பிரீமியம் ஸ்டோரி

'ஹாய் ஜீபா... காற்றழுத்தத் தாழ்வு நிலைக்கும் புயலுக்கும் என்ன வித்தியாசம்?

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

மைடியர் ஜீபா

'சின்ன வயதில் அட்டகாசம் செய்யும் ஒருவன், வளர்ந்ததும் அதிக அட்டகாசம் செய்தால் என்ன வித்தியாசமோ, அதேதான். காற்று, கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் தன்மைகொண்டது. காற்றை, வெப்பக் காற்று, ஈரக்காற்று என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். வறண்ட வெப்பக் காற்று, அடர்த்தி குறைந்திருக்கும். எனவே, இது மேல் நோக்கி நகர்ந்துவிடும். ஆனால், ஈரக்காற்று மெதுவாக மேல் நோக்கிச் செல்வதால், குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்ல முடியாமல் தங்கிவிடும். இதன் மீது மேலும் மேலும் ஈரக்காற்று வந்து சேரும்போது, அந்தப் பகுதியில் அழுத்தம் (Depression) ஏற்படும். இதையே காற்றழுத்தத் தாழ்வுநிலை என்று  சொல்கிறார்கள். இது, தீவிரக் காற்றழுத்தமாக மாறி, மணிக்கு 52 முதல் 61 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதுவே, சின்ன வயசு அட்டகாசம். ஓரளவுக்கு சேதம் உருவாக்கக்கூடியது. இந்த அளவையும் தாண்டி, மணிக்கு 62 முதல் 88 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால், அதுதான் புயல்.'

'டியர் ஜீபா... என் வீட்டில் லவ் பேர்ட்ஸ் வாங்கி இருக்கிறேன். அதை வளர்ப்பது பற்றி கொஞ்சம் டிப்ஸ் சொல்லேன்'

- ஆர்.சிவா, போச்சம்பள்ளி.

மைடியர் ஜீபா

'வெரிகுட் சிவா! பழகிவிட்டால், பாசம் கொட்டும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ் முக்கியமானது. அதன் கூண்டை, காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். கூண்டில் ஒரு கொம்பைக் கட்டிவைத்தால், பறவைகள் ஏறி நிற்கவும் ஊஞ்சல் ஆடி மகிழவும் வசதியாக இருக்கும். கூண்டின் அடிப் பகுதியில் பழைய செய்தித்தாளைப் பரப்பி, தினமும் மாற்றுங்கள். உணவு வைக்க தனிக் கிண்ணம், நீர் வைக்க தனிக் கிண்ணம் பயன்படுத்துங்கள். ரொம்பப் பெரிய கிண்ணங்களாக வைத்துவிடாதீர்கள். சாப்பிடும்போதோ, நீர் அருந்தும்போதோ கிண்ணத்தில் தவறி விழுந்துவிடும். இவற்றுக்கு மிகவும் பிடித்தவை தினை, முட்டைக்கோஸ், பசலைக் கீரை, ஆப்பிள் பழத் துண்டுகள்.  

இவற்றை மாற்றி மாற்றி அளிக்கவும். இந்த உணவுகளைத் தேடி, எறும்புகள் வரலாம். அதைக் கண்காணித்து, சுத்தப்படுத்துவது முக்கியம். காலையிலும் மாலையிலும்  பறவைகளோடு பேச்சுக் கொடுங்கள். நாளடைவில் உங்களை அடையாளம் தெரிந்துகொண்டு நெருங்கிப் பழகும்.'

'டியர் ஜீபா... அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன பயன்?'

- த.அருண், குன்னத்தூர்.

மைடியர் ஜீபா

'மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்களில், அத்தியும் ஒன்று. இதன் இலைகளைச் சாறாக்கி, பித்தம், வாய்ப் புண், ரத்தக் கசிவு ஆகியவற்றை நீக்கலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களைச் சாப்பிட்டால், மலச் சிக்கல் நீங்கும். உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பு பெறும். உடல் மெலிந்தவர்கள், தேவையான எடை பெறலாம். ஆனால் ஒன்று, மரத்தில் இருக்கும் அத்திப்பழத்தை நேரடியாக எடுத்துச் சாப்பிடும்போது, அவற்றில் புழுக்கள் இருக்கலாம். உலரவைத்து, பதப்படுத்திச் சாப்பிடுவது சிறந்தது.'

'ஹலோ ஜீபா... காளைகளுக்கு சிவப்பு நிறம் பிடிக்காது என்பது ஏன்?'

- கே.ஆர்.ரிதன்யா, தஞ்சாவூர்.

மைடியர் ஜீபா

'பல காலமாக இருக்கும் தவறான நம்பிக்கையில் இதுவும் ஒன்று. பசு, காளை போன்றவை, நிறக்குருடு (Colour blindness) உடையவை. இவற்றினால் எந்த நிறத்தையும் பிரித்து அறிய முடியாது. எல்லாம் ஒன்றுபோலவே தெரியும். துணி மட்டும் அல்ல, தனக்கு முன்பு, தொல்லைதரும் எந்தப் பொருளை அசைத்தாலும், அவை முட்ட வருவது இயற்கை. அது, எந்த நிறமாக இருந்தாலும் அப்படித்தான் செய்யும். பிறகு, 'ஏன் வெளிநாடுகளில் நடக்கும் காளை சண்டைகளில் சிவப்பு நிறத் துணியை அசைக்கிறார்கள்’ என்ற சந்தேகம் வரலாம். பொதுவாக, சிவப்பு நிறம் என்பது வீரம், போராட்டம், ஆபத்து ஆகியவற்றைக் குறிப்பிட, மனிதர்களால் கற்பிதம் செய்யப்பட்டவை. மற்ற நிறங்களைவிட சிவப்பு நிறம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பளிச் எனத் தெரியும். காளைச் சண்டை நடக்கும் இடத்தில், பார்வையாளர்கள் அனைவருக்கும் எளிதாகத் தெரிவதற்காகவே அந்தத் துணியை காளையின் முன்பு ஆட்டி, மிரளவைக்கிறார்கள்.'

'மை டியர் ஜீபா... பாம்புகள் தங்கள் இரையை எவ்வாறு தேடுகின்றன?'

- கு.சிவப்ரியா, மயிலாடுதுறை.

மைடியர் ஜீபா

'பெரும்பாலான உயிரினங்களைப் போலவே, பாம்புகளும் வாசனை மூலம் இரையைத் தேர்ந்தெடுக்கும் ஓர் உயிரி. தவளை, எலி, முயல் போன்றவற்றிடம் இருந்து வெளிப்படும் வாசனையைக்கொண்டு அவற்றைக் கண்டறியும். பாம்புகளின் இரட்டை நாக்குகளில் சுரக்கும் வேதிப்பொருளின் மூலம், வாயின் மேல் அண்ணத்தை ஒட்டி இருக்கும் வொமேரோனசல் ஆர்கன் (vomeronasal organ) என்ற நுகர்ப்பொறி உறுப்புக்கு இரை பற்றிய செய்தி செல்லும். அது, அந்தச் செய்தியை மூளைக்குக் கடத்தும். உடனே பார்வையைக் கூர்மையாக்கி, இரையைத் தேடும். உதாரணமாக, பாம்புகளில் மிகவும் விஷத்தன்மை உடையது, ராஜ நாகம் (King Cobra). இது, சுமார் 300 அடிகளுக்கு அப்பால் இருக்கும் இரையின் அசைவையும் துல்லியமாகக் கண்டறிந்து, விரைந்துசென்று பிடிக்கும். இந்த ராஜ நாகம், வேறு வகைப் பாம்புகளையும் இரையாகக்கொள்ளும்.'

மை டியர் ஜீபா, சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு