Election bannerElection banner
Published:Updated:

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘பரீட்சை பரபரப்பிலும் என்னைப் பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி பசங்களா!’’ என்றார் மாயா டீச்சர்.

‘‘நீங்க திடீர்னு கிளம்பி ஒரு மாசம் வெளிநாடு போயிட்டீங்க. இப்போதான் வந்திருக்கீங்க. நாங்களும் பரீட்சைனு வராம இருந்தா, அப்புறம் எல்லோரையும் மறந்துடுவீங்களே’’ என்று குறும்புடன் சொன்னாள் கயல்.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘நான் உங்களை மறப்பேனா? எல்லோருக்கும் பரிசு இருக்கு. போகும்போது கொடுக்கிறேன். இப்போ, பழம் சாப்பிடுங்க’’ என்று கிண்ணம் நிறைய திராட்சைகள் கொடுத்தார் டீச்சர்.

‘‘நானும் ஃபேமிலியோடு போன வாரம் கோயம்புத்தூர் பக்கத்திலே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன் டீச்சர். அங்கே இருந்த  திராட்சைத் தோட்டத்தில், பழங்கள் ரொம்ப இனிப்பா இருந்துச்சு’’ என்றாள் ஷாலினி.

ஒரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட கதிர், ‘‘ஒரு வாரமா இதையேதான் சொல்லி, எங்களை வெறுப்பேத்திட்டு இருக்கா டீச்சர். நீங்க வந்ததுமே, மந்திரக் கம்பளத்தில் திராட்சைத் தோட்டத்துக்கு விசிட் பண்ணணும்னு இருந்தோம். அதை ஞாபகப்படுத்துற மாதிரி நீங்களும் திராட்சையைக் கொடுக்கிறீங்க” என்றான்.

‘‘ஆமா! நானும் ஒரு மாசமா சும்மாவே இருந்து, சோம்பலா இருக்கு. எப்பேர்ப்பட்ட அறிவாளியா இருந்தாலும், இயங்கிட்டே இருக்கணும். சும்மா இருந்தா, சோம்பேறி ஆகிடுவான்.  இதோ பாருங்க, என் மேலே எவ்வளவு தூசி’’ என்று தன்னை உதறியபடி வந்தது மந்திரக் கம்பளம்.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘பாவம் கம்பளம். விரக்தியில் தத்துவம் பேச ஆரம்பிச்சுடுச்சு. அதன் ஏக்கத்தைப் போக்குவோம்’’ என்றான் அருண்.

எல்லோரும் ஏறிக்கொண்டதும் உற்சாகமாகப்  பறந்தது. டீச்சர் பேசத் தொடங்கினார். ‘‘ஆதி காலம் முதலே காடுகளில் விளைந்த திராட்சையை மனிதன்  சாப்பிடப் பயன்படுத்தி இருக்கணும்னு சொல்றாங்க. 2,000 வருடங்களுக்கு முன்பே, திராட்சையை ஊறவைத்து, பழச்சாறும் ஒயின் என்கிற மதுபானமும் தயாரிச்சு இருக்காங்க. திராட்சை, ‘விட்டிஸ்’ (Vitis) என்ற தாவரப் பேரினத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர், விட்டிஸ் வினிஃபெரா (Vitis vinifera). சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உலகம் முழுக்க 76,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு திராட்சை பயிராகுது’’ என்றார்.

‘‘அவ்வளவு திராட்சையும் சாப்பிடத்தான் பயன்படுத்துறாங்களா?’’ என்று கேட்டாள் கயல்.

‘‘இல்லை கயல். அதில், சுமார் 27 சதவிகிதம்தான் நேரடியாகச் சாப்பிடப்படுது. 71 சதவிகிதம் திராட்சைகள் ஊறவைக்கப்பட்டு, ஒயின் தயாரிக்கப் பயன்படுது. 2 சதவிகிதம், உலரவைக்கப்பட்டு, உலர் திராட்சையாகப் பயன்படுத்தப்படுது’’ என்றார் டீச்சர்.

அவர்கள், ஒரு திராட்சைத் தோட்டத்தில் இறங்கினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் கொத்துக்கொத்தாகத் திராட்சைகள் தொங்கிக்கொண்டிருந்தன.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘திராட்சைகள் எத்தனை நிறங்களில் கிடைக்குது?’’ எனக் கேட்டான் கதிர்.

‘‘கறுப்பு, அடர் நீலம், இளஞ் சிவப்பு, மஞ்சள், இளம் பச்சை எனப் பல நிறங்களில் இருக்கு. வெள்ளை நிறத் திராட்சை எனப்படும் இளம் பச்சை திராட்சை, சிவப்புத் திராட்சையின் மரபணு மாற்றத்தில் உருவானது. ஆஃப்கானிஸ்தானில் விளையும் திராட்சைதான் உலகிலேயே ரொம்ப இனிப்பானது என்று சொல்வாங்க. நம்ம நாட்டில் பன்னீர் திராட்சையும் காஷ்மீர் திராட்சையும் ரொம்ப இனிப்பானது. கோயம்புத்தூர் பகுதிக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பன்னீர் திராட்சை பயிராகுது. மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் திராட்சைத் தோட்டங்கள் நிறைய இருக்கு’’ என்றார் டீச்சர்.

கயல், ஒரு கொத்து திராட்சையைக் கொடியிலிருந்து பறித்தபடி, ‘‘இதை எப்படிப் பயிரிடுவாங்க?” என்று கேட்டாள்.

‘‘வெப்பம் மிகுந்த வளமான மண் பகுதியில்  பதியன் மற்றும் விதை மூலம் பயிரிடுவாங்க. திராட்சைக் கொடி படர்வதற்காக, கற்களை ஊன்றி, கம்பிகளால் பந்தல் மற்றும் குச்சிகளால் அமைப்பாங்க. இதுக்காக, ஓர் ஏக்கருக்கு மூன்று லட்சம் வரைக்கும் செலவாகும். திராட்சைக் கொடி வளர்ந்து, பந்தல் மீது படர ஆரம்பிச்சதும், கவாத்து பண்ணுவாங்க” என்றது மந்திரக் கம்பளம்.

‘‘கவாத்துனா?” என்று கேட்டான் அருண்.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘வளரும் செடிகளின் முனைகளை, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வெட்டுவதைத்தான் கவாத்துனு சொல்வாங்க. அப்படி செய்தால்தான், இன்னும் நன்றாக கிளைகளைப் பரப்பி வளரும். இல்லைனா, குறிப்பிட்ட அளவோடு வளர்ச்சி நின்னுடும். ரோஜா, கறிவேப்பிலை எனப் பல பயிர்களை இப்படித்தான் கவாத்து பண்ணுவாங்க. திராட்சையில் இந்தக் கவாத்து வேலை முடிஞ்சதும், இரண்டு முறை நரம்பு கிள்ளுதல், பிஞ்சு கட்டுதல் எனப் படிப்படியா நிறைய செய்யணும். மூன்று மாசம் கழிச்சு, திராட்சை விளையும். அந்த நேரத்தில், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, மருந்துக் கரைசலில் முக்கி எடுப்பாங்க. திராட்சை மேலே வெள்ளையா, திட்டுத்திட்டா இருக்கிறது அந்த மருந்துதான். அதனால்தான், திராட்சையை வாங்கினதும் நல்லா கழுவிட்டுச் சாப்பிடணும்” என்றார் மாயா டீச்சர்.

‘‘எல்லாம் முடிஞ்சு, திராட்சை செழிப்பா வளர்ந்ததும் கூலிக்கு ஆட்களை வெச்சு முனை வெட்டு வெட்டுவாங்க. இவ்வளவு செலவு செய்து விளைவிக்கும் திராட்சைக்கு, சில சமயம் சரியான விலை கிடைக்காமல், செய்த செலவைவிட குறைஞ்ச வருமானமே கிடைக்கும்’’ என்று வருத்தமான குரலில் சொன்னது  மந்திரக் கம்பளம்.

‘‘வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பழம், திராட்சை. குடல் புண், மலச்சிக்கல், இதயக் கோளாறு போன்றவற்றுக்கு திராட்சை நல்லது’’ என்றார் டீச்சர்.

‘‘பழமாகச் சாப்பிடும் திராட்சையைவிட, உலர் திராட்சையில் சத்து அதிகம்னு சொல்றாங்களே’’ என்றாள் ஷாலினி.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

‘‘ஆமாம். தினமும் 10 உலர் திராட்சைகள் சாப்பிட்டால், உடம்பு ஆரோக்கியமா இருக்கும். இதில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து, எலும்பு வளர்ச்சிக்கு உதவும். பற்களை வலுப்படுத்தும். வளரும் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் உலர் திராட்சையை பாலில் போட்டுக் காய்ச்சி, குடிக்கத் தரலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை குறையாமல் பார்த்துக்கும். ரத்தம் உடம்பு முழுக்க சீராகப் பாயும். சோம்பலாக இருக்கிறவங்க உலர் திராட்சையைச் சாப்பிட்டால், சுறுசுறுப்புக் கிடைக்கும்’’ என்றது கம்பளம்.

‘‘அதே நேரம், ஓய்வைக் கொடுக்கும் திறனும் உலர் திராட்சையில் இருக்கு. இரவில் சரியான தூக்கம்  இல்லாமல் தவிக்கிறவங்க, கொதிக்கும் பாலில் உலர் திராட்சையைப் போட்டு வடிகட்டிக் குடிச்சா, நல்லா தூக்கம் வரும். பரீட்சை நேரமான இப்போ, இரவில் ஆழ்ந்து தூங்கினால்தான், காலையில் புத்துணர்ச்சியோடு படிக்கலாம். குடல் புண் ஆறவும், இதயத் துடிப்பு சீராக இருக்கவும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேவையானது, உலர் திராட்சை’’ என்றார் டீச்சர்.

‘‘அப்படினா, நானும் தினமும் உலர் திராட்சை சாப்பிடப்போறேன்’’ என்றாள் கயல்.

‘‘கடையிலிருந்து வாங்கி வந்ததும் அப்படியே எடுத்துச் சாப்பிடாதே கயல். திராட்சையை, உலர் திராட்சையாக மாற்ற, சில ரசாயன அமிலங்களைப் பயன்படுத்துறாங்க. அதனால், தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊறவிட்டு, அலசிட்டு சாப்பிடுறதுதான் நல்லது. அதே மாதிரி சளி பிடிச்ச சமயத்தில் சாப்பிடக் கூடாது. இருமல், காச நோய், வாத நோய் இருக்கிறவங்களும் திராட்சையைச் சாப்பிடக் கூடாது’’ என்றது கம்பளம்.

உற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...

பேசிக்கொண்டே அந்தத் தோட்டத்தைத் சுற்றிவந்தார்கள். அப்போது, திராட்சையைப் பறிப்பதற்காக கூலி ஆட்கள் வந்தார்கள். அவர்கள் திராட்சையைப் பறிக்கும் வேகம் மற்றும் லாகவத்தை சற்று நேரம் கவனித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

கே.யுவராஜன்

பிள்ளை

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு