Published:Updated:

மை டியர் ஜீபா

ஜெயசூர்யா, படம்: எம்.உசேன், மாடல்: லிபா

மை டியர் ஜீபா

ஜெயசூர்யா, படம்: எம்.உசேன், மாடல்: லிபா

Published:Updated:

'நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது ஜீபா?'

 ச.நவீன்குமார், சூலூர்.

'நமது பூமியின் மேற்பரப்பு, பல அடுக்குத் தட்டுகளால் ஆனது. ஒரு தட்டின் தடிமன், 80 கி.மீ அளவுகூட இருக்கும். இதன் அடிப் பகுதிப் பாறைகள், கொதிக்கும் குழம்பாக இருக்கும். பூமியின் சுழற்சி வேகத்தில், இந்தப் பாறைக் குழம்பு இடம்பெயரும். இதனால், மேலே இருக்கும் தட்டுகள், ஒன்றுடன் ஒன்று உராய்வுடன் நகர்ந்து செல்லும். நகரும் தட்டுகளின் உராய்வினால் உண்டாவதே, பூகம்பம். நிலநடுக்கத்தின் அதிர்வுகள், நிலநடுக்கப் பதிப்புக் கருவியால் (Seismometer) அளவிடப்பட்டு, எத்தனை ரிக்டர் என்று கணக்கிடப்படுகிறது. 7.5 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள், சுனாமியை ஏற்படுத்தும்.'  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மை டியர் ஜீபா

 'ஹாய் ஜீபா... டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன? டெல்லி பற்றி கொஞ்சம் சொல்லேன்'

பூபேஷ், ஸ்ரீராமகிருஷ்ண  தபோவனம்.

'நமது நாட்டின் தலைநகரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறாயா பூபேஷ். இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிசெய்தபோது, கொல்கத்தாதான் தலைநகராக இருந்தது. 1911-ம் ஆண்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்தான் தலைநகரை டெல்லிக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்தார். அந்த ஆண்டே அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய நகரமாக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயக் கட்டடக்கலையில் நிபுணர்களான எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் (Edwin Lutyens and Herbert Baker) மேற்பார்வையில், கட்டுமானப் பணிகள் நடந்தன. 1927-ல், 'புது டெல்லி’ என்று பெயர் சூட்டப்பட்டது. 1931 பிப்ரவரி 13-ல், பிரிட்டிஷ் அரசின் தலைமை ஆளுநர் இர்வின் பிரபுவால் தொடங்கிவைக்கப்பட்டது. டெல்லி என்று பெயர் வந்ததற்கு பலவிதக் காரணங்கள் கூறப்படுகின்றன. மெளரிய வம்சத்தில் டில்லு அல்லது டிலு எனும் பெயரில் மன்னர்கள் ஆண்டதால், 'டில்லு’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவியில் 'டெல்லி’ என்று ஆனதாகக் கூறுவர். ராஜபுத்திர அரசர்கள் காலத்தில், இந்தப் பகுதியில் புழங்கிய நாணயத்தின் பெயர், தெஹ்லிவால். அதனால், 'தில்லிக்கா’ எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்டது என்றும் சொல்வார்கள்.'

மை டியர் ஜீபா

 ''இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், நைட்ரஜன் காற்றை நிரப்புவதால் என்ன பயன் ஜீபா?''

ஏ.கே.நிராஜ் வர்மா, ஆத்தூர்.

''இரண்டு முக்கியமான பயன்கள் இருக்கின்றன நிராஜ். ஒன்று, நைட்ரஜனை நிரப்புவதால் அதிக நாட்கள் வரை காற்று குறையாது. இன்னொன்று, பயணத்தின்போது டயர் சுலபத்தில் சூடாகாது. அளவு குறைவாக இருக்கும்.''

மை டியர் ஜீபா

 'டியர் ஜீபா... முகம் பார்க்கும் கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்கும்போது, அப்படியே காட்டுகிறது. ஆனால், எழுத்துகளைக் காட்டும்போது மட்டும் வலம் இடமாகக் காட்டுகிறதே ஏன்?'

ஏ.எம்.ரிஸ்னா, கீழக்கரை இராமநாதபுரம்.

'முகம் பார்க்கும் கண்ணாடி, ஒரு சமதள ஆடி வகையைச் சார்ந்தது. அதில் நம்மைப் பார்க்கும்போது, வலம் இடம் மாற்றித்தான் காட்டும். ஒரு  ஐஸ்க்ரீமை வலது கையில் வைத்துக்கொண்டு பார்த்தால், இடது கையில் ஐஸ்க்ரீம் வைத்திருப்பதாகக் கண்ணாடி காட்டும். ஏனென்றால், சமதள ஆடியில் ஏற்படும் பிம்பம் மாய பிம்பம். பொருளின் மேல் விழும் ஒளி பிரதிபலித்து, ஆடியின் மேல் விழுகிறது. அது, படுகதிர்கள் (incidental rays) எனப்படும். அவை ஆடியில் பட்டு பிரதிபலித்துச் சிதறும். விலகு கதிர்கள் (refracted rays) கண்ணாடியில் பட்டுத் திரும்பும் இடத்தில்தான் மாய பிம்பம் (virtual image) ஏற்படும். பிரதிபலிக்கும் கதிர்கள் (reflected rays) ஒன்றையொன்று வெட்டித் திரும்புவதால்தான், இந்த இட வல மாற்றம் ஏற்படுகிறது.''

 'டியர் ஜீபா... விராட் கோஹ்லி பற்றி சிறப்பான விஷயத்தை சொல்ல முடியுமா?'

ஐ.பாலமுருகன், சோமனூர்.

மை டியர் ஜீபா

''செய்யும் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபடும் வீரர்களில் விராட் கோஹ்லி ஒருவர். தில்லியில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட் வீரர் ஆவது லட்சியம். 2006 ரஞ்சிப் போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக, அவரது டெல்லி அணியின் பிற வீரர்கள் மோசமாக விளையாடிக்கொண்டிருந்தனர். மூன்றம் நாள் அணியை மீட்கும் பெரும் பொறுப்பு இவரிடம் இருந்தது.  ஆனால், அன்று விடியற்காலையில்  கோஹ்லியின் அப்பா பிரேம்நாத் இறந்துவிட்டார். கோஹ்லி வீட்டுக்குச் செல்லாமல், மைதானத்துக்குள் நுழைந்தார். 90 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகே, அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் பிடிப்பு இந்த மன உறுதியை தந்தது. 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் தலைவராக சென்று, கோப்பையைத் தட்டிவந்தார். அதே ஆண்டில் இந்திய அணிக்குத் தேர்வானது முதல், தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். 2011 உலகக் கோப்பையில் இவர் அடித்த சதம் அனைவரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது.    2012-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை 320 ரன்களை  குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில், கவுதம் கம்பீரோடு இணைந்து, 86 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 21 சதம், டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களையும் குவித்து, அசத்திவரும் கோஹ்லி, டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism