Election bannerElection banner
Published:Updated:

ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்!

ஜிம்னாஸ்டிக்ஸ் தங்கங்கள்

வில்லாக வளைந்து, அம்பு போல அந்தரத்தில் பாய்ந்து, மின்னலாக வந்து நின்று சிரிக்கிறார்கள் அவர்கள். சில நிமிடங்களில் ஒரு சர்க்கஸ் பார்த்த பிரமிப்பு. உடலை ரப்பராக வளைக்கும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில், தமிழ்நாட்டின் நம்பிக்கைத் தங்கங்கள்.

‘‘தம்பி பேரு நிஷாந்த். ஜிம்னாஸ்டிக் சப்-ஜூனியர் பிரிவில், தமிழகத்தின் முதல்நிலை வீரர். மாவட்ட அளவில் 11 தங்கம், மாநில அளவில் 4 தங்கம், தேசிய அளவில் 1 தங்கம் உட்பட, நிறையப் பதக்கங்களை வென்றிருக்கிறார்” என்று பெருமையுடன் அறிமுகம் செய்கிறார், பயிற்சியாளர் சையத் இப்ராஹிம்.

ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்!

‘‘நான், ஏழாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயசுல இருந்தே, டிவி-யில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை  விரும்பிப் பார்ப்பேன். கோவையில் அடிக்கடி சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கும். அதுக்கு கூட்டிட்டுப் போகச்சொல்லி வீட்டுல அழுது, ரகளை பண்ணுவேன். ஒவ்வொரு வருஷமும் ஐந்து முறையாவது பார்த்துடுவேன். சர்க்கஸில் எனக்குப் பிடிச்சது, அந்தரத்தில் செய்யும் சாகசங்கள்தான். எப்படி கீழே விழாம, சாகசம் பண்றாங்கனு யோசிப்பேன். ‘கரணம் தப்பினால் மரணம்’னு தெரிஞ்சும் விளையாடும் அவங்க வீரத்தை நினைச்சு ஆச்சர்யப்படுவேன். அப்படித்தான் ஜிம்னாஸ்டிக் மேலே ஆர்வம் வந்தது” என்று சாகசத்தின் முன் கதையைச்  சொன்னார் நிஷாந்த்.

ஜிம்னாஸ்டிக்கில் ஆண்களுக்கு... ஃப்ளோர் (Floor), வால்ட் (Vault), ரோமன் ரிங்ஸ் (Roman Rings), பேரலல் பார்ஸ் (Parallel Bars), ஹரிசான்டல் பார்ஸ் (Horizontal Bars), போம்மெல் ஹார்ஸ் (Pommel Horse) என ஆறு வகை உண்டு.

‘‘காமன்வெல்த் போட்டியில் கோல்டு மெடல் வாங்கிய ஆஷிஸ் குமார்தான் என்னோட ரோல்மாடல். ஜிம்னாஸ்டிக் பிரிவில், இந்தியா இதுவரைக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலை.  அந்தக் குறையை முறியடிச்சு, இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை” என்கிறார் நிஷாந்த்.

ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்!

‘‘ஜிம்னாஸ்டிக் விளையாடுவதால், ரத்த ஓட்டம் சீராகக் கிடைக்கும். உடம்பும் மனதும் எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கும்” என ஜிம்னாஸ்டிக்  பயன்களை விளக்கியவாறு வந்தார் ஷிபாஃனா.

கோவை, சி.எஸ்.ஐ.மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஷிபாஃனா, தமிழக மகளிர் சப்-ஜூனியர் பிரிவின் முதல்நிலை வீராங்கனை.   மாவட்ட அளவில் 6 தங்கம், மாநில அளவில் 2 தங்கம் வென்றவர்.

ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்!

‘‘ஜிம்னாஸ்டிக்கில் பெண்களுக்கு... ஃப்ளோர் (Floor), வால்ட்(Valt), அன்னீவன்் பார்ஸ் (Unneven Bars), பேலன்ஸிங் பீம்ஸ் (Balancing Beams) என நான்கு வகைகள் இருக்கு. இதில், அன்னீவன் பார்ஸ் வகை ரொம்ப ஜாக்கிரதையா செய்யணும். ஜிம்னாஸ்டிக் செய்யும்போது முக்கியமான விஷயம், வேகம்தான். தொடர்ச்சியான பயிற்சி இருந்தால்தான் ஜெயிக்க முடியும். என்னோட அம்மாதான் என்       கூடவே இருந்து, உதவுவாங்க. மாநில அளவில் தங்கம் வாங்கியதும், அந்த மெடலை அம்மாவோட கழுத்துல போட்டு அழகு பார்த்தேன்’’ என்று அம்மாவை அணைத்துக்கொள்கிறார் ஷிபாஃனா.

தமிழக சப்-ஜூனியர் பிரிவின் இரண்டாம் நிலை வீரர் நெளஃபீத், ஏழாம் வகுப்பு படிக்கிறார். மாவட்ட அளவில் 5 தங்கமும் மாநில அளவில் ஒரு தங்கமும் வென்ற சுட்டி ரப்பர் பாய்.

‘‘ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு அடிப்படையான விஷயம், அப்ஸ்டார்ட்ஸ் (upstarts). அதாவது, பீம்  மேலே ஏறி, தம்புள்ஸ் எடுப்பது. இதனால், கைகளுக்கு அதிகமான பவர் கிடைக்கும். நிறைய ரவுண்ட் கம்பியில் சுத்த முடியும். காற்றில் தலைகீழாக  நிற்க முடியும்” என்று தன் பங்குக்கு ஜிம்னாஸ்டிக் பற்றி பேசினார்.

இவர்களின் பயிற்சியாளர் சையத் இப்ராஹிம், ‘‘சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஜிம்னாஸ்டிக்தான் பெரிய விளையாட்டு. அங்கே,   மூன்று வயதிலேயே பயிற்சிக்கு அனுப்பிடுவாங்க.  உடம்பை வளைக்கிறதைப் பார்த்தாலே நடுங்குவாங்க. சரியான பயிற்சியும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியும் இருந்தால், நம்ம உடம்பு நாம் சொல்லும் எதையும் செய்யும். ‘கடுகுக்குள் கடலைப் புகுத்தலாம்’னு சொல்ற மாதிரி, நம்ம உடம்பையும் புகுத்தலாம்” என்று சிரிக்கிறார்.

ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்!

ஜிம்னாஸ்டிக்ஸ் தங்கங்களான மூவரும் அவர்களது உள்ளங்கைகளைக் காண்பித்தபோது, அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், உள்ளங்கைகளில் தோல் உறிந்து, லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ‘‘ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் இப்படித்தான் ஆகும். பவுடர் போட்டால் சரியாகிடும். இதுக்குப் பயந்து, விளையாடுறதை விட்டோம்னா, எதுவுமே செய்ய முடியாது. வலிகளைத் தாங்கினால்தானே வெற்றிகளைச் சந்திக்க முடியும்” என்று சிரித்தார்கள்.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு