பிரீமியம் ஸ்டோரி
பென்டிரைவ்

வான்புகழ் வள்ளுவர், ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார். இந்திய அரசு, திருவள்ளுவரின் பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், திருவள்ளுவரின் சிலையை நிறுவ, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம். 'சிலையை வைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்து வருகிறோம். இதன் மூலம் இந்தியாரஷ்யா இடையேயான கலாசாரப் பரிமாற்றம், நட்புறவு மேம்படும்’ என்று இந்தியாவுக்கான ரஷ்யத் துணைத் தூதர், கோட்டோவ் (Kotov) தெரிவித்துள்ளார். வாழ்க வள்ளுவம்!

பென்டிரைவ்

தாய்லாந்து நாட்டின் தெற்குக் கடல் பகுதியில் அமைந்துள்ள, 'கோ பன்யி’ (Koh Panyee)  தீவில், மிதக்கும் கால்பந்து மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மலைகளால் சூழ்ந்த இந்தத் தீவில், மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். தினமும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் இவர்கள், மாலையில் இந்த மைதானத்தில் ஒன்றுகூடி, கால்பந்து விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். தண்ணீருக்கு நடுவில் மீனவர்களே அமைத்த இந்த மைதானம், உலகக் கால்பந்து விளையாட்டு வீரர்கள், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கோல் போட்டதும் குஷியில் தண்ணீரில் டைவ் அடிப்பாங்க போல...

பென்டிரைவ்

'ஒரே நேரத்தில் இரண்டு சந்திரன்களா?’ என்று வியப்பாக இருக்கிறதுதானே... மேலே தெரியும் சந்திரன் மட்டுமே உண்மை. கடலில் தெரிவது, சந்திரன் வடிவில் உள்ள ஒரு ஹோட்டல். இந்த ஹோட்டலின் பெயர், சில்வர் பேர்ல் (Silver Pearl). கத்தாரின் தலைநகர் தோஹாவில், கடல் நடுவே கட்டப்பட்டு வருகிறது. 30 மாடிகள், 1,000 அறைகளுடன் கூடிய இதைக் கட்டி முடிக்க, இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகுமாம். ஹோட்டலுக்குச் செல்ல, ஹெலிகாப்டர், படகு வசதிகள் செய்யப்படும். கடற்கரையில் இருந்து சாலையும் அமைக்கப்பட உள்ளது. 2022-ல், தோஹாவில் உலக கால்பந்துப் போட்டி நடக்க உள்ளது. அதற்குள் இதனைக் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதிசய சந்திரன்!

பென்டிரைவ்

துபாயில் உள்ள இந்தியப் பள்ளி 'ஜெம்ஸ்’, உலகைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.  கடந்த டிசம்பர் 2-ம் தேதி, 119 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒன்றுகூடி, தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியது. உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு, துபாய் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு நன்றி கூறும் விதமாக, துபாயின் 43வது தேசிய தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. 119 நாடுகளைச் சேர்ந்த ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஹேட்ஸ் ஆஃப்!

பென்டிரைவ்

டிசம்பர் என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று, கிறிஸ்துமஸ் மரம். மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹோண்டுராஸ் (Honduras) நாட்டில், 2,945 பேர் ஒன்றுசேர்ந்து, கிறிஸ்மதுஸ் மரம் போல நின்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் உடையணிந்து வந்த அவர்கள், 6 நிமிடம் 28 நொடிகளில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தினார்கள். ஹேப்பி கிறிஸ்துமஸ்!

பென்டிரைவ்

நீங்கள் தேடும் பழைய புத்தகங்கள், எங்கு தேடியும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? இங்கிலாந்துக்கும் வேல்ஸுக்கும் இடையில் உள்ள 'ஹே-ஆன்-வை’ (Hay-on-Wye) நகருக்குப் போங்க. உலகில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இங்கு கிடைக்கும். இந்த நகரம் முழுவதும் பழைய புத்தகக் கடைகள்தான். சாலை ஓரங்களிலும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இதில் ஒரு சிறப்பு, அங்கு விற்பனையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நமக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அருகே இருக்கும் பெட்டியில் அதற்கான பணத்தைப் போட்டுவிட வேண்டும். இந்த மாதிரியான கடைகளை ‘Honesty Book shops’ என்று அழைக்கிறார்கள். புத்தகப் பிரியர்கள் வேட்டையாட சரியான இடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு