Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி

பாவம் டோடோ!

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், மொரீஷியஸ் தீவில் வாழ்ந்துவந்த பறக்க முடியாத பறவை இனம், டோடோ. ஒரு மீட்டர் உயரம் இருக்கும் இந்த டோடோ பறவை, பழங்களை உண்டு, கூடுகட்டி வாழ்ந்தது. ஒரே ஒரு முட்டை இட்டு அடைகாக்கும். 1507-ம் ஆண்டு வரை எவரும் இதை அறியவில்லை. கப்பலில் சென்ற மாலுமிகள் மொரீஷியஸ் தீவில் ஒதுங்கியபோது, இந்தப் பறவையைப் பிடித்து உண்டார்கள்.போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்களின் குடியேற்றத்தால் படிப்படியாக அழியத்தொடங்கி, 1681-க்குப் பிறகு முற்றாக அழிந்துபோனது.

- எம்.சிவா,ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா பள்ளி, மகாராஜ நகர், திருநெல்வேலி.

நகங்களைக் கவனி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

நகங்கள், நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி. நகங்களில் சொத்தை விழுந்து கறுத்துக் காணப்பட்டால், உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள். நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவில் மாற்றம் இருப்பதாக அர்த்தம். விரல் நகங்கள் சற்று நீல நிறமாக இருந்தால், இதயம் பலவீனமாக இருப்பதாகும். சற்றே மஞ்சள் நிறத்தில் இருந்தால், ரத்தத்தில் நிகோட்டின் விஷம் கலந்து இருக்கிறது என்று பொருள். நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத்தொல்லை இருப்பதற்கான அடையாளம். உப்பினாற்போல் இருந்தால், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கான அடையாளம். எனவே, நகங்களைக் கவனியுங்கள்... எந்த மாற்றம் தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

- க.ஆனந்தி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காந்திஜி சாலை, ஈரோடு.

பஃப்ஃபர் பிஷ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

பஃப்ஃபர் பிஷ் (Puffur Fish) என்ற மீன், மிகவும் மெதுவாக நகர்பவை. அதனால், வேட்டை மீன்களிடம் சுலபமாக மாட்டிக்கொள்ளும். இதிலிருந்து தப்பிக்க,  தன்னுடைய உருவத்தை இரு மடங்கு பெரிதாக்கிக் காட்டும். தனது பெரிய உருவத்தைக் கண்டும் வேட்டை மீன்கள் மிரளவில்லை எனில், அடுத்த ஆயுதமாகத் தன் உடம்பில் உள்ள முட்களால் எதிரியைத் தாக்கும். அந்த முட்களில் உள்ள விஷத்தன்மை எதிரியை விரட்டி அடிக்கும்.

- செ.சுபஸ்ரீ, பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்புணரி, சிவகங்கை.

பாதுகாப்புக் கவசம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

எறும்புத்தின்னிக்கு பற்கள் கிடையாது. பார்வைத்திறனும் குறைவு. ஆனால், நுகர்வுத்திறன் அதிகம். உணவைத் தேடுவதற்கும் எதிரிகளைத் தெரிந்துகொள்வதற்கும் மோப்ப சக்தியையே  பயன்படுத்துகிறது. கேட்கும் சக்தியும் அபாரமானது. இவற்றின் முதுகிலும், பக்கவாட்டிலும் கடினமான, ஒன்றன் மேல் ஒன்று ஏறிய செதில் அமைப்பு இருக்கும். இவை, 'கெரட்டின்’ எனப்படும் மாற்றி அமைக்கப்பட்ட முடிகளே. இதுவே, எறும்புத்தின்னியின் பாதுகாப்புக் கவசம். இந்தச் செதில்களுக்கு நடுவேயும் மற்றும் உடலின் அடிப்பகுதியிலும் சாதாரண முடிகள் வளரும். தான் பயந்துவிட்டாலோ அல்லது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவோ, தன் உடலைப் பந்து போல சுருட்டிக்கொள்ளும். செதில்களின் ஓரம், கத்திபோல் விரிந்து, காப்பாற்றும்.

- க.கிரண்ராஜ், சேதுபாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர், சென்னை - 53.

கொடிய பாம்புகளைக் கொஞ்சும் சிறுமி!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், 9 வயதுச் சிறுமி,  செல்லப் பிராணிகளைப் போல அவற்றை வீட்டில் வளர்க்கிறாள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா குவாரினோ (Krista Guarino)வின் வீட்டுக்குச் சென்றால், திரும்பிய பக்கம் எல்லாம் பாம்புகள் வரவேற்கும். 12 மலைப் பாம்புகள் உட்பட, 30 வகையான ஊர்வனவற்றை வளர்க்கிறார். அவற்றுடன் சாப்பிடவும், உறங்கவும், விளையாடவும் செய்கிறார். இவரது தந்தை, ஊர்வன இன வல்லுநர்.  கிறிஸ்டாவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே பாம்புகளை அறிமுகம் செய்துள்ளார்.

''பாம்புகளுக்குப் பலரும் பயப்படுகிறார்கள்; அவற்றைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால், அவை அமைதியானவை, ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியவை. என்கிறார் கிறிஸ்டா.

- ச.மதுரவாணி ஜேப்பியர் பள்ளி, செம்மஞ்சேரி, சென்னை.

மிளகாய் 60 ஆயிரம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் முக்கியமானது மிளகாய். இதில், பல வகைகள் உண்டு. யூ மொரோக் (U -  Morok) என்ற மிளகாய்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்தது. 1 கிலோ மிளகாய் 60 ஆயிரம் ரூபாய் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். அதோடு, உலகிலேயே மிகக் காரமுள்ள மிளகாய்களில் இரண்டாவதாக உள்ளது, யூ மொரோக். இந்தியாவில், மணிப்பூரில் விளைகிறது. ஜப்பான், சீனாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அது சரி, நம்மால் வாங்கக் கூடிய விலையா இது?

- ஆர்.அபிஷேக் வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துடியலூர்,ல் கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு