Published:Updated:

திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!

க.பிரபாகரன்

'நாங்க இதுவரை செய்த விஷயங்களிலேயே இதைத்தான் ரொம்ப உயர்வா நினைக்கிறோம். நாங்க கற்ற கல்விக்கு ஓர் அர்த்தம் கிடைச்சிருக்கு' என்று நெகிழ்ச்சியான குரலில் சொல்கிறார்கள் அந்த மாணவர்கள்.

திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!

சென்னை, பெரம்பூரில் உள்ள கலிகி ரங்கநாதன் மான்ட்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அவர்கள், திருநங்கைகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்கள்.

'நாங்க, நண்பர்களோடு மைசூருக்கு டூர் போயிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போ, சில திருநங்கைகள் வண்டியில் இருந்தவங்ககிட்டே காசு கேட்டுட்டு இருந்தாங்க. அவங்களைப் பார்த்து சிலர் கேலியா, சிரிச்சுட்டு இருந்தாங்க. அது எங்களை ரொம்பவே பாதிச்சது. யாருமே ஆசைப்பட்டு பிச்சை எடுக்கிறது இல்லை. இவங்க பிச்சை எடுக்கக் காரணம், பிழைக்க வேறு வேலை இல்லாததுதான். இவங்களுக்கு நம்மால் முடிஞ்ச ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. எங்ககிட்ட பணம் இல்லை. ஆனால், எங்களோட கல்வி அறிவை ஷேர் பண்ணிக்கலாமே. அதன் முதல் கட்ட முயற்சிதான் இந்தக் கணினிப் பயிற்சி' என்றார் குழலினி என்ற மாணவி.

திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!

'எங்க யோசனையை டீச்சர், பிரின்ஸிபால்கிட்டே சொல்லி, அவங்க சம்மதத்துடன் செயலில் இறங்கினோம். எங்க கோஆர்டினேட்டர் பத்மஜா மிஸ், பெரம்பூரில் இருக்கும் திருநங்கைகள் உரிமைகள் சங்கத் தலைவி ஜீவா மேடத்துடன் பேசினாங்க. அவங்க, ஆர்வம் உள்ள 10 திருநங்கைகளைப் பயிற்சிக்கு அனுப்பிவெச்சாங்க' என்றார் ஹரி பிரசாத்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என, 10 நாட்கள் கணினியை இயக்கும் முறை, இணையத்தைப் பயன்படுத்தும் முறை, இமெயில் அனுப்பும் முறை, பவர்பாயின்ட், எக்ஸெல், வேர்டு டாக்குமென்ட் உருவாக்குவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எனப் பல விஷயங்களை 12 மாணவர்கள் கற்றுத்தந்தனர்.

இவர்களிடம், மாணவர்களாகிக் கற்றுக்கொண்ட அனுபவம் பற்றி பூரிப்புடன் சொன்னார்கள் திருநங்கைகள்.

திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!

''இந்த 10 நாளும் எங்களுக்குப் புரியும் வகையில ரொம்பப் பொறுமையா, அன்பா இந்தப் பிள்ளைங்க சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது. நாங்களும் மற்றவர்களைப் போல சரித்திரம் படைக்கத்தான் இந்த உலகில் பிறந்திருக்கோம். ஆனா, சமூகம் எங்களை முழுசா அங்கீகரிக்கத் தயங்குது. எங்களுக்கான கல்வி வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கு. மற்றவர்களை மாதிரி சுலபமாக ஒரு பயிற்சி வகுப்புக்குப் போய்விட முடியாது. இங்கே வர்றதுக்கு முன்னாடி, ஏதாவது தகவல் தெரிஞ்சுக்கக்கூட மத்தவங்க உதவியைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம். ஆனா, இப்போ கம்ப்யூட்டரில் பல விஷயங்களைத்  தெரிஞ்சுக்கிட்டோம். எனக்குத் தேவையான ட்ரெயின், பஸ் டிக்கெட்டை இனி நானே புக் பண்ணிப்பேன். எல்லாப் புகழும் இந்த குட்டி டீச்சர்களுக்கே' என்று பூரிப்புடன் சொன்னார், பயிற்சி பெற்ற திருநங்கை பிரசன்னா.

திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!

''கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற எந்தப் பயிற்சியைச் சொல்லித்தந்தாலும், கற்றுக்கொள்ள இவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில், இந்த மாணவர்களே ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தரப்போகிறார்கள். இவங்களை மேலும் ஊக்கப்படுத்த, பெரம்பூர் திருநங்கைகள் உரிமைகள் சங்கத்தின் தலைவி ஜீவாவுக்கு பள்ளி சார்பாக எங்கள் பள்ளியிலேயே கேம்பஸ் சூப்பர்வைசர் வேலை கொடுத்திருக்கோம்' என்றார் திருநங்கைகளை ஒருங்கிணைத்த பத்மஜா ராஜ்குமார்.

'இந்தியாவிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் முன்வந்து, திருநங்கைகள் சமூகத்துக்கு இதுபோன்று உதவ வேண்டும். அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து, வாழ்க்கையில் முன்னேறத் தூண்டுகோலாக இருக்க வேண்டும். திருநங்கைகள் நம்மைவிட்டு விலகி வாழ ஆசைப்படுவது இல்லை. நாம்தான் அவர்களை விலக்கிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் உள்ள அத்தனை திறமைகளும் இவர்களிடமும் இருக்கின்றன என்பதை இந்த 10 நாளில் தெரிஞ்சுக்கிட்டோம். இதுதான் எங்களுக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்' என்ற அந்த மாணவர்களின் குரலில் நெகிழ்ச்சி.  

படங்கள்: ச.ஹர்ஷினி, ரா.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு