Published:Updated:

அதிரடி நாயகன்

வெய்ட்டான சாம்பியன்செ.சல்மான், பா.காளிமுத்து

அதிரடி நாயகன்

வெய்ட்டான சாம்பியன்செ.சல்மான், பா.காளிமுத்து

Published:Updated:

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை என்னோட உயரக் குறைபாட்டை நினைச்சு ரொம்ப காம்ப்ளக்ஸில் இருந்தேன் அங்கிள். இந்த வெற்றி, எனக்கு தன்னம்பிக்கை கொடுத்திருக்கு” என உற்சாகமாக வரவேற்கிறார் அப்ருதீன்.

மதுரை, தியாகராசர் நன்முறை மேல்நிலைப்  பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அப்ருதீன், 13 வயதுக்குரிய சராசரி எடை மற்றும் வளர்ச்சி இல்லாதவர். தூத்துக்குடியில் நடந்த மாநில டேக்வாண்டோ (Taekwondo) போட்டியில், 18 கிலோ எடைப் பிரிவில், முதல் பரிசு பெற்றுள்ளார்.

அப்ருதீனின் உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார், ‘‘அப்ருதீன், ஆறாம் வகுப்பிலிருந்து இங்கே படிக்கிறார். ரெண்டு வயதுக்குப் பிறகு வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டிருக்கு. ஏழ்மையான குடும்பம். தங்களால் முடிந்த வரை மருத்துவம் செய்துட்டு விட்டுட்டாங்க. மத்தப் பசங்க கிண்டல் செய்வாங்கன்னு பள்ளிக்கூடம் வர்றதுக்கே தயங்கினவரின் தாழ்வுமனப்பான்மையை நீக்க, பள்ளி நிர்வாகமே கராத்தே பயிற்சியில் சேர்த்தது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிரடி நாயகன்

‘‘கராத்தே கிளாஸ்ல மத்தப் பசங்களைப் பார்த்ததும், ‘கராத்தேயும் வேணாம், ஒண்ணும் வேணாம். என்னை விட்டுருங்க சார்’னு அழுதேன். பி.டி.சாரும் ஹெட் மாஸ்டரும்தான் ‘கூச்சப்படுறதை விடு. உன்னால எதையும் செய்ய முடியும்’னு சொன்னாங்க. மத்தப் பசங்களும் உற்சாகப்படுத்தினாங்க. சின்சியரா பயிற்சி எடுத்து, போட்டிகளில் பரிசு வாங்கினேன்” என்று முகம் நிறையச் சிரிப்புடன் சொல்கிறார் அப்ருதீன்.

எட்டாம் வகுப்பு வந்ததும் டேக்வாண்டோ பயிற்சிக்கு ஊக்கப்படுத்தியிருக்கிறார் அசோக்குமார். ‘‘காரணம், மற்ற வகைப் போட்டிகளில் வயது அடிப்படையில்தான் கலந்துக்க முடியும். டேக்வாண்டோவில் அந்தந்த எடைக்குள் மோதுவாங்க. இடுப்புப் பகுதிக்கு மேல தாக்கணும், கால்களை மட்டும்தான் பயன்படுத்தணும். காலால் முகத்தில் அடிச்சு, ஒரு நிமிடத்துக்குள் 10 புள்ளிகள் எடுக்கலாம். அவ்வளவு வேகமான ஆட்டம். அப்ரூதீன் நம்பிக்கையோடு பயிற்சி எடுத்தார். எட்டு மாதத்திலேயே வேகமாகவும் நுணுக்கமாகவும் கத்துக்கிட்டார்” என்றார்.

அதிரடி நாயகன்
அதிரடி நாயகன்

‘‘மண்டல அளவில் ஜெயிச்சதும், ‘ச்சே... இதுக்கா இவ்வளவு பயந்தோம்... இனிமே பின்னிடுவோம்’னு மாநிலப் போட்டிக்கு பெயர் கொடுத்தேன். வீட்டில் பயந்தாங்க. பி.டி.சார்தான் அவங்களைத் தைரியப்படுத்தினார். போட்டியில் ஜெயிச்சதைவிட சந்தோஷமான விஷயம், பல பேருக்கு ஆறு பிரிவில் போட்டிகள் நடந்துச்சு. என்னோட போட்டிதான் கடைசி. ஒரு போட்டி முடிஞ்சதும் அவங்க எல்லாம் கிளம்பிடுவாங்க. ஆனா, என் போட்டிக்காக எல்லோருமே இருந்தாங்க. கை தட்டி உற்சாகப்படுத்தினாங்க. அதை மறக்கவே முடியாது. அழுகையே வந்துடுச்சு” என்றபோது, கண்கள் கலங்கின.

அப்ருதீனின் குடும்பம், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறது. அப்ருதீனின் அப்பா இஸ்மாயில், கேரளாவில் வேலை செய்கிறார். ‘‘எங்களுக்கு மூணு பிள்ளைங்க. மூத்தவன் அப்ருதீன். ஆறாவது படிக்கும் இவன் தங்கச்சிக்கும் வளர்ச்சி குறைபாடு இருக்கு. விலை உயர்ந்த மருந்துகளை வாங்கிக்கொடுக்க வசதி இல்லை” என்கிறார் அப்ருதீனின் அம்மா.

அதிரடி நாயகன்

பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில் அரசு, ‘‘58 வருடங்களாக இந்தப் பள்ளியை நடத்தி வருகிறோம். ஏழைப் பிள்ளைகளின் கல்வி மற்றும்  விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். அப்ருதீன், எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது பெருமை’’ என்று அப்ருதீனின் தலையை வருடுகிறார்.

‘‘நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு அங்கிள். சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துக்கிட்டு பரிசு வாங்கி, ஸ்கூலுக்குப் பெருமைச் சேர்த்து, என்னைப் போல இருக்கிறவங்களுக்கு, ரோல் மாடலா இருக்கணும்” என்ற அப்ருதீனின் குரலில் ஒலித்தது நம்பிக்கை.

தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி!
 

மதுரை, தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி, 1957-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் தாளாளர், மாணிக்கம் ராமசாமி. ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைகள், இலவச ஸ்மார்ட் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. பள்ளியின் மற்றொரு சிறப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்கள், அனைத்து மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்பது. பார்வைக்குறைபாடு மாணவர்களுக்கு ப்ரெயில் முறை வகுப்புகள் நடந்தாலும், மற்ற மாணவர்களுடன் வகுப்புகளில் அமர்ந்து செவி வழியேயும் கற்கின்றனர். ஐஎஸ்ஓ 9001 - 2008 விருதையும் இந்தப் பள்ளி பெற்றுள்ளது.

அதிரடி நாயகன்

``வயதுக்கேற்ற உயரம் குறைவதற்கும் பல காரணங்கள் உள்ளன. மரபணுக்கள் ரீதியான (Genetic) குறைபாடு, வளர்ச்சிக்கான நாளமில்லாச் சுரப்பிகளின் (Growth harmons) குறைபாடு மற்றும் எலும்பு வளர்ச்சிக் குறைபாடு போன்றவை அவற்றில் முக்கியமானவை.  உறவுமுறையில் திருமணம் நடைபெறும்போது, மரபணு பிரச்னையால் நான்கில் ஒரு குழந்தைக்கு குறைபாடு வரலாம். இதற்கு, மருத்துவ சிகிச்சை பெரிய அளவில் இல்லை. மூளையில் சுரக்கும் உயரத்துக்கான ஹார்மோன்கள் குறைந்தாலும் வளார்ச்சி தடைபடும். வளர்ச்சிக்கான ஹார்மோன்களை ஊசியை 10, 12 வருடங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பதும், எலும்புகளின் வளர்ச்சிக் குறைபாட்டாலும், குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். அப்ருதீனுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. விலை அதிகமான இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால், இந்தக் குறைபாட்டை நீக்கலாம். சாதனை படைத்த அப்ருதீனுக்கு வாழ்த்துகள்!’’ என்கிறார், காஞ்சி காமாட்சி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பிகள் நிபுணர், டாக்டர் கே.ஜி.ரவிகுமார்.

- மித்ரா

 

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism