள் மீது வீசினீர்கள். பிறகு, மயங்கி விழுந்துவிட்டீர்கள்.

அதற்குள் சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரள, தீவிரவாதிகள் ஓடிவிட்டார்கள். பெண் எம்.எல்.ஏ கடத்தப்பட இருந்த சம்பவத்தையும் 12 வயது சிறுமியின் வீரதீரச் செயலையும் மறுநாள் பத்திரிகைகளில் படித்து, நாடே வியந்தது. எவ்வளவு பெரிய வீராங்கனை நீங்கள்!

மருத்துவமனையில் உங்களுக்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஊர் முழுதும் துணை ராணுவம் இறக்கப்பட்டது. பலரும்  மருத்துவமனைக்கு வந்து, உங்களுக்கு கைகுலுக்கி நன்றி கூறினார்கள்.

2004 குடியரசு தினத்தில், புதுடெல்லி வீதிகளில் யானை மீது வலம் வந்தீர்கள். வீரதீர விருதான, 'கீதா சோப்ரா’ விருதை உங்களுக்கு ஜனாதிபதி வழங்கினார்.

வீரத்தின் இலக்கணமே, தியாகத்தின் பிறப்பிடமே. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு எங்களின் வீரவணக்கம்.

மிக்க அன்புடன்,

சுட்டி இந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு